உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைந்தபட்ச பாடத் திட்டங்களை
மட்டுமே நடத்தி தேர்ச்சியடைய செய்வதற்கான, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம்,
நடப்பாண்டு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும்
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு பள்ளிகளில்
மட்டும் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றலில் ஆர்வத்தை
ஏற்படுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற செய்வதற்காக, அனைவருக்கும் இடைநிலை
கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார் பில், பிரிட்ஜ் கோர்ஸ் கடந்தாண்டு
துவங்கப்பட்டது.
கட்டாய கல்வி உரிமச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு
வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் தேர்ச்சியடைய செய்ய
வேண்டும் என விதி உள்ளது. இதனால், கல்வியில் பின்தங்கிய நிலையில், ஒன்பதாம்
வகுப்புக்குள் நுழையும் மாணவர்களால், தேர்ச்சி பெற முடியா சூழல்
ஏற்படுகிறது.
சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்தாலும்,
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது கடினம். இந்த முரண்பாட்டை
தவிர்க்கவே, ஒன்பதாம் வகுப்புகளில் பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம்
துவங்கப்பட்டது. இத்திட்டப்படி, காலாண்டுத் தேர்வு முடிவில், குறைந்த
மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களை தனிக்குழுவாக்கி, பிரத்யேக ஆசிரியர்கள்
வாயிலாக, பாடத்திட்டங்கள் கையாளப்படுகின்றன.
இதில், கடந்தாண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம்
உள்ளிட்ட மூன்று பாடங்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த
வகுப்புகளை, வேலையில்லா பட்டதாரி ஆசிரியரை கொண்டோ அல்லது பாட ஆசிரியர்கள்
வாயிலாகவோ நடத்த அனுமதிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பாடத்திட்டங்களை மட்டும் நடத்தி,
தேர்வு வைத்து, கற்றலை எளிமைப்படுத்த உத்தரவிடப்பட்டது. தவிர, பத்தாம்
வகுப்புக்கு, தொடர்ச்சியாக வரும் பாடங்கள் மீதும், பிரத்யேக கவனம்
செலுத்தப்பட்டது. இதனால், ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம்
அதிகரித்ததோடு, பத்தாம் வகுப்பிலும் பாடங்களை உள்வாங்கி கொள்வதாக,
ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம், நடப்பாண்டில் விரைவில் துவக்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட
அதிகாரிகள் சிலர் கூறுகையில், "நடப்பாண்டுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் அறிவிப்பு
விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், கூடுதலாக,
அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், குறைந்தபட்ச பாடத்திட்டங்களை
வரையறுத்து, வகுப்புகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரிட்ஜ் கோர்ஸ் வாயிலாக, அதிக மதிப்பெண்கள்
எடுக்கும் மாணவர்களுக்கு இணையாக, பின்தங்கிய மாணவர்களது கல்வி தரத்திலும்
முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களது
மதிப்பெண் பட்டியல், பின்தங்கிய மாணவர்களின் விபரம் குறித்த தகவல்களை
சேகரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...