நல்ல செய்தி: நீண்ட தூரப் பயணத்தின்போது டோல்கேட்களில் டயர் கடுக்கக் காத்திருந்துவிட்டு, ‘‘சில்லறை இல்லங்க!’’ என்று இனி நீங்கள் டோல் ஊழியர்களிடம் பிரச்னை செய்ய வேண்டியதில்லை.
சோகமான செய்தி: ஆனால், இந்த நடைமுறை இப்போது நம் ஊர் நெடுஞ்சாலைகளில் இன்னும் அமலுக்கு வரவில்லை. மும்பையிலிருந்து டெல்லிக்கோ அல்லது டெல்லியில் இருந்து மும்பைக்கோ நீங்கள் பயணம் செய்தீர்கள் என்றால், இதை நீங்கள் அனுபவிக்கலாம். இதற்கு உங்கள் கார்களில் - RFID என்னும் Radio Frequency Identification Tag என்னும் ஸ்மார்ட் டேக் இருக்க வேண்டும்.
ETC எனும் இந்த எலெக்ட்ரானிக் டோல் சிஸ்டத்தை சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அக்டோபர் 31 முதல் டெல்லி - மும்பை சாலைகளுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார். 55 டோல் ப்ளாஸாக்களில் ஏற்கெனவே இதை நடைமுறைக்குக் கொண்டு வந்து, டெஸ்ட்டும் செய்யப்பட்டு விட்டதாகவும் சொன்னார் நிதின் கட்கரி.
எலெக்ட்ரானிக் டோல் மூலம் பணம் செலுத்தும் கார்களுக்கென்று, டோல்களில் தனி லேன் அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் டோல்கேட்டில் தேவையில்லாமல் காத்திருக்கத் தேவையில்லை; பயணமும் ஈஸியாக அமையும்.
இந்த ‘ஸ்மார்ட் டேக்’ மூலம் உங்கள் கார் ரிஜிஸ்ட்ரேஷன் முதல் உங்கள் முகவரி, இன்ஷூரன்ஸ், ரோடு டாக்ஸ் வரை அனைத்தும் டேட்டா பேஸில் டிஸ்ப்ளே ஆகும். ஆனால், இவற்றை டோல் மற்றும் டிரான்ஸ்போர்ட் அதிகாரிகள் மட்டுமே கண்காணிக்க முடியும். 2016 இறுதிக்குள் கார் உரிமையாளர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மாதிரி இந்த 'ETC' ஸ்மார்ட் டேக் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு ‘வாஹன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறது அரசு. விரைவில் நம்மூருக்கும் வரவிருக்கிறது வாஹன்.
வாஹன் திட்டம், ‘ஆதார்’ மாதிரி ஆதரவற்றுப் போகாமல் இருந்தால் நல்லது!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...