ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவப் பணியாளர் தேர்வு, வரும் 12-ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மண்டல
மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள
இடங்கள், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்ட
மருத்துவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப
மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரித்தல் ஆகியவற்றுக்காக மருத்துவர்களைத்
தேர்ந்தெடுப்பதற்கு மருத்துவத் தேர்வு வாரியம் முடிவு செய்தது, இதற்கான
தேர்வு சென்னையில் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருந்தது.
2142 உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் (Assistant Surgeon)
பணியிடங்களுக்கு எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கும், 34 பி.டி.எஸ்.
மருத்துவர்களுக்கும் தேர்வு நடைபெறவிருந்தது. இந்தத் தேர்வில்
பங்கேற்பதற்காக 6,200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதையடுத்து,
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. தேர்வில்
பங்கேற்க இயலாது என தேர்வர்கள் தெரிவித்ததையடுத்து தேர்வு
தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.12)
நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வில்
பங்கேற்கத் தகுதியான மாணவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான புதிய தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...