ரேம்
ப்ராசசர்களே கம்பியுட்டா் மற்றும் போன்களின் மூளை
என்று முந்தைய கட்டூரைகளில் நாம் பார்த்தோம். நினைவகம் வேண்டுமென்றால் கம்பியுட்டரில்
அதற்கு ஹார்ட் டிஸ்க் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் 500ஜி.பி, 1000ஜி.பி நினைவு உள்ள போதும்,
512எம்.பி, 1ஜி.பி மற்றும் 2ஜி.பி என்ற குறைந்த அளவிலான ரேம்கள் எதற்கு? ரேம் இல்லாமல் கம்பியுட்டர் அல்லது ஸ்மார்ட் போன்கள்
இயங்காதா? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.
ஆம் உங்கள் கேள்வி சரியே. ரேம் இல்லாமல் கம்பியுட்டா்
மற்றும் ஸ்மார்ட் போன்கள் இயங்காது. முந்தைய பதிவுகளில் பிராசஸா்கள் மற்றும் ஜி.பி.யுவின்
செயல்பாடுகளை நாம் அறிந்திருக்கிறோம். பிராசஸரின் செயல்பாட்டை ஒரு கல்குவாரியின் க்ரஷருடன்
ஒப்பிட்டு அறிந்தோம். உடைக்கப்படும் கற்களாக மென்பொருட்களின் கட்டளைகளை கருதினோம்.
இதே அமைப்பையே மீண்டும் எடுத்துக் கொள்வோம். நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட
பெரிய பாறைகள் குவாரியின் அருகில் குவிக்கப்பட்டிருக்கும். இந்த கற்களை தொடா்ச்சியாகவும்,
தேவையான அளவிலும் க்ரஷருக்கு எடுத்துச் செல்ல கன்வேயா் பெல்ட் எனப்படும் நகரக்கூடிய
ரப்பா் பெல்ட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த கன்வேயா் பெல்ட்களே ரேம் (ரேண்டம் ஆக்ஸஸ்
மெமரி) ஆகும்.
குவிக்கப்பட்டிருக்கும் பாறைகளே உங்கள் ஹார்ட்டிஸ்க்
ஆகும். செல்போனில் இத்தகைய நினைவகத்தினை ரோம் (ரீட் ஒன்லி மெமரி). குவிக்கப்பட்டிருக்கும்
பெரிய பாறைகளை நேரடியாக க்ரஷ்ஷரில் கொட்ட முடியாது. அவற்றை தேவைக்கேற்ற வேகத்திலும்,
அளவிலும் அளிப்பதற்கே பெல்ட்டுகள் அமைகப்பட்டுள்ளன. அவ்வாறே உங்கள் நிரந்தர நினைவகங்களில்
(ஹார்ட் டிஸ்க் மற்றும் ரோம்) இருந்து தேவையான கட்டளை பகுதிகைளை தொடர்ச்சியாகவும்,
தேவைக்கேற்ற வேகத்திலும் பிராசஸருக்கு அனுப்ப இயலாது. இந்த பணியை செய்வதே ரேம்களாகும்.
இவை தற்காலிகமானவை. எனவேதான் நீங்கள் சேவ் செய்யாது டைப் செய்தவை ரீ-ஸ்டார்ட் ஆகும்
போது அழிந்துவிடுகின்றன. இவை வரிசையற்றவை. எனவே முந்தயது, பிந்தயைது என்ற பேதமின்றி
நமக்கு தேவையான மென்பொருளை தேவையான சூழலில் உடனடியாக பயன்படுத்த உதவும்.
சரி, இத்தகைய முக்கியத்துவமுடைய ரேம்களை ஏன்
1ஜி.பி, 2ஜி.பி என்று பயன்படுத்துகிறோம்? அதையும் ஹார்ட் டிஸ்க்கினைப் போன்று 500,
1000ஜி.பி என்ற பெரிய அளவில் பயன்படுத்தலாமே, இதனால் கூடுதல் வேகத்தில் நம் டிவைஸ்
இயங்காதா? என்ற சந்தேகம் தோன்றும். ஆம். இயங்காது. மறுபடியும் குவாரிக்கு வாருங்கள்.
கன்வேயா் பெல்டினை எவ்வளவு பெரியதாக்கினாலும், க்ரஷ்ஷரின் செயல்பாடு அதிகாரிக்காமல்
ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிக்காது.
எனவே
ஒவ்வொரு க்ரஷருக்கும் அதிகபட்ச கன்வேயா் பெல்ட் அளவு எல்லை இருக்கும். இதற்கு மேல்
அதிகரித்தாலும் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது. அவ்வாறே உங்கள் பிராசஸரின் உயர் எல்லையில்
ரேம் அமைதல் வேண்டும். கம்பியுட்டரைப் போன்று உங்களுக்கு தேவையான ரேம் அளவினை போனில்
தோ்வு செய்ய முடியாது. போன் தயாரிப்பு நிறுவனமே அந்த எல்லையில் ரேம்மினை அமைத்திருக்கும்.
உங்கள்
கம்பியுட்டர் அல்லது போன் ஆன் (பூட்) செய்யப்படும்போது நிரந்தர நினைவகத்தில் இருந்து
அடிப்படை கட்டளைகள் ரேம்மிற்கு கொண்டுவரப்படும். இந்த செயல்பாடு முடிந்த பின்னர்தான்
உங்கள் டிவைஸ் பயன்படுத்த தயாராகும். இதன் பின்னர் பிற ஆப்களை இயக்கும் போது, அவையும்
ஒவ்வொன்றாக உங்கள் ரேமில் இடம் பெறும். இதற்கு பின்னர்தான் அந்த மென்பொருட்களும் பயன்பாட்டிற்கு
தயாராகும். சில சமயங்களில் ரேமின் அளவினைவிட திறக்கப்பட்டிருக்கும் மென்பொருட்களின்
கொள்ளளவு அதிகமாகலாம். அத்தகைய சமயங்களில் திறக்கப்பட்டதில், பயன்படுத்தப்படாமல் இருக்கும்
ஆப்கள் தற்காலிகமாக ரேம்மில் இருந்து அழிக்கப்பட்டு, புதிய ஆப்பிற்கு ரேமில் இடமளிக்கப்படும்.
ரோம்
செல்போன்களின் நிரந்தர நினைவகமே (ஹார்ட் டிஸ்க்கே)
ரோம் ஆகும். உங்கள் போனின் ஒ.எஸ் எனப்படும் அடிப்படை கட்டளைகள் முதல், நீங்கள் நிறுவும்
ஆப்புகள், போன் கேமிராவில் எடுக்கப்படும் போட்டோக்கள், எஸ்.எம்.எஸ்கள், கான்டாக்டுகள்
மற்றும் கால் ரிஜீஸ்டரி என அனைத்தும் ரோமில் பதிவு செய்யப்படும். இவை ரேமைவிட வேகம்
குறைந்தவையாக இருந்தாலும் நிரந்தரமானவை. போனை ஆப் செய்த பின்னரும் தகவல்களை சேமித்து
வைக்கக் கூடியவை. ஆரம்ப கால ஸ்மார்ட் போன்களின் ரோம்மில் சில எம்.பிக்களே இடம் இருக்கும்.
இதனால் இரண்டாவது ஆப்பினை நிறுவும் போதே லோ ஆன் டிஸ்க் ஸ்பேஸ் என்ற தகவல் திரையில்
தோன்றும். தற்கால ரோம்கள் (இன்டா்னல் மெமரி என்றும் இவை அழைக்கப்படும்) குறைந்தபட்சம்
4ஜி.பிக்களில் இருந்து அமைக்கப்படுகின்றன. திட்டமிட்ட பயன்பாட்டிற்கு இதுவே போதுமானது.
சில
நிறுவனங்களின் போன்களில் மொத்த ரோம் நினைவானது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் ஒன்று ஆப்புகளை நிறுவுவதற்கு மட்டும் பயன்படும். மற்றொரு பகுதியே மற்ற அனைத்து
நினைவக தேவைகளையும் பூர்த்தி செய்யும். இதற்கும் மேற்பட்டு இருக்கும் நினைவக தேவையை
பூர்ததி செய்யவே எக்ஸ்டர்னல் மெமரி எனப்படும் மெமரி கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மெமரி கார்டுகள்
இவற்றின்
கொள்ளளவு ஜி.பிக்களிலும், இவற்றின் வேகம் க்ளாஸ் எனப்படும் எண்களிலும் அளவிடப்படும்.
(சிறிய வட்டத்திற்குள் எழுத்தப்பட்டிருக்கும் எண்). க்ளாஸ்4 மெமரி கார்டுகள் அடிப்படையானவை.
உங்கள் போனின் வேகமான பயன்பாட்டிற்கு க்ளாஸ்6 அல்லது க்ளாஸ்10 வகை மெமரி கார்டுகளை
பயன்படுத்தலாம். தற்காலத்தைய போன்களில் மெமரி கார்டினை, ஆப் ஸ்டோரஞ் மற்றும் பிற மெமரி
தேவைகள் என இரண்டு பிரிவிற்கும் பயன்படுத்தலாம். (சில ஆப்களை மெமரி கார்டில் பதிவு
செய்ய இயலாது). சில போன் நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல்களில் மெமரி கார்டுகளை பயன்படுத்த
இயலாது. இது போன்ற போன்களில் இன்டர்னல் ஸ்டோரையே கவனமாக பயன்படுத்த வேண்டுமே தவிர வேறு வழியில்லை.
Article by: Mr. Pa. Thamizh
Article by: Mr. Pa. Thamizh
பாடசாலை நிறுவனர் அவர்களுக்கு வணக்கம். நான் Android phone use பண்றேன் . school சம்பந்தபட்ட மின்னஞ்சல் பார்பதற்காக kingsoft office app install செய்துள்ளேன். ஆனால் தனது போனில் பள்ளி சம்மந்தபட்ட Microsoft Word Document டில் தமிழ் font தெரியவில்லை குறிப்பாக வானவில் font. தயவு செய்து உதவிசெய்யவும்
ReplyDeleteஅன்பு நண்பரே..முதலில் Tamil Text Viewer என்ற App ஐயும் Convert Word to Text என்ற App ஐயும் Download & Install செய்து கொள்ளவும். Mail Attachment லிருந்து .doc or .docx file ஐ Download & Save செய்து கொள்ளவும். இது Download Folder ல் Save ஆகியிருக்கும். பின்னர் இதை Convert Word to Text மூலம் open பண்ணி, Save Icon ஐ அழுத்தினால் மேலே வரும் File Name ல் கடைசியில் ஒரு பெயர் கொடுத்து அதன் இறுதியில் .txt என்று அடித்து Save கொடுக்கவும். (Save icon மேலே இருக்கும்) இது Device ல் Save ஆகியிருக்கும். இதனை Tamil Text Viewer மூலம் திறந்தால் வானவில் ஔவையார் font லுள்ள Document ஐ வாசிக்கலாம். Bamini Font ஐ எழுத்துக்கூட்டி (jpq;fs; - திங்கள்) வாசிக்கலாம்.
Delete