இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய்
எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான
பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர்
1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு
மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.
ஏடிஎம் இயந்திரம்
அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கமே, வங்கிக்குப் போய் வரிசையில் நின்று பணம்
எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகப் பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் சேமித்து
வைக்கவும்தான்.
ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப்
பயன்படுத்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது
வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன்படுத்துவதில் புதிதாக கொண்டுவரப்
பட்டிருக்கும் நடைமுறைகள் என்னென்ன என்று முதலில் பார்த்துவிடுவோம்.
1. சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர்
தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை
எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள்
தேவைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.
2. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளில்
பயன்படுத்த ஐந்து வாய்ப்புகள்தான். அதுவும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து
முறையும், சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும்
ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் மூன்று முறையும்
பயன்படுத்தலாம். அதற்குமேல் செய்யும் பரிமாற்றங்களுக்குப் பயன்பாட்டுக்
கட்டணம் வசூலிக்கப் படும்.
3. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் வரையும், அதோடு வேறு ஏதாவது சேவைக் கட்டணம் இருந்தால் அதனையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளலாம்.
ஆர்பிஐயின் இந்தப் புதிய நெறிமுறை கள் மக்களை
பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று
சம்பாதிக்கும் அனைவருமே பணத்தை மொத்தமாகக் கையில் வைத்துக்கொண்டு
செலவழிப்பதில்லை. சராசரியாக இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும்
ஒருவர் மாதத்துக்கு ஏடிஎம்மில் 10 – 12 முறை பரிவர்த்தனை செய்கிறாராம்.
தமிழகத்தில் தேசிய சராசரியைவிட பயன்பாட்டு
விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.அதிலும் மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரத்தைப்
பயன்படுத்துவது என்பது மொத்த பயன்பாட்டில் 35 – 40% என்ற அளவில்
இருந்தாலும், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கான பயன்பாடு
என்பது குறைந்தபட்சம் 8 – 10 என்ற அளவிலும் உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை தருவதற்காக
எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி யிருப்பதால் பயன்பாட்டுக் கட்டணத்தை
விதிக்க வேண்டும் என வங்கிகள் ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்ததால், இப்போது
இந்தப் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது ஆர்பிஐ.
ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம்
இயந்திரங்கள் நாடு முழுக்க துவங்கப்பட்டதற்கு காரணமே பணம் எடுப்பதற்காக
எல்லோரும் வங்கியைத் தேடி வரவேண்டியதில்லை. காரணம், வங்கியில் ஊழியர்கள்
எண்ணிக்கை போதிய அளவில் இல்லை.
இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் வீணாகிறது
என்கிற மாதிரியான பல காரணங்களினால்தான்.கடந்த காலங்களில் வங்கி ஊழியர்
களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத
வங்கிகள் ஏடிஎம் இயந்திரங் களின் எண்ணிக்கையை மட்டும் போட்டிபோட்டுக்கொண்டு
உயர்த்தியது.
வங்கிக்கே வராதீர்கள்.
உங்களின் எல்லா வேலைகளையும் ஏடிஎம் இயந்திரம்
மூலமே செய்து கொள்ளுங்கள் என்று எல்லா வங்கிகளும் சொன்னது. கேட்காமலே
ஏடிஎம் கார்டு தந்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்குப்
பழக்கப்படுத்தியபின், இப்போது திடீரென ஐந்து முறைக்குமேல் எடுத்தால்
கட்டணம் என்று சொல்வது வாடிக்கை யாளர்களுக்கு பெரும் பாதிப்பையே
ஏற்படுத்தும்.
சரி இனி வங்கிக்கே நேரடியாகச் சென்று பணத்தை
எடுக்கலாம் எனில், அங்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கத் தான் வேண்டும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க, அதைப் பராமரிக்க என ஆண்டுக்கு 60
ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை செல்கிறது.
சில தனியார் வங்கிகள் 1,000 ரூபாய்கூட
வசூலிக்கின்றன. (சில தனியார் வங்கி களில் மாதத்துக்கு நான்குமுறை மட்டுமே
நேரடியாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல்
சென்றால், 90 ரூபாய் சேவைக் கட்டணம் என்ற அளவிலும், 1,000 ரூபாய்க்கு 5
ரூபாய் என்ற அளவிலும் கட்டணம் வசூலிக்கின்றன.)
எல்லாவற்றுக்கும் மேலாக, நேரத்தைச்
செலவழித்துதான் வங்கிக்குச் சென்றுவர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில்
இன்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் பல சமயங்களில் செயலிழப்பதால், அது
சரியாகும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது
மீண்டுமொருநாள் வங்கிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதுமாதிரியான அலைக்கழிப்புகளுக்கு வங்கிகள்
என்ன இழப்பீட்டை வாடிக்கையாளர்களுக்கு தரப்போகிறது என்று கேட்கிறார்கள்
மக்கள்.தற்போது வந்திருக்கும் புதிய விதிமுறைகள்படி வங்கிகளுக்கு சில
ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றாலும், புதிய கட்டணங் களினால்
ஏடிஎம் பயன்பாடு குறைந்து வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக
வரும்பட்சத்தில் அங்கு ஊழியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால்
மட்டுமே பணப்பட்டுவாடா எளிதில் நடக்கும்.
ஊழியர்கள் எண்ணிக்கையை உடனடி யாகப் பெருக்குவது
வங்கிகளுக்கு அதிக செலவு பிடிக்கும் அம்சமாகவே இருக்கும். தவிர, அதை
உடனடியாகச் செய்வதும் சாத்தியமற்றது.தவிர, ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய்
செலவு செய்துதான் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை அமைத்திருக்கின்றன
வங்கிகள்.
இனி இந்த இயந்திரங்களின் பயன்பாடு மிகப் பெரிய
அளவில் குறையும் என்கிறபோது, இதனை மீண்டும் ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாயம்
வங்கிகளுக்கு ஏற்படும். ஆக, தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில்
மீண்டும் கற்காலத்தை நோக்கி செல்வதற்கான நடவடிக்கைகளையே ஆர்பிஐயின் இந்தப்
புதிய விதிமுறைகள் வழிவகுக்கிற மாதிரி இருக்கிறது என்பதே வங்கி
வாடிக்கையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்த விஷயத்தில் முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தினைக் கொன்ற கதையாக ஆகிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...