Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அமைதிக்கான பரிசு: இந்தியாவின் கைலாஷ், பாகிஸ்தானின் மலாலாவுக்கு நோபல்

          இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோருக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி - மலாலா


     இதுதொடர்பாக நார்வேயில் உள்ள நோபல் தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

           2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலா யூசஃப்சாய்க்கும் வழங்குவது என்று நோபல் பரிசுக் குழு முடிவு செய்துள்ளது.

         குழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக அவர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

         குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படக் கூடாது. உலகின் ஏழை நாடுகளில் தற்போதைய மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர், 25 வயதுக்கும் கீழ் உள்ளனர். அமைதியான உலக வளர்ச்சிக்கு குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.

       குறிப்பாக, பூசல் நிறைந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான உரிமைகள் மீறப்படுவது, தலைமுறை தலைமுறையாக வன்முறை தொடர்வதற்கு வழிவகுக்கிறது. நிதி ஆதாயத்துக்காக குழந்தைகள் சுரண்டப்படுவதற்கு எதிராக, மகாத்மா காந்தியடிகளின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, கைலாஷ் சத்யார்த்தி அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

           அதேபோல, மலாலா யூசஃப்சாய் சிறுமியாக இருந்தபோதிலும் பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார். குழந்தைகளும், இளையவர்களும் கூட தங்களின் நிலைமையை மேம்படுத்திக் கொள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்பதற்கு உதாராணமாக மலாலா விளங்குகிறார்.
இதை அவர் அபாயகரமான சூழலில் செய்துள்ளார். தனது வீரமான போராட்டத்தால் அவர் பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்கான செய்தித் தொடர்பாளராக மாறியுள்ளார்.

       ஓர் இந்தியரும், ஒரு பாகிஸ்தானியரும், ஒரு ஹிந்துவும், ஒரு முஸ்லிமும் (சத்யார்த்தி, மலாலா) கல்விக்காகவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் நடத்தப்படும் பொதுவான போராட்டத்தில் இணைவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று நோபல் பரிசுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி

                   மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் பிறந்த சத்யார்த்தி, தில்லியில் மின்னியல் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு, 1983-இல் "பச்பன் பச்சாவ் ஆந்தோலன்' (குழந்தைகளைப் பாதுகாப்போம்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

       தற்போது 60 வயதாகும் சத்யார்த்தி, குழந்தைகளின் உரிமைகளுக்காக உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். ராபர்ட் கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் சத்யார்த்தி ஆவார். இவருக்கு முன்பாக அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோதிலும், அவர் அல்பேனியாவில் பிறந்தவர் ஆவார். நோபல் பரிசு பெறும் ஏழாவது இந்தியர் சத்யார்த்தி.

 மலாலா யூசஃப்சாய்

                பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோராவில் கடந்த 1997-இல் பிறந்த மலாலா (வயது 17), பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி தீவிர பிரசாரம் செய்து வந்தார். பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் செயல்படும் தலிபான்களின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி உள்ளிட்ட ஊடகங்களுக்கு கட்டுரை எழுதினார்.
இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள், கடந்த 2012ஆம் ஆண்டில், பள்ளிக்கூடத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மலாலா மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த மலாலா, சிகிச்சைக்காக பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினார். தற்போது பர்மிங்ஹாம் நகரில் பெற்றோருடன் தங்கி, தனது படிப்பைத் தொடர்ந்து வரும் மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது 17 வயதாகும் அவர், ஷகாரோவ் பரிசு உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். நோபல் பரிசு வென்றவர்களில், மிக இளம் வயதுள்ளவர் இவர்தான்.

குழந்தைத் தொழிலாளர் உள்பட சிக்கலான சமூகப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆற்றி வரும் சேவைக்கான அங்கீகாரமே இந்த நோபல் பரிசு.
- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்காக கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவரது இந்தச் சாதனைக்காக ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது. அதேபோல், இப்பரிசைப் பெறும் பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாயின் வாழ்க்கை, துணிச்சலும், வீரமும் நிறைந்து காணப்படுகிறது. அவருக்கும் எனது வாழ்த்துகள்.
- பிரதமர் நரேந்திர மோடி
இது நாட்டுக்கு பெருமிதமான நேரம். சத்யார்த்திக்கு இப்பரிசு அளிக்கப்படுவது அவரது மகத்தான சேவைக்கான அங்கீகாரம். மலாலாவுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறேன். இந்த விருது ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளது.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
பாகிஸ்தானின் பெருமையாக மலாலா விளங்குகிறார். அவர் தனது நாட்டவரைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளார். அவரது சாதனை ஈடு இணையற்றது. அவரது போராட்டத்தில் இருந்து உலக மாணவர்களும், மாணவிகளும் ஊக்கம் பெற வேண்டும்.
- பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive