தகுதிகாண் மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கருணாநிதி - தினமணி
தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும்
ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை ரத்து செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் எனக்குள் (கருணாநிதி) பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். அதில் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டு விட்டது. கடந்த மாதம் வெளியிட்ட பட்டியலின்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசுதான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று புரியவில்லை. அதிலும் தகுதிகாண் மதிப்பெண் என்ற பெயரில் மேலும் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
தகுதிகாண் மதிப்பெண்ணால் பாதிப்பு: கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் தகுதிகாண் மதிப்பெண்ணைக் கூடுதலாகப் பெறவே முடியாது என்பதையும், அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.
அதேபோல், இந்த மதிப்பெண் முறையால் 1988 முதல் 2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதற்குக் காரணம் அப்போதைய காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்தவர்களால் 600 முதல் 800 மதிப்பெண் வரை மட்டுமே பெற முடிந்தது.
ஆனால் 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன.
இதன் காரணமாகவே தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாள்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்துள்ளனர். அவர்களைக் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.
எனவே, ஆசிரியர் பிரச்னை தலையாயது என்பதை மனதில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவோ, அல்லது அந்தத் துறையின் அமைச்சரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...