350 டன் அரசுப்
பாடநூல்கள் மாயமான விவகாரத்தில் கோவை மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி
அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விரைவில்
அவர்களிடம் மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
2011-12-ஆம்
கல்வியாண்டில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ராஜேந்திரன்,
2012 அக்டோபர் மாதம் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக
மாற்றப்பட்டார்.
முன்னதாக, இவர்
கோவையில் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த காலத்தில் சமச்சீர் பாடத்திட்டம்
தொடர்பாக, நீதிமன்றத்தால் ஏற்கப்படாத பாடப் புத்தகங்கள் அந்தந்த
மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் விநியோகம்
செய்வதற்காக 1 முதல் 10-ஆம் வகுப்புகளுக்காக அச்சடிக்கப்பட்ட சுமார் 350
டன் பாடப் புத்தகங்கள் கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார்
தொடக்கப் பள்ளியிலும், ஒண்டிப்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டன.
இந்த நிலையில்,
இருப்பு வைக்கப்பட்ட புத்தகங்களை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று கூறி,
சில மாதங்களுக்கு முன் இருப்பில் உள்ள புத்தகங்களின் விவரங்களை தமிழக அரசு
கேட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்ட புத்தகங்கள்,
முதன்மைக் கல்வி அலுவலராக ராஜேந்திரன் பணியிலிருந்த காலத்தில் மாயமானதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்
கல்வித் துறை சார்பில் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்ட போது, அவர்
தரப்பிலிருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதால், கடந்த சில
தினங்களுக்கு முன் அவர், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த 24-ஆம் தேதி
தற்போதைய கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் ஞானகௌரி, மாநகரக் காவல்
ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதில், காணாமல்போன 350 டன்
புத்தகங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல் ஆணையர்
உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் மரியமுத்து
தலைமையிலான போலீஸார், இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...