ஆண்டொன்றுக்கு காணாமல் போகும் 45 ஆயிரம் பேர் - கோடிகளில் புரளும் வியாபாரம்
குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் நம் நாட்டில்
தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ரயில்
நிலையங் களிலும் காணாமல் போன சிறுவர், சிறுமியர்களின் புகைப்பட
விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாவதை பார்த்தாலே இதன் தீவிரம் புரியும்.
ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ய,
பிச்சை எடுக்க, விபச்சாரத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, குழந்தை
தொழிலாளர்களாக பயன்படுத்த, பணயம் வைத்து மிரட்டுவதற்காக என்று பல்வேறு
காரணங்களுக்காக பிறந்த குழந்தைகளும், சிறுவர்-சிறுமிகளும் அதிக அளவில்
கடத்தப்பட்டு வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சிலரும், நெட்வொர்க்
அமைத்து பலரும் குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் நெட்வொர்க்
தனிப்பட்ட முறையில் கடத்தலில் ஈடுபட்ட பலரை
போலீஸார் கைது செய்து குழந்தை களையும் மீட்டுள்ளனர். ஆனால் பல மாநிலங்களில்
தொடர்பை ஏற்படுத்தி இதை ஒரு தொழிலாகவே செய்து வரும் கும்பலை சேர்ந்தவர்களை
போலீஸாரால் பிடிக்க முடிவதில்லை. இந்த விவகாரத்தில் இப்போது விழித்துக்
கொண்டுள்ள தமிழக போலீஸ், குழந்தைக் கடத்தலை தடுக்க தனிப் பிரிவை உருவாக்க
முயற்சி எடுத்து வருகிறது.
தமிழ்நாடு குற்றவியல் ஆவணக் காப்பகம் கொடுத்துள்ள தகவலில் இதுபற்றி கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைக்
கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 முதல் 18 வயதுக்கு
உட்பட்டவர்கள் 136 பேர். மற்ற அனைவரும் குழந்தைகள். கடந்த நான்கு
ஆண்டுகளில் 2,982 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 1,700 பேர் மட்டுமே
கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை
தெரியவில்லை.
4 மாவட்டங்களில் அதிகம்
சென்னை, வேலூர், சேலம்,கிருஷ்ணகிரி ஆகிய நான்கு
மாவட்டங்களில்தான் குழந்தைகளைத் திருடி விற்பனை செய்யும்சம்பவங்கள்
அதிகமாக நடந்துள்ளன. இங்கு குழந்தைகள் ரூ.2 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விலை
வைத்து விற்பனை செய்யப்படுகின்றனர். பிறந்த குழந்தைகளைக் கடத்தும்
சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் 74 சதவீதம் நடக்கிறது. பணக்கார
குழந்தைகளை விட, ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை கடத்தும்
சம்பவங்கள்தான் அதிகமாக நடந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைக் கடத்தல் பற்றி தேசிய குற்றவியல்
ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் ஆண்டுக்கு 44,475
குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் 13,881 பேரின் நிலைமை என்னவென்றே
கண்டுபிடிக்க முடிவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திராசிங்
நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசும்போது, “குழந்தைகள் காணாமல் போகும்
சம்பவங்களில் சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. குழந்தைகள்
குறித்த புகார்களில் போலீஸார் மெத்தனமாக செயல்படுகின்றனர்” என்று
குறிப்பிட்டுள்ளார்.
இலவச தொலைபேசி 1098
குழந்தைக் கடத்தல் அதிகரித் திருப்பதை
தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், “குழந்தைகள்
கடத்தல் சம்பவங்களுக்கு போலீஸார் அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கென போலீஸில் தனிப் படையையும், சிபிஐயில் தனிப்பிரிவையும்
உருவாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப் புக்காக உருவாக்கப்பட்ட இலவச
தொலைபேசி எண் ‘1098’ திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு
உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் எந்த அரசும் இதுதொடர்பாக நடவடிக்கை
எடுத்ததாக தெரியவில்லை.
தமிழகத்துக்கு 3வது இடம்
குழந்தைகள் கொலை செய்யப்படுவதில் இந்தியாவில்
தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக் கிறது. தேசிய ஆவணக் காப்பகம்
வெளியிட்டுள்ள தகவலின் படி ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரத்தில் 141 குழந்தை
களும், உத்தரப் பிரதேசத்தில் 96 குழந்தைகளும், தமிழகத்தில் 90 குழந்தைகளும்
கொலை செய்யப்படுகின்றனர். அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் 73, கேரளத்தில்
49 குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். பிஹாரில் 28, டெல்லியில் 23
குழந்தைகள் ஒரு ஆண்டில் கொலை செய்யப்படுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு கடத்தல்
இந்தியக் குழந்தைகளை வெளிநாட்டினர் அதிகமாக
விரும்புவதும் பெருகிவரும் குழந்தைக் கடத்தலுக்கு ஒரு காரணமாக
கூறப்படுகிறது. தொண்டு நிறுவ னங்கள் மூலம் திருட்டுத்தனமாக வெளிநாட்டு
தம்பதிகளுக்கு குழந்தைகளை விற்பது அதிகரித் துள்ளது. இந்த வியாபாரம்
கோடிக்கணக்கில் நடப்பதாக கூறப்படுகிறது. சென்னையை மையமாக கொண்டு செயல்பட்ட
‘மலேசியன் சோஷியல் சர்வீஸ்’ என்ற நிறுவனம் இவ்வாறு குழந்தைகளை கடத்தி
வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வேலையை செய்துள்ளது. கடத்தப்படும்
குழந்தைகளுக்கு போலியான தாய், தந்தையை உருவாக்கி, போலி ஆவணங்கள் தயாரித்து
வெளிநாட்டு தம்பதிகளுக்கு தத்து கொடுப்பதுபோல பல கோடிகளுக்கு விற்றுள்ளனர்.
சிபிஐ போலீஸ் நடவடிக்கை
120-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்நிறுவனம்
விற்பனை செய்திருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ
போலீஸார் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 300-க்கும்
மேற்பட்ட இந்திய குழந்தைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து,
குயின்ஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம்
கடத்தப்பட்டிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தைக்
கடத்தல் சம்பவங்களை தடுக்க போலீஸார் மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...