சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் இன்னும், 25 நாட்களில் நடைபெற உள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை, இன்று அல்லது நாளை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பெட்ரோல், டீசல் விலை, சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப அமைகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, உள்ளூர் சந்தைகளில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும். கடந்த ஜூன் மாதம், ஒரு பேரல் கச்சா எண்ணெய், 115 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், படிப்படியாக அதன் விலை குறைந்து, கடந்த வார துவக்கத்தில், 82 டாலராக இருந்தது. இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களின் விலைகள், உள்நாட்டில் குறைக்கப்பட்டன. அதற்கு முன்னதாக, நான்கு முறை டீசல் விலை குறைப்பை, பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்தன. அக்டோபர் 18ல், டீசல் விலை, லிட்டருக்கு, 3.37 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்நடந்து முடிந்த, அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி மலர்ந்தும், மலர உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களையும் கைப்பற்ற பா.ஜ., முடிவு செய்து உள்ளது. அந்த மாநிலங்களின் வாக்காளர்கள் மத்தி யில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மேலும் விலை குறைப்பை அறிவிக்க உள்ளது. அதன் படி, இன்று அல்லது நாளை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில், 2.50 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு குறைக்கப்பட்டால், பெட்ரோல் விலை, கடந்த ஆகஸ்ட் முதல், தொடர்ந்து ஆறாவது முறையாக குறைக்கப்பட்டதாக இருக்கும்; டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டதாக இருக்கும்.
ஓராண்டிற்கு முந்தைய நிலை வந்தது : பெட்ரோல் விலையை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோலிய நிறுவனங்களே மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு, பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் முதல், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, பெட்ரோல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், 16 மாதங்களுக்கு முந்தைய, விலை குறைவான நிலையை பெட்ரோல் அடைந்துள்ளது.
கடந்த 18 முதல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளதால், டீசல் விலையில் ஒரு முறை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஓராண்டிற்கு முன் டீசல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அந்த நிலையை இப்போது அடைந்துள்ளது.
நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் லாபம் : கடந்த ஜூனில், ஒரு பேரல் கச்சா எண்ணெய், 115 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இப்போது, 87 டாலராக குறைந்துள்ளது. இதனால், ஒரு சிலிண்டருக்கு, 7 - 8 அமெரிக்க டாலர்கள் லாபமாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது. அது போல, டாலர் - ரூபாய் மதிப்பு ஸ்திரமடைந்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு லாபம் அதிகரித்துள்ளது. இந்த லாபத்தை குறைத்துக் கொண்டு விலை குறைப்பு செய்ய, பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...