அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்: தெற்கு ரயில்வே தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக இளைஞர்கள்
அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது,
இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம்
(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும்,
பழைய முறையில், சான்றிதழ் நகல்களில் அதிகாரிகள் ஒப்பம் இல்லை என, கூறி, பல
ஆயிரம் விண்ணப்பங்களை, ரயில்வே தேர்வு வாரியம் நிராகரித்து உள்ளது. இதனால்,
தெற்கு ரயில்வேயின், 'குரூப் டி' பணியாளர் தேர்வை எழுத முடியாமல்,
தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
தேர்வு:
தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள, 5,450
'குரூப் டி' பணியாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய, 2013 செப்., 21ம் தேதி,
ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டது. இத்தேர்வு, நவ., 2ம் தேதி
முதல், ஐந்து கட்டங்களாக நடக்கிறது.இதற்கிடையே, மத்திய அரசு வெளியிட்ட
அறிவிப்பில், 'வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கும் சான்றிதழ்
நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் (அட்டஸ்டேஷன்) விதி
நீக்கப்படுகிறது. இனிமேல், சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின்
ஒப்பம் பெற வேண்டிய அவசியமில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
நிராகரிப்பு:
ஆனால், ரயில்வே தேர்வு வாரியம், இந்த அறிவிப்பை
ஏற்காமல், 'குரூப் டி' தேர்வுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், அரசு
அதிகாரி ஒப்பம் பெற்ற, சான்றிதழ் நகல்கள் இல்லை என கூறி, பல ஆயிரம்
விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த
ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ரயில்வே வாரியம் நடத்தும், 'குரூப் டி' தேர்வை
எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.'குரூப் டி' பணியில் காலியாக
உள்ள, 5,450 இடங்களுக்கு, 11 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், பல
ஆயிரம் விண்ணப்பங்கள், இந்த முறையில் நிராகரிக்கப்பட்டு உள்ளன எனவும்,
விண்ணப்பதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, ரயில்வே வாரியத்தை,
விண்ணப்பதாரர்கள் பலர் அணுகியபோது, 'குரூப் டி' தேர்வு அறிவிக்கும் போது,
மத்திய அரசு, இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் ஒப்பம்
பெறாமல், விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் நகலை ஏற்க முடியாது. எனவே,
அவ்வாறு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன' என, கூறியுள்ளது.
குழப்பம்:
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா
எம்.பி., ரங்கராஜன் கூறியதாவது:ரயில்வே தேர்வு வாரியம் ஆங்கிலத்தில்
வெளியிட்ட, 'குரூப் டி' தேர்வுக்கான விளம்பரங்களில், 'சான்றிதழ்
நகல்களுக்கு, அரசு அதிகாரி ஒப்பம் வேண்டும்' என, உள்ளது. ஆனால், தமிழில்
வெளியான விளம்பரங்களில், 'அரசு அதிகாரிகள் ஒப்பம் தேவைஇல்லை. சுய
ஒப்பமிட்டு, சான்றிழ் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கலாம்' என, கூறப்பட்டு
உள்ளது.மேலும், இந்தத் தேர்வுக்கு, ஆன் - லைனில் விண்ணப்பிக்கும் வசதியும்
செய்து தரப்பட்டது. 'ஆன் - லைனில் விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ்
நகல்களுக்கு, சுய ஒப்பம் போதும்' என, கூறப்பட்டு உள்ளது.ரயில்வே தேர்வு
வாரியம், கடந்த ஆண்டு நடத்திய தேர்வின் போது, அரசு அதிகாரிகள் ஒப்பம்
தேவையில்லை என்பதை ஏற்று, விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது.ஆனால், இப்போது
தெற்கு ரயில்வே நடத்தும் தேர்வில், இப்படி நடந்து கொள்வது ஏற்க முடியாது.
வன்முறை:
ரயில்வேயின் காலியிடங்களுக்கு நடந்த தேர்வை,
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள வேறு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்
எழுத முனைந்த போது வன்முறை வெடித்தது. தேர்வு எழுத வந்தவர்களை, அடித்து
விரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.இதனால், அனைத்து மண்டலங்களுக்கும், ஒரே
நேரத்தில் தேர்வு நடத்தும் முறை துவங்கப்பட்டது. தற்போது, தெற்கு
ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தேர்வு நடக்கும் போது, தேவையற்ற
காரணங்களை கூறி, தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது,
தமிழகத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்தும்.எனவே, ரயில்வே வாரியம், உடனடி
நடவடிக்கை எடுத்து, தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை ஏற்று, தேர்வு எழுத
அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...