Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறைக்கு எதிராக 2000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

         பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

          அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

வழக்குகள் எண்ணிக்கை :

பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்வி அதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.கடந்த, 27ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.இதில், நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், செயலர் சபிதா, நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போதைய நிலவரப்படி, அரசாணை எண், 216 தொடர்பான வழக்குகள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான பணப்பலன் வழங்குவது) மற்றும் இதர வழக்குகள் என, 2,000த்திற்கும் அதிகமான வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமாண்ட் பேட்ரிக் கூறியதாவது:

  • எந்த ஒரு வழக்காக இருந்தாலும், கடைசி பிரதிவாதியாக, மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரி தான் இருப்பார். பெரும்பாலும், பதவி உயர்வு, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், வழக்குகள் வருகின்றன.
  • இந்த பிரச்னைகள் வராத அளவிற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செயல்படுவதில்லை. மேலும், வழக்கில், பதில் மனு தயாரிக்கும் பணி, மாவட்ட அதிகாரியிடமே தரப்படுகிறது.திணறுகின்றனர் எவ்வித சட்ட அறிவும், அனுபவமும் இல்லாத மாவட்ட அதிகாரிகள், பதில் மனுவை தாக்கல் செய்ய திணறுகின்றனர்.
  • யாரையாவது பிடித்து, பல ஆயிரம் ரூபாயை, எப்படியோ செலவழித்து, பதில் மனுவை தாக்கல் செய்கின்றனர். இதிலும், பல ஓட்டைகள் இருக்கும். வழக்குகளின் நிலையை, தொடர்ந்து கண்காணிக்கவும், ஆள் கிடையாது. இதனால், அவ்வளவு எளிதில், வழக்கு முடிவுக்கு வருவதில்லை. இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் அளவிற்கு, நிலைமை முற்றுகிறது. அப்போது தான், விஷயம், உயர் அதிகாரிகள் வரை செல்கிறது.
  • ஒவ்வொரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஒரு சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். அவர், கல்வித்துறையை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இப்படி செய்தால், ஓரளவு, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஒரு முடிவை எடுக்கும் முன், விரிவாக விவாதிப்பது இல்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என, முடிவை எடுப்பதும், பின் மாற்றுவதையும், வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தான், வழக்குகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.இவ்வாறு, சாமி கூறினார்.

சட்ட அலுவலர் நியமனம் இழுபறி:

பள்ளி கல்வித்துறையில், நாகராஜன் என்பவர், சட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். வழக்குகளை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, மேலும், இரு சட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர் என, சட்டசபையில் அறிவித்து, ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நியமனம் செய்யவில்லை.நாகராஜன் கூறுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, ஒரு சட்ட அலுவலரும், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்குகளை கவனிக்க, ஒரு சட்ட அலுவலரும் நியமனம் செய்யப்படுவர் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை, நியமனம் நடக்கவில்லை,'' என்றார்.




1 Comments:

  1. தகுதி வாய்ந்த ஆசிாியா்களை நியமிக்கும் முன்பு தகுதியான பள்ளி கல்வித்துறை அதிகாாிகளை அரசு நியமிக்க வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive