ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பில் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக இனி சம்பளம் பெறுவதில் காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலக கணக்கு துறை அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு கருவூலங்களில் வழங்கப்படும். அங்கிருந்து வங்கிகளுக்கு இசிஎஸ் முறையில் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலைநாளில் சம்பளம் வழங்கப்படும்.
ஒரு சில அலுவலகங்களில் சம்பள பட்டியல் தயாரித்து அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டால் சம்பளம் பெறுவதில் தாமதம் ஏற்படும். வரி பிடித்தம், சம்பள உயர்வு, சலுகைகள் உயர்வு போன்ற காலகட்டங்களில் அரசு ஊழியர்களுக்கு உரிய வேளைகளில் சம்பளம் கிடைப்பது இல்லை என்ற குறைபாடும் உண்டு. இந்தநிலையில் சம்பளம் வழங்கும் முறையில் ஆவணங்கள் தயாரித்து அதனை சிடியிலும் பதிவு செய்து கருவூலங்களில் ஒப்படைக்கும் முறை முடிவுக்கு வருகிறது. இந்த மாதம் மட்டும் ஆவணங்களிலும் கூடவே பரிசோதனை அடிப்படையில் ஆன்லைனிலும் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் மட்டுமே சம்பள விபரங்களை கருவூலத்துக்கு அரசு துறை அலுவலகங்களின் கணக்கு அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு இ&பே ரோல் என பெயரிடப்பட்டுள்ளது. கருவூலத்துறை முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளி மற்றும் அலுவலகத்துக்கு தனி யூசர் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை உபயோகித்து அலுவலக கணக்கு பிரிவு அலுவலர்கள் தங்கள் அலுவலக பணியாளர்களின் சம்பள பில்களை தயாரித்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி மூலம் சம்பள பில் ஆன்லைனில் சமர்ப்பிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...