தரிசுநில தாவரங்கள், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்தியாவில் பதிவான வாகனங்களின் எண்ணிக்கை 165 மில்லியன். இவற்றிற்கான தினமும் எரிபொருள் அளவு 167 மில்லியன் லிட்டர். பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எத்தனால் உதவுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு எத்தனால் உற்பத்தி 5.5 பில்லியன் லிட்டர். இதில் 300 மில்லியன் லிட்டரை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துகிறோம். இதன்மூலம் 2017 க்குள் பெட்ரோல் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்கலாம். காலநிலை மாற்றம், கரும்பு உற்பத்தி மற்றும் கரும்பாலைகளில் மொலாசஸ் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் குறிக்கோளை எட்டுவது சிரமம். எத்தனால் தயாரிக்க, மொலாசஸூக்குப் பதில் மாற்றுப் பொருளைக் காண வேண்டும்.மதுரையில் ஆய்வு: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி உயிர் தொழில் நுட்ப பிரிவில் இதுபற்றிய ஆய்வு நடக்கிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறியதாவது: சப்பாத்திக் கள்ளி, நார் கற்றாழை, சோற்றுக் கற்றாழை, பிரண்டை, கார்லுமா, யானை நெருஞ்சியை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க ஆய்வு செய்கிறோம்.
நார் கற்றாழையின் குருத்தை அரைத்து, பிழிந்தெடுத்த சாறுடன் சிறிதளவு தேங்காய் தண்ணீர் சேர்க்க வேண்டும். இவற்றை ஈஸ்ட் அல்லது சைமேமோனஸ் பாக்டீரியா கொண்டு, எட்டு நாள் நொதிக்க வைக்க எத்தனால் உற்பத்தியாகிறது. இந்த எத்தனாலின் அளவு, சக்கரை மொலாசஸ் மூலம் சாராய ஆலைகளில் பெறப்படும் எத்தனாலுக்கு இணையாக உள்ளது. தாவரங்கள் வறண்ட நிலத்தைச் சேர்ந்தவை. வைக்கோலில் எத்தனால்: வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. மற்றொரு ஆய்வுமூலம், வைக்கோலில் அதிக எத்தனால் உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளோம். வைக்கோலை உடைத்து சிதைக்க காளான் பூஞ்சைகளைப் பயன்படுத்துவது புதிய அணுகுமுறை. இப்பூஞ்சைகள் மூலம் வைக்கோல் 60 நாட்களுக்கு நொதிக்க வைக்கப்படும். அப்போது வைக்கோலில் உள்ள ஸ்டார்ச், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் சிறிய சர்க்கரையாக மாற்றப்படும். இவை ஈஸ்ட் மற்றும் சைமேமோனஸ் பாக்டீரியாவால் பயன்படுத்தப்பட்டு எத்தனால் உற்பத்தியாகிறது.
நொதித்த வைக்கோலுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்து, கூழாக மாற்றி, நீர்சேர்த்து, நீராவியால் தொற்று நீக்கம் செய்வர். பின் ஈஸ்ட் அல்லது சைமேமோனஸ்சுடன் கலந்து 10 நாள் நொதிக்க வைத்து, எத்தனால் வடித்தெடுக்கப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...