அடிப்படை கல்விக்கு
வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை
மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இவை முறையாக
செயல்படுத்தப்பட்டால், அவர்கள் கொத்தடிமைகளாக உருவாகும் நிலை
தடுக்கப்படலாம்.
பள்ளி செல்லும்
வயதில், வேலைக்கு செல்லும் சிறுவர்களை மீட்கவே, குழந்தை தொழில் முறை
ஒழிப்பு திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் மீட்கப்படும் சிறுவர்களை,
குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் ஒப்படைத்து, பாதுகாப்பான தங்குமிடம்,
உணவு, பள்ளி செல்லும் வாய்ப்பு என பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இருப்பினும், வெளி
மாநிலத்தவர் வருகையால், குழந்தை தொழிலாளர் முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க
முடியாத சூழலே நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட
குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டம், இரு ஆண்டுகளாக பணிகளை துவக்கியுள்ளது.
நகரின்
மையப்பகுதிகளில் மீட்கும் சிறுவர்களை தனியாகவும், கிராமப்புற பகுதிகளில்,
கொத்தடிமைகளாக வேலை செய்த சிறார்களை தனியாகவும், மீட்டு ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட தொழிலுக்காக, வெளி மாவட்டம், மாநிலங்களில்
இருந்து வரவழைக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது ஆய்வுகளில்
தெரியவந்தது.
இச்சிறுவர்களை
மீட்டு, முறைசார் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைத்தாலும், மீண்டும் பழைய
தொழிலுக்கே திரும்பிவிடுகின்றனர். இதைத்தடுக்க, குறிப்பிட்ட தொழில்
செய்யும் பகுதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுந்தராபுரம்,
காந்திநகர் பகுதிகளில், கட்டட தொழிலுக்காகவும், தொண்டாமுத்தூர்
வட்டாரத்தில், பாக்கு தொழிலுக்கும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில்
தோட்ட வேலைக்கும், கணுவாய் பகுதியில் செங்கல் சூளை வேலைக்காகவும்,
குடும்பம் குடும்பமாக, பீகார், ஒரிசா, அசாம் மக்கள் வந்து தங்கியுள்ளனர்.
அவர்களது
குழந்தைகளில் பெரும்பகுதியினர், அடிப்படை கல்விகூட பெறுவதில்லை. அவர்களது
நலனுக்காக, கடந்தாண்டு காந்தி நகரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள்
அடிப்படை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பாண்டில் தொண்டாமுத்தூரில்
சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...