காவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள
நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக உடலை தயார் செய்துகொண்டு
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில்
1,450 காவல் நிலையங்கள், 200 போக்குவரத்து காவல் நிலையங்கள், 190 மகளிர்
காவல் நிலையங்கள், 70 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1.22
லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆனால் ஒரு லட்சம் பணியிடங்கள் மட்டுமே
நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 22 ஆயிரம் பணியிடங்கள் எப்போதும்
காலியாகவே இருக்கின்றன.
தேசிய அளவில் 7 ஆயிரம் மக்களுக்கு ஒரு
போலீஸ்காரர் என்ற விகிதத்திலும், தமிழகத்தில் 600 மக்களுக்கு ஒரு
போலீஸ்காரர் என்ற அளவிலும் உள்ளனர். தேசிய அளவைவிட மக்கள் தொகை
அடிப்படையிலான போலீஸார் தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் குற்றங்களின்
எண்ணிக்கை அடிப்படையில் இதை இன்னும் உயர்த்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு நடத்தப்பட்டது.
2012 -ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்போர் என
13,320 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் போலீஸ் பணிக்கு ஆட்கள்
தேர்வு நடைபெறவில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 1,091 உதவி
ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்பு படையினர், 17,138 போலீஸ்காரர்கள் உட்பட
19,526 பேரை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிக்கை
தயாரித்து அரசுக்கு அனுப்பியது. ஆனால் அரசிடம் இருந்து இதுவரை பதில்
வரவில்லை. தமிழகத்தில் தற்போது 4,230 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக
உள்ளன. இந்த பதவிக்கான தேர்வை எதிர்பார்த்து உடலை தயார் செய்து கொண்டு
ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். 28 வயதை கடந்தவர்கள் இதில் சேர
முடியாது. எனவே இந்த வயதை தொட்டவர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடனும்,
கவலையுடனும் உள்ளனர். மேலும், 103 துணை சூப்பிரண்டுகள், 30 ஆய்வாளர்
பணியிடங்களும் காலியாக உள்ளன. இவை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படும்.
இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்தும் பலர் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வாணைய அதிகாரியிடம் கேட்டபோது, "2012-13ம் ஆண்டுக்கான
காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் அனைத்து மாவட் டங்களில் இருந்தும்
பெறப்பட்டு, 13,078 போலீஸ்காரர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 886 உதவி
ஆய்வாளர்கள், 277 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்கள், 202 கைரேகை பதிவு உதவி
ஆய்வாளர்கள் என மொத்தம் 1,365 உதவி ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
காவல் துறையில் பல்வேறு நிலைகளில் 20,506
காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 14,623 காலிப் பணியிடங்களைப் நிரப்ப அரசு
உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...