பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போது தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
சில கல்லூரிகள், சான்றிதழ்களைத் திரும்பக் கேட்பவர்களின் அவசரத்துக்கு ஏற்ப
பிணையத் தொகையை உயர்த்தி வாங்கிக்கொண்டு, சான்றிதழ்களைத் தருவதாகவும்
தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் தேர்வின்போது, அவர்களின்
கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவது வழக்கமான
நடைமுறை.
இதில் அரசுத் துறைகளைப் பொருத்தவரை பணியாளர் தேர்வின்போது சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பிறகு அவற்றின் நகல்களை மட்டும் ஆவணத்துக்காக
வைத்துக்கொண்டு, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவரிடமே திரும்ப
ஒப்படைக்கப்படும்.
ஆனால், தனியார் கல்வி நிறுவன நிர்வாகம், தங்களது நிறுவனங்களுக்குப்
பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் பிணையப் பத்திரத்தில் ஒப்பந்தம்
போட்டுக்கொள்வதோடு, பத்தாம் வகுப்பு முதல் உயர் கல்வி படிப்பு வரையிலான
அனைத்துச் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்ட பிறகே, பணிக்கான உத்தரவை
வழங்குவதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தனியார் கல்லூரிகளில் பணிக்குச் சேரும் உதவிப் பேராசிரியர், வெளியே
வேறு பணி கிடைத்துச் செல்லும்போது, பணியிலிருந்து விலக வேண்டும் என்றால்,
ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரையிலான ஊதியத்தை செலுத்திவிட்டு சான்றிதழை
பெற்றுக்கொள்ளும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு சில கல்லூரிகள் பணியிலிருந்து விலகுபவரின் அவசரத்துக்கு ஏற்ப
பிணையத் தொகையை உயர்த்திக் கேட்பதாகவும், அவ்வாறு செலுத்தவில்லையெனில்
சான்றிதழ்களைத் தர மறுப்பதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில், ஈரோடு அருகே நத்தக்கடையூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல்
கல்லூரியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியருக்கு எத்தியோப்பியாவில் பணி
வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விவரத்தை, தான் பணிபுரியும் கல்லூரியில்
தெரிவித்த அந்த பேராசிரியர், 5 நாள்களில் எத்தியோப்பியா செல்ல வேண்டும்
என்பதால் தனது சான்றிதழ்களை உடனடியாகத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது, கல்லூரியில் ஊழியர்கள் சிலர் விடுமுறையில் சென்றுள்ளனர். எனவே, சான்றிதழ்களைத் திரும்பத் தர மூன்று நாள்களாகும்.
மேலும் ஒப்பந்தப்படி இரண்டு மாத ஊதியப் பணத்தை இப்போதே செலுத்த வேண்டும்.
அவ்வாறு இன்றி, உடனடியாகச் சான்றிதழ்கள் வேண்டும் என்றால், 4 மாத
ஊதியத்தைச் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
வேறு வழியின்றி, அந்தப் பேராசிரியர் 4 மாத ஊதியமான ரூ. 2 லட்சத்தை
கல்லூரியில் செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுச்சென்றதாக சக
பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள சில கல்லூரிகள் இதுபோன்ற சூழ்நிலைகளில்
சான்றிதழ்களைத் தர மறுப்பதாகவும், வேறு சில கல்லூரிகள் அரசு பணிகளுக்கு
விண்ணப்பிப்பதற்காகச் சான்றிதழ்களைக் கேட்பவர்களை பணியிலிருந்து
நீக்கிவிடுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் சிலர் கூறியது:
அரசுப் பணிகளைப் பொருத்தவரை ஆயிரம் இடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்டோர் விண்ணப்பிப்பர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை
கிடைத்துவிடாது.
இருந்தபோதும், இதுபோன்று அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அசல்
சான்றிதழ்களைத் திரும்பத் தர கல்லூரிகள் அலைக்கழிப்பது பெருத்த ஏமாற்றத்தை
அளிக்கிறது.
கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பெற விண்ணப்பிப்பது, உயர் கல்வியில் சேர
விண்ணப்பிப்பது போன்ற பிற காரணங்களுக்காக அசல் சான்றிதழ்களைக்
கேட்கும்போதுகூட, பிணையத் தொகை செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறோம்.
இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறோம். எனவே, தனியார் கல்லூரிகள்,
பணியாளர்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக் கூடாது என தமிழக அரசும்,
கல்வித் துறையும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், இப்போது
கல்லூரிகளில் வாங்கி வைத்திருக்கும் அசல் சான்றிதழ்களை உடனடியாக
உரியவர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் கூறியது: தனியார்
கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் பணியாளர்களிடம் ஒப்பந்தம் போடுவது என்பது
வழக்கமான நடைமுறைதான். ஏனெனில், கல்லூரி ஒன்றில் பணிபுரியும் பேராசிரியர்
திடீரென இடையில் பணியிலிருந்து விலகும்போது, வகுப்புகள் பாதிக்கப்படுவதோடு,
மாணவர்களும் பாதிக்கப்படுவர்.
எனவே, இவ்வாறு பாதியில் விலகுபவர்களிடம் பிணையத் தொகை பெறுவது நடைமுறையில்
உள்ளது. அப்போதுதான், புதிய பணியாளர் தேர்வு நடைமுறைகளுக்கான செலவுகளை
ஈடுகட்ட முடியும்.
அதே நேரம், பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதும்,
அவசரத் தேவையின்போது தர மறுப்பதும் ஒருவரின் வாழ்வாதாரத்தையும்,
அரசியலமைப்புச் சட்டப் படியான உரிமையையும் பறிக்கும் செயலாகும்.
இதற்காக, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு எதிராக வழக்குத் தொடரவும், குற்றவியல்
சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது. எனவே, கல்லூரிகள்
பணியாளர்களிடம் ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும். அசல்
சான்றிதழ்களை முடக்கி வைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல என்றார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியது: கல்லூரிகள்
பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளக்கூடாது என
பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைப்புக் கல்லூரிகளும்
இதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.
அதே நேரம், திடீரென பணியிலிருந்து விலகும் பேராசிரியரிடம் பிணையத் தொகை
பெறும் நடைமுறை அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கூட உள்ளது. அண்மையில்
அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு சென்னை ஐஐடி-யில் பேராசிரியர்
வாய்ப்பு கிடைத்தது.
அவர் உடனடியாக பணியிலிருந்து விலக வேண்டியிருந்ததால், விதிகளின்படி மூன்று
மாத ஊதியத் தொகையை அவரிடமிருந்து பெற்ற பிறகே அண்ணா பல்கலைக்கழகம் அவரை
விடுவித்தது.
இதுபோல தனியார் கல்லூரிகளும், பேராசிரியர்களிடம் ஒப்பந்தம் மட்டுமே
போட்டுக்கொள்ள வேண்டும். அசல் சான்றிதழ்களை வாங்கி முடக்கி வைக்கக்கூடாது.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திடமோ அல்லது தொழில்நுட்ப
கல்வி இயக்குநர் அலுவலகத்திலோ உரிய காரணத்துடன் புகார் தெரிவிக்கலாம்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சான்றிதழ்கள் பெற்றுத்தரப்படும்
என்றார்.
இது போன்று செய்யக்கூடிய கல்லூரிகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDelete