ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,
உள்ளிட்ட முக்கிய கல்வி நிலையங்களில் மாணவிகள் சேருவதற்கான நுழைவுத்
தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திலுள்ள (மஈஅஅச)
குறைகளைக் களைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் பயிற்சி மையங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:
இந்திய
தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐ.ஐ.டி.,) தேசிய தொழில்நுட்பக் கழகம்
(என்.ஐ.டி.,) உள்ளிட்ட முன்னோடி கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்புகளில்
மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகப் புதிய திட்டத்தை மத்திய இடை
நிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு
முழுவதும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் நன்றாகப் படிக்கும் மாணவிகள்,
ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சி மூலம் அவர்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற முன்னோடி கல்வி
நிலையங்களில் நுழைவதற்கு வழி செய்யப்படும்.
இந்தப் பயிற்சி
வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில்,
பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பயிற்சி வகுப்புக்கான இடங்களையும் தேர்வு
செய்ய கோரப்பட்டுள்ளன.
அதில், தமிழகத்தில்
இரண்டு நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழகம் கல்வியில் முதன்மை பெற்று
விளங்கும் மாநிலமாகும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், ஏராளமான
மாணவிகள் தகுதி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வியப்பு அளிக்கிறது:
பயிற்சி அளிக்கப்படும் மையங்களாக இந்தியா முழுவதும் 151 இடங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்துக்கு இரண்டு இடங்கள் மட்டுமே
ஒதுக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. அதே சமயம், பிற மாநிலங்களில்
மையங்களின் எண்ணிக்கை அதிக அளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
அறிவியல் பாடப் பிரிவில் ஏராளமான மாணவிகள் படித்து வரும் சூழலில், வெறும்
இரண்டு மையங்களை மட்டுமே ஒதுக்கியிருப்பது மத்திய அரசின் திட்டத்தில்
மாணவிகளின் பங்களிப்பை பாதிக்கச் செய்து விடும். மேலும், தகுதி பெற்ற
மாணவிகள் பயிற்சி வகுப்புகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை
ஏற்படும். இது, இந்தத் திட்டத்துக்கான வரவேற்பைக் குறைத்து விடும்.
சென்னை
சேர்க்கப்படாதது ஏன்? பெருநகரங்களில் முக்கியமான நகரமாக விளங்கும்,
சென்னைகூட பயிற்சி மையங்களின் பட்டியலில் இடம்பெறாதது ஆச்சரியம்
அளிக்கிறது. எனவே, தகுதி படைத்த மாணவிகள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும்
வகையில், ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் அவற்றை அமைக்கலாம்.
எனவே, தமிழகத்தில்
சென்னை நகரத்தையும் இணைத்து பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும். அதற்குத் தகுந்தாற்போன்று, மத்திய இடை நிலை கல்வி வாரியமானது
தனது திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.
மேலும், இந்தத்
திட்டத்தின் கீழ் மாணவிகள் விண்ணப்பிக்கும் வகையில், அதற்கான கடைசி தேதியை
நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
இதன்மூலம்,
தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் பங்கேற்க வழி ஏற்படும்
என்று தனது கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...