சர்வதேச பட்டியலில் இடம் கிடைத்தும் தெற்காசிய
பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே
இ.ஆவாரம்பட்டி நீலாவதிக்கு, 30, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இ.ஆவாரம்பட்டியை சேர்ந்த சிவசக்திவேல் மனைவி
நீலாவதி, போலியோ தாக்குதலால் இரண்டு கால்களும் ஊனமாகின. குண்டு எறிதல்,
வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய தடகள போட்டிகளில் விளையாடி வருகிறார்.
பாராலிம்பிக் சீனியர் நேஷனல் அத்தலட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில்
பங்கேற்று வட்டு எறிதலில் முதலிடமும், குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் 2 ம்
இடமும் பெற்றிருந்தார்.
இதன்மூலம் பிப்ரவரியில் சார்ஜாவில் நடந்த 4 வது
சர்வதேச பாராலிம்பிக்கில் பங்கேற்றார். செப்.,24ல் சென்னையில் நடந்த தேசிய
பாராலிம்பிக்கில் பங்கேற்று குண்டு எறிதல், வட்டு எறிதலில் முதலிடமும்,
ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும் பெற்றார். அக்.,18 முதல் அக்.,24 வரை
தென்கொரியாவில் தெற்காசிய பாராலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.
பெங்களூருவில் நடந்த தகுதி போட்டியில் வெற்றி பெற்றும் தெற்காசிய
போட்டியில் பங்கேற்க நீலாவதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி நீலாவதி கூறியதாவது: தேசிய,
மாநில போட்டிகளில் பங்கேற்று இதுவரை 33 பதக்கங்களை வென்றுள்ளேன். சர்வதேச
பட்டியலில் குண்டு எறிதலில் 15 வது இடம், வட்டு எறிதலில் 14 வது இடம்,
ஈட்டி எறிதலில் 19 வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல் ஆசிய நாடுகளுக்கான
பட்டியலில் குண்டு, வட்டு எறிதலில் 6 வது இடம், ஈட்டி எறிதலில் 11 வது இடம்
கிடைத்துள்ளது. தகுதியிருந்தும் தெற்காசிய போட்டிக்கு வாய்ப்பு
மறுக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது, என்றார்.
புதுவாழ்வு திட்ட அதிகாரிகளில் ஒருவர்
கூறுகையில், "புதுவாழ்வு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளை சர்வதேச, தேசிய
பாராலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி வருகிறோம். நடைமுறை சிக்கல்களால்
தெற்காசிய போட்டிக்கு நீலாவதியால் செல்ல முடியவில்லை" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...