'இன்னும் சில
ஆண்டுகளில், மனிதனால் முடியாது என, மலைத்து நின்ற அத்தனை செயல்களும்,
விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிக்கப்படும்' என கூறும்
இவர்களுக்கு, இளம் படைப்பாளிகளுக்கான உலகத்தில் நிச்சயமான இடம் உண்டு.
'பிஞ்சு மனம், பஞ்சு விரல் கொண்ட இவர்களால் என்ன செய்ய முடியும்?' என்ற
கேள்வியோடு நோக்கிய நம்மை, 'விரலிடுக்கில் வித்தைகளை ஒளித்துள்ளோம்,
வீரியத்தை பாருங்கள்' என, உணர்த்தினர். இடம்: எஸ்.பி.ரோபோடிக்ஸ், ரோபோ
தயாரிப்பு பயிற்சி மையம், கே.கே.நகர். உணர்த்தியவர்கள்: எட்டு முதல் 15
வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
ஒரு கணினி, சில
'ஒயர்'கள், 'பேட்டரி'கள், 'நட்டு போல்டு'கள், மின்னணு உதிரி பாகங்கள் என,
எடுத்துக்கொண்டு அமர்ந்தனர். சிறிது நேர விரல் வித்தைகளுக்கு பின், அந்த
பொருட்களின் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு உடலாக உருமாறியது. கணினிக்கும்,
அந்த உடல்களுக்கும் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு, 'ரிமோட்' மூலம்
இயக்கப்பட்டன. அவை, கட்டளைகளுக்கேற்ப நடக்க, ஓட, மோத தயாராயின. ஆம்... அவை
அத்தனையும் ரோபோக்கள்.
எப்படி துவங்கியது?
''இவங்க செய்ற இந்த
ரோபோக்களை, பொறியியல் பட்டதாரிகளால கூட செய்ய முடியாது. காரணம், அவங்களை
விட, இவங்க அதிகமா சிந்திக்கிறாங்க, தேடுறாங்க, முயற்சி செய்றாங்க, தோற்று
தோற்று ஜெயிக்கிறாங்க'' என கூறினார், அந்த சிறுவர்களுக்கு எந்திரவியல்
பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியர். ''இந்த பையன், இன்னும் சில ஆண்டுகள்ல,
மிகப்பெரிய, கம்ப்யூட்டர் புரோகிராமரா வருவான். அந்த பையன், மிகப்பெரிய
மெக்கானிக்கல் இன்ஜினியரா வருவான். இதோ...இவன், நல்ல டிசைனரா வருவான்,''
என, தம், மாணவர்களை அடையாளங்காட்டி கூறினார், அந்த பயிற்சி மையத்தின்
நிறுவனர்களில் ஒருவரான பிரணவன். ''ரோபோக்களை உருவாக்கும் இந்த மாணவர்கள்,
பள்ளி, தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என, எங்கிலும் நடக்கும்
புதிய கண்டு பிடிப்புக்கான போட்டிகளில் தம்மை விட பெரியவர்களுடன்
போட்டியிட்டு வென்றிருக்கின்றனர்,'' என, பெருமையோடு கூறினார், மற்றொரு
நிறுவனர் சிறிநவ சுதர்சன்.
ரோபோடிக் பயிற்சி
மையம் துவங்கப்பட்டது குறித்து, அவர் கூறியதாவது: கே.கே.நகர் பகுதியை
சேர்ந்த ஸ்னேக பிரியா, பிரணவன், ஹரீஷ், சிவராம கிருஷ்ணன், நான் ஆகிய
ஐவரும், பள்ளி பருவத்தில், டியூஷன் நண்பர்கள். பள்ளி பருவத்திலேயே,
எதிர்காலத்தில் தனித்து இயங்க வேண்டும் என்று நிறைய பேசுவோம்.
அப்போதெல்லாம், எந்த துறையில் என்ன செய்ய போகிறோம், என்பது குறித்த புரிதல்
இருக்காது. ஆனாலும், புதிதாகவும், அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாகவும் ஏதாவது
செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும், எங்களுக்குள் இருந்தது. கல்லூரி
பருவத்தில், அனைவரும் பொறியியல் துறையில் வெவ்வேறு பிரிவுகளை
தேர்ந்தெடுத்தோம். படிக்கும்போதே, நாங்கள் இணைந்து என்ன செய்யலாம் என
யோசித்தபோது, எதிர்காலத்தில், கோலோச்ச போகும் 'ரோபோ'க்கள் செய்ய,
தீர்மானித்தோம். அதற்கான முயற்சி களில் இறங்கியபோது, ரோபோ தயாரிப்பதற்கான
உதிரிபாகங்கள், எளிதில் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்துதான் வாங்க
வேண்டி இருந்தது. அவற்றின் விலை மிக அதிகமாக இருந்தது. ரோபோக்களை பற்றிய
கட்டுரைகளையும் தகவல்களையும் இணையம், ஆசிரியர்கள், மற்ற தரவுகள் மூலம்
தெரிந்து கொண்டோம். ரோபோக்கள் கலந்து கொள்ளும் போட்டிகளில், தொடர்ந்து
பங்கேற் றோம். நாங்கள் இணைந்தும், தனித்தனியாகவும் பல்வேறு பரிசுகளை
பெற்றோம். படிப்பு முடிந்ததும், நாங்கள் ரோபோ சார்ந்த துறையிலேயே ஏதாவது
செய்ய வேண்டும் என நினைத்தோம். நாங்கள் பட்ட கஷ்டங்களை, மற்ற மாணவர்கள்
படக்கூடாது என்பதற்காக, வெளிநாட்டு உதிரி பாகங்களை விட, தரமுள்ளதாகவும்,
எளிதில் கையாளக் கூடியதாகவும் தயாரிக்க முனைந்தோம். ரோபோ பற்றிய
சிந்தனையையும், புரிதலையும் இளம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும்
புரியவைக்கும் முயற்சியில் இறங்கினோம். ரோபோ தயாரிப்புக்கான பயிற்சி
மையத்தை, இரண்டாண்டுகளுக்கு முன், கே.கே.நகரில் உருவாக்கினோம். இப்போது,
20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்
எங்களிடம் பயிற்சி பெறுகின்றனர். அண்ணாநகர், மணப்பாக்கம், அரும்பாக்கம்,
மயிலாப்பூர் ஆகிய இடங்களில் கிளைகளை திறந்துள்ளோம். மாணவர்களில், 20க்கும்
மேற்பட்டோர், பல்வேறு ஐ.ஐ.டி., பொறியியல் மாணவர்களுடன் போட்டியிட்டு,
பரிசுகளை வென்றிருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேலை கிடைக்காதது ஏன்?
ஹரீஷ் கூறியதாவது:
பிராஜக்டுக்காக, ரோபோ தயாரிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, இலவச
ஆலோசனைகளை வழங்குகிறோம். ஆனால், ரோபோ தயாரிப்பது, அவர்களின் சொந்த உழைப்பாக
இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நான்கு ஆண்டுகள்
பொறியியல் கல்வி முடித்து வெளிவரும் பல மாணவர்களுக்கு, தொழில்நுட்ப அறிவு
மிக குறைவாக இருப்பதால் தான், நல்ல வேலைக்கு செல்ல முடியாமல், சாதாரண
வேலைகளில் தங்களின் காலத்தை ஓட்டுகின்னர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...