மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இ- லேர்னிங் போர்டல் எனப்படும் மின்னணு கற்றல் துவக்கவிழா
திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள திரைப்படக்காட்சி அரங்கில் மின்னணு கற்றலை
துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
கற்றல் என்பது வயது, காலத்தை கடந்து கருவிலிருந்து கல்லறை வரை தொடரும்
பயணம். நம்மைச் சுற்றியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து நாமும் வளர
வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின்
தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் புத்தகங்களைக் கொண்டு, கற்கும் முறையானது
மின்னணு கற்றல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
உலகமயமாக்கலின் வளர்ச்சியில் கல்வித்துறையும், பல்வேறு தடைகளைத் தாண்டி
முன்னேறிக் கொண்டு வருகிறது. கரும்பலகையில் கற்பித்த காலங்களைக் கடந்து
கணினியின் உதவியுடன் இன்று கற்றுக் கொண்டுள்ள நிலையில், மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2-வது பல்கலைக்கழகமாக
மின்னணுக் கற்றலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கற்றல், கற்பித்தல் முறையில்
மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும், என்றார்.
பதிவாளர் என்.ராஜசேகர், ஆட்சிக்குழு உறுப்பினர் கே.பிச்சுமணி, கல்லூரி
வளர்ச்சிக் குழுத் தலைவர் எம்.ராஜியக்கொடி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தொலைநிலைக் கல்வி இயக்ககம், கற்றல் மேலாண்மை அமைப்பு எனப்படும் எல்எம்எஸ்
மற்றும் மின்னணு புத்தகங்கள் எனப்படும் இ-புத்தகம் பற்றிய ஒளித் தொகுப்பு
திரையிடப்பட்டது. முன்னதாக, தொலைநிலைக் கல்வி இயக்குநர் ஜே.பாலன்
வரவேற்றுப் பேசினார். கூடுதல் இயக்குநர் கே.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் ஆசிரியர்கள்,அலுவலர்கள், பல்கலைக்கழகத்தின்
பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...