மின்வாரியத்தில் களப்பணியாளர் பணியிடத்தை,
ஐ.டி.ஐ., படித்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என அரசாணை இருந்தும்,
காலிப்பணியிடங்கள் கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், 5,000 அரசு தொழிற்பயிற்சி
பள்ளிகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பயிற்சிப் பள்ளிகளும்
உள்ளன. இதில், பிட்டர், எலக்ட்ரீசியன், டர்னர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை
தேர்ந்தெடுத்து படித்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி
பெற்று, வேலைக்கு செல்வதற்கான தகுதியை பெறுகின்றனர். இருப்பினும்,
பெரும்பாலானோருக்கு தனியார் நிறுவனங்களிலே வேலை கிடைக்கிறது.
குறைந்த பட்ச ஊதியம், அதிக உடல் உழைப்பு என்பதை
இலக்காக கொண்டு, தனியார் நிறுவனங்கள் ஐ.டி.ஐ., பட்டதாரிகளை வேலைக்கு
அமர்த்துவதாக கூறப்படுகிறது. அரசு துறைகளுள் முக்கியமானதாக கருதப்படும்,
மின்வாரியத்தில் ஐ.டி.ஐ., படித்தோரை, வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை என்ற
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்வாரியத்தில் களப்பணியாளர் காலியிடத்தை,
ஐ.டி.ஐ., எலக்ட்ரீசியன், ஒயர்மேன் பிரிவு படிப்புகளை முடித்த,
பட்டதாரிகளுக்கு நேர்முக தேர்வின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
என, அரசாணை உள்ளது. இதன்படி, தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையிலான
பட்டதாரிகளே நிரப்பப்பட்டுள்ளனர். தவிர, மாநிலம் முழுவதும், 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர் காலிப்பணியிடங்களும், கோவை
மாவட்டத்தை பொறுத்தவரை, 12 ஆயிரத்திற்கும் மேலான காலிப்பணியிடங்களும்
உள்ளன.
அரசு வேலையை நம்பி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,
சான்றிதழ்களின் பதிவெண்களை புதுப்பித்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான
மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை பணியிடங்களே
நிரப்பாததால் தான், மின் விபத்து அதிகரிப்பதோடு, சிக்கலான சமயங்களில்
சமாளிக்க முடியாமல், வாரியம் திணறுவதாக புகார் எழுந்துள்ளது.
ஐ.டி.ஐ., படித்த வேலை வாய்ப்பற்றோர் நலசங்க மண்டல அமைப்பாளர் முத்துக்குமார் கூறியதாவது:
ஐ.டி.ஐ., படித்து, தனியார் நிறுவனங்களில் சொற்ப
சம்பளத்துக்காக, வேலை செய்யும் பலர், அரசு வேலை கிடைக்கும் என்ற கனவில்,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழ்களை புதுப்பித்து வருகின்றனர்.
சீனியாரிட்டி பட்டியலில், வேலைக்கான அழைப்பு கடிதம் பெற்றோரை விட,
காத்திருப்போரின் எண்ணிக்கையே அதிகம்.
களப்பணியாளர் பணியிடத்தை போல, கணக்கீட்டாளர்
பணியிடத்திற்கும், ஐ.டி.ஐ., படித்தோரே தகுதியானவர்கள். தற்போது புதிய மின்
இணைப்புகளுக்கு, எலக்ட்ரானிக் மீட்டர்களே பொருத்தப்படுகின்றன. இந்த
மீட்டர்களின் பதிவேடுகளை, பதிவு செய்து, நுகர்வுக்கான கட்டணத்தை
நிர்ணயிக்கும் பொறுப்பு கணக்கீட்டாளர்களுடையது.
கணக்கீட்டாளர் பணிக்கு, பத்தாம் வகுப்பு
தேர்ச்சியடைந்தோரை கொண்டு நிரப்பி, பயிற்சி அளித்து, வேலைக்கு
அமர்த்துகின்றனர். இது, பழைய மின் கணக்கீட்டுக்கு உகந்ததாக இருந்தது.
தற்போதைய நவீன தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு, மின்நுகர்வு அளவு, மீட்டர்
கோளாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஐ.டி.ஐ., படித்த பட்டதாரிகளாலே, பதிவு
செய்ய முடியும். கணக்கீட்டாளர் பணியிடத்துக் கும், ஐ.டி.ஐ., படித்தோரையே
கொண்டு நிரப்ப, அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...