Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள்: அன்றும் இன்றும்

       நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம். 
 
         அதைச் சரி செய்யும் வகையில், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தினமும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, அவர்களது வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாம்.

       இந்த உத்தரவை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் எதிர்த்துள்ளதாம். காரணம், தற்சமயம் கிராப்புறங்களில் காலை 9.30 மணிக்கு பள்ளிகள் துவங்கி, மாலை 4.30 மணிக்கு முடிகிறது. தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகளைக் கூடுதலாக நடத்த வேண்டுமெனில், காலை 8.30 மணிக்குத் துவங்கி மாலை 5.30 மணி வரை பள்ளிகள் இயங்க வேண்டும். கிராமப்புறங்களில் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் நெடுந்தொலைவு பேருந்திலும், சைக்கிளிலும், நடந்தும் வரும் மாணவர்களுக்கு இது பெரிய சிரமமாகிவிடும் என ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் சிறப்பான கல்வியைப் பெறும் மாணவர்களால்தான் உருவாகும் என்பது உலகெங்கிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அதுபோன்ற வளர்ச்சியை சுதந்திர இந்தியாவில் உருவாக்கிக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு என்பது சரித்திர உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் காலத்தில் அது நடந்தேறியது.
அந்தக் கால கட்டத்தில் மாணவனாக இருந்த என் போன்றவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த ஓர் உண்மை, எங்களது திறமையை வளர்த்து விட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளில் அவற்றை பாடமாகப் போதித்து எங்களை உருவாக்கவில்லை என்பதுதான்.
கிராமத்தில் தனியார் பள்ளிகளில் படித்த காலத்தில் எங்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின்படி எல்லாப் பாடங்களையும் மிகவும் தெளிவாக போதித்து வந்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வந்தார்கள் என்பது முக்கியமான அம்சம்.
ஒரு வகுப்பில் எந்த அளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பட்டியல் எல்லாப் பள்ளிகளிலும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அதை அதிகாரி பள்ளிக்கு வந்து பார்த்துக் கொள்வார்.
பின், ஏதேனும் ஒரு வகுப்பிற்குச் சென்று பாடத்தில் கேள்விகளைக் கேட்டு மாணவர்கள் எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை கணிப்பார்கள்.
மாணவர்கள் சரியான பதில்களைக் கூறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை சரியாகப் போதித்திருக்கிறார்கள் என்ற முடிவிற்கு அதிகார்கள் வருவார்கள். அப்படியல்லாமல் கேள்விக்கு மாணவர்களால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லையென்றால் ஆசிரியர் கண்டிக்கப்படுவார் எனும் நிலைமை இருந்தது.
நிறைய ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து மாணவர்களை சிறந்த முறையில் பாடங்களைப் படிப்பவர்களாகவும், நூலகங்களில் உள்ள புத்தகங்களைப் படித்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்பவர்களாகவும் உருவாக்குவார்கள்.
ஒரு வகுப்பிற்கு வரும் ஆசிரியர்களில் யார் சிறந்த முறையில் பாடம் எடுக்கிறார் என்ற விவாதம் மாணவர்களின் மத்தியில் நடந்தேறி, பெற்றோர் மூலமாக ஊர் முழுக்கவும் பரவி, ஆசிரியர்கள் மத்தியிலேயே இந்த சிறப்பான போதிக்கும் குணாதிசயம் ஒரு போட்டியாகவே உருவாகிவிடும்.
தவிரவும், ஓர் ஆசிரியர் தனது வகுப்பில் பயிலும் மாணவர்களில் பலருக்கும் பாடத் திட்டங்களில் இல்லாத பொது அறிவு விவரங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் நூலகங்களுக்குச் சென்று குறிப்பிட்ட புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்து விடுவார்கள். இந்த நடைமுறை கல்லூரிகளில் இருப்பது மிகவும் அவசியமாகிறது.
தற்போது நமது நாட்டின் கல்லூரிகளில் பட்டங்கள் பெற்று வேலைக்குச் செல்லும் பல பொறியாளர்கள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் மேலாளர் பதவியிலிருப்பவர்களின் அறிவுத்திறமையை ஆராய்ந்த ஓர் ஆராய்ச்சி நிறுவனம், அவர்கள் மிக குறைந்த அளவு கூட பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவு உடையவர்களாக இல்லை எனும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
கல்லூரி ஆசிரியர்கள் பலரும் ஏதோ கடமைக்கு தங்கள் வேலையைச் செய்து மாதச் சம்பளத்தை பெற்றுக் கொண்டு ஆசிரியர் தொழிற்சங்கங்களை அமைத்துக் கொண்டு தங்கள் சம்பள உயர்வுக்காக போராடும் சூழ்நிலை எல்லா இடங்களிலும் உருவாகியுள்ளது.
உயர் கல்வியில் மிக உயர்ந்த நிலையில் உள்ள மேலைநாடுகளில் கல்லூரி ஆசிரியர் வேலைக்கு வருபவர்கள், அந்த வேலையில் உள்ள தனித்தன்மையான அறிவு சார்ந்த விவரங்களைப் பாடமாக மாணவர்களுக்கு போதிப்பதையும், நிறைய விவரங்களை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிப்பதையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆர்லிங்க்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பிற்காக நான் சேர்ந்தபோது ஜெர்ரி வாஃபோர்ட் எனும் பேராசிரியர் என்னை தனது உதவியாளனாக பணியில் அமர்த்திக் கொண்டார். அவருடன் நல்ல நட்புறவு ஏற்பட்டபின் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் நான் தெரிந்து கொண்டேன்.
மிக அதிக அளவு சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் இருந்த அவர், அந்த வேலையை ராஜிநாமா செய்து விட்டு கல்லூரி ஆசிரியர் வேலையை விரும்பி ஏற்றுக் கொண்டார். காரணம், மாணவர்களுக்கு பாடம் போதிப்பதிலும், நிறைய ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது எனக் கூறினார் இவர்.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக, தமிழகத்தின் அன்றைய மதராஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வரும் மாணவர்கள் மிக அதிக அறிவுத் திறமையும், படிப்பறிவும் உள்ள மாணவர்களாக வருவது எப்படி என பேராசிரியர் ஜெர்ரி வாஃபோர்ட் என்னிடம் கேட்டார்.
நான் கூறிய செய்திகள் அவருக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்ததால் அவற்றை மற்ற எல்லா ஆசிரியர்களிடமும் கூறினார். எங்கள் எம்.பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்கு இதன் விவரங்களை எடுத்துக் கூற ஒரு தனி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். நான் படிக்கும்போது எனது ஆசிரியர்கள் எனக்கும் பல மாணவர்களுக்கும் உருவாக்கிய படிப்புத் திறமையை எடுத்துரைத்தேன்.

1962 முதல் 1965 வரை பட்டப்படிப்பில் இருந்த எங்களுக்கு முதல் மொழி என ஆங்கிலமும், இரண்டாவது மொழி என தாய்மொழியான தமிழும், மூன்றாவது பாடம் என நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட விலங்கியலும் பாடங்கள். 1961-ஆம் ஆண்டு பி.யு.சி. என்ற வகுப்பில் இருக்கும் போதே ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு வகுப்பிற்கு வெளியே பயிற்சி அளிக்கும் ஆங்கில ஆசிரியர்கள் அங்கு இருந்தனர்.

ஆல்பர்ட் எனும் ஆசிரியரிடம் நான் சென்று எனது மொழி அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி எனக் கேட்டபோது, அன்றைய ஆங்கில நாளேடான ""மெயில்'' எனும் பத்திரிகையை தினமும் படிக்குமாறும் அதில் வரும் வார்த்தைகளில் அர்த்தம் புரியாதவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொண்டு நூலகத்திற்குச் சென்று ""டிக்ஷனரி''யில் அர்த்தங்களை குறித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அந்த காலத்தில் தனியாக ஒரு டிக்ஷனரி வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடையாது.

பின் அந்த வார்த்தைகளை உபயோகித்து வாக்கியங்களை உருவாக்க வேண்டும். இது சரியா என்பதை மறுநாள் ஆசிரியரிடம் கொண்டு போய் காட்ட வேண்டும். அவர் அதை சரிபார்த்துத் தேவையான அறிவுரைகளை வழங்குவார். எங்கள் மாணவர் விடுதியின் காப்பாளராக இருந்த துணை முதல்வர், ஆங்கிலத்தில் எந்தச் சந்தேகம் ஏற்பட்டாலும் தன்னை வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறியிருந்தார்.

அவரிடம் என் போன்ற மாணவர்கள் பல சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலைமையில் எங்களது படிப்பார்வத்தை சரியாகக் கணித்துவிடுவார். அதாவது, ஒரு மாணவன் ஆசிரியரிடம் கேட்கும் சந்தேகத்தை வைத்து அவனது அறிவுத்திறனையும், கல்வியின் மீதுள்ள ஆர்வத்தையும் புரிந்து கொள்ள முடியும் என ஆசிரியர்கள் கூறுவர்.

இதுபோல விலங்கியல், சரித்திரம் போன்ற பாடங்களைப் போதித்த ஆசிரியர்களும் நிறைய ஆர்வத்துடன் மாணவர்களுக்கு போதித்தனர். இதுபோன்ற ஆசிரியர்கள் அதிகம் இருந்தது மதராஸ் மாகாணத்தில்தான் என பல முன்னேறிய நாடுகள்கூட உணர்ந்து இருந்ததால், அங்கே உயர் கல்விக்கு செல்லும் நம் மாணவர்களை வியப்புடன் வரவேற்பார்கள்.

இன்றைய நிலையிலும் நிறைய ஆசிரியர்கள் பல கல்லூரிகளில் அதுபோலவே இயங்குகிறார்கள். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாகிவிட்டது. சங்கத்தில் சேர்ந்து சம்பள உயர்வு கேட்கும் ஆசிரியர்கள் அதிகமாகி விட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive