அரசு முதல்நிலை
கல்லூரிகளில், தற்போது பாட நேரம் வாரத்திற்கு 16 மணிநேரமாக உள்ளது. இதை 22
மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கல்லூரி
விரிவுரையாளர்: தற்போது, வாரம் ஒன்றில், 16 மணி நேரம் பாடம்
நடத்துவதற்கும், ஆறு மணி நேரம் ஆய்வு செய்வதற்கும், கல்லூரி
விரிவுரையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில், ஆய்வு
நடத்துவதற்கான வசதிகள் ஏதுமில்லாததால், இனி அந்த ஆறு மணி நேரத்தையும்,
பாடம் நடத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். அதாவது, வாரம்தோறும் 22 மணி
நேரம் பாடம் நடத்த வேண்டும் என, கல்லூரி கல்வி நடவடிக்கை துறை (டி.சி.இ.,)
புதிய உத்தரவு ஒன்றை, பிறப்பித்துள்ளது.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விரிவுரையாளர்கள் கூறியதாவது:
வாரத்தில், 16 மணி
நேரம் பாடம் நடத்திய பின், ஆறு மணி நேரம் ஆய்வுக்காக பயன்படுத்தலாமென்று,
யூ.ஜி.சி., விதிமுறைகள் அனுமதித்துள்ளது. விரிவுரையாளர்கள், அடுத்த கட்ட
பதவி உயர்வுக்கு, துணை பேராசிரியர் பதவியிலிருந்து, இணை பேராசிரியர் பதவி
பெற, 300 வகையான பாட திட்டங்களில் ஆய்வு செய்து, சர்வதேச ஜர்னல்களில்
வெளியிட்டாக வேண்டும். இந்த ஆய்வுக்கு, அதிகநேரம் தேவைப்படுகிறது என்பதால்,
புதிய உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
புதிய உத்தரவு:
கர்நாடகா அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர், பிரகாஷ் கூறியதாவது:
இந்த புதிய உத்தரவை
திரும்ப பெறும்படி, உயர் கல்வித்துறை அமைச்சர் தேஷ்பாண்டேவுக்கு கடிதம்
அனுப்பி உள்ளோம். பாட திட்டங்களிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளதால், ஆய்வு செய்ய
அதிக நேரம் தேவைப்படுகிறது.
தற்போது, ஏதாவது
புள்ளி விவரங்களை தெரிவித்தால், அது சரியா என்பதை மாணவர்கள், உடனடியாக ஆன் -
லைன் மூலம் பரிசோதிக்கின்றனர். விரிவுரையாளர் தரும் தகவல்கள் பழையதாக
இருந்தால், புதிய தகவல்களை மாணவர்கள் தருகின்றனர்.
ஒரு மணி நேர
வகுப்பில் பாடம் நடத்த, நாங்கள் அதிகம் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களை,
முட்டாளாக்க முடியாது. அரசு விதித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும் என,
எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலவை துணைத் தலைவர்
புட்டண்ணா கூறுகையில், ”இந்த உத்தரவில், அர்த்தமே இல்லை. கல்வியாண்டின்
மத்தியில், டி.சி.இ., இப்படியொரு உத்தரவு அனுப்புவதற்கோ, பாட நேரத்தை
நிர்ணயிப்பதற்கோ அதிகாரமில்லை. மாநில நிதித்துறை பரிந்துரையை மட்டுமே
வெளியிட வேண்டும். இது, யூ.ஜி.சி., சம்பந்தப்பட்டதாகும். இந்த உத்தரவை
திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்துவேன்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...