அரசு இட
ஒதுக்கீட்டின் கீழ் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கை அனுமதி வழங்க
உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
கே.எஸ்.நவீன் பிரியா, எம்.யசிதா, ராசி ரங்கராஜ் உள்பட 28 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களின் விவரம்:
நாங்கள் அனைவரும்
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட
மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பித்தோம். அரசு மருத்துவக் கல்லூரிகளில்
எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சிலருக்கு சுயநிதிக் கல்லூரிகளில் அரசு இட
ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது. ஆனால், அந்தக் கட்டணத்தைச் செலுத்த
முடியாததால், அந்த உத்தரவை ஏற்கவில்லை.
சென்னையில் உள்ள
தாகூர் மருத்துவக் கல்லூரிக்கும், திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக்
கல்லூரிக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அந்தக்
கல்லூரிகளுக்கு தேர்வுக் குழு அனுப்பியது. அதன் பிறகு, அனுமதிச்
சேர்க்கைக்கான கடைசித் தேதி முடிந்த பிறகு இரண்டு கல்லூரிகளும் அனுமதி
செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதில், எங்களை விட
குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை
நடைபெற்றுள்ளது. அதனால், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் அந்தக் கல்லூரிகளில்
எங்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுக்களில்
கோரப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தேர்வுக் குழுவினர்
தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலுக்குப் பதில் வேறு பட்டியலை அனுப்பியது
தெரிகிறது. அதற்கு தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சேர விருப்பம் இல்லை
எனத் தெரிவித்த பிறகு, மீண்டும் கலந்தாய்வில் சேர்க்கை அனுமதி கோர முடியாது
என மருத்துவக் கல்வி இயக்ககத்தின் விளக்கக் குறிப்பேட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் சுயநிதிக்
கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை அனுமதிக்கான கட்டணம்
ரூ.3 லட்சம் என கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால், அரசு
மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.12,290 மட்டும்தான்.
தனியார் சுயநிதிக்
கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மூன்று கட்ட கலந்தாய்விலும் இடம்
கிடைத்தும் மனுதாரர்கள் சேர மறுத்ததாகக் கூற முடியாது. அந்தக் கட்டணத்தைச்
செலுத்த முடியாததால் தங்களது இயலாமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனால், தகுதிப்
பட்டியலில் இருந்து மனுதாரர்களின் பெயரை நீக்கி இருக்கக் கூடாது. ஆனால்,
குறைவான மதிப்பெண் பெற்றவர்களை பட்டியலில் அனுப்பியது மனுதாரர்களுக்கு
இழைத்த அநீதியாகும்.
அதே நேரம், அந்தப்
பட்டியலை ரத்து செய்ய முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் கல்லூரியில்
சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து 84 இடங்கள்
காலியாக உள்ளன. அவ்வாறு இருந்தாலும் அதில் சேர்க்க உத்தரவிட முடியாது.
அதனால், இது
குறித்து மனுதாரர்கள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், தேர்வுக் குழுவினர்
உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என
நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...