இந்தியாவின் மூன்றாவது வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, செயற்கைக்கோளில் உள்ள திரவ என்ஜின் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்போது, இந்தச் செயற்கைக்கோள் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 320 கிலோமீட்டர் உயரமும், அதிகபட்சம் 35,732 கிலோமீட்டர் உயரமும் கொண்ட பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோள் வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணிக்கு ஏவப்பட்டது.
மொத்தம் 20 நிமிடங்கள் 18 விநாடிகள் பயணத்துக்குப் பிறகு, இந்தச் செயற்கைக்கோள் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 282.5 கிலோமீட்டர் தூரமும் அதிகபட்சம் 20,670 கிலோமீட்டர் தூரமும் கொண்ட தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. அதன் பிறகு, உடனடியாக இந்தச் செயற்கைக்கோளை பெங்களூருவுக்கு அருகில் உள்ள ஹாசன் கட்டுப்பாட்டு மையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி ஆகிய செயற்கைக்கோள்களுக்கு அருகில் இந்தச் செயற்கைக்கோளை எடுத்துச் செல்வதற்காக 4 பாதை அதிகரிப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதில் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி அமைப்புக்காக மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...