கடந்த, 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவு வெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக,
தற்போது, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு
வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., கடந்த காலங்களில், நடத்திய பல்வேறு
தேர்வுகளின் முடிவை வெளியிடாமல், அப்படியே கிடப்பில் போட்டு இருந்தது.
வழக்குகள் உள்ளிட்ட, பல பிரச்னைகள் காரணமாக, இறுதி முடிவுகளை
வெளியிடுவதில், ஆண்டுக்கணக்கில் இழுபறி ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தற்போதைய தலைவர், பாலசுப்ரமணியன்,
முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் இறுதி முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக
வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டதுடன், முதன்மை தேர்வு தேதி குறித்த அறிவிப்பையும், சமீபத்தில்
வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2011 முதல், 2013 வரை நடந்த மூன்று
தேர்வுகளின் இறுதி முடிவை, நேற்று வெளியிட்டது.
கடந்த, 2011, பிப்ரவரி 21, மார்ச் 6 ஆகிய தேதிகளில், 86 வனச்சரகர்
பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வை நடத்தியது. பின், 2012, ஆகஸ்ட், 22,
23ம் தேதிகளில், நேர்முகத் தேர்வு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்,
நேற்று, இறுதி பட்டியலை, www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தில் வெளியிட்டது. கடந்த ஆண்டு, மீன்வளத் துறையில், சார்நிலை
ஆய்வாளர் பதவி யில், 24 இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடந்தது. கடந்த,
4ம் தேதி நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், இதன் முடிவையும்,
டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
இதேபோல், சென்னையில் உள்ள, 'டேட்டா சென்டரில்' (அரசு தகவல் தொகுப்பு மையம்)
25, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப, 2013ல் எழுத்து தேர்வும்,
கடந்த ஆகஸ்டில், நேர்முகத் தேர்வும் நடந்தது. இதன் இறுதி முடிவும், நேற்று
வெளியானது.
இதுகுறித்து, தேர்வாணைய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக, பல
மாதங்களாக முடங்கியிருந்த பல தேர்வுப் பணிகளை, விரைந்து வெளியிட வேண்டும்
என, தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாகவே, பழைய தேர்வுகளின் முடிவுகள்
வந்து கொண்டிருக்கின்றன. தேர்வுப் பணிகள், நீண்ட நாட்கள் முடங்காதபடி,
உடனுக்குடன், முடிவை வெளியிட, தற்போது, பணியாளர்கள் முடுக்கி
விடப்பட்டுள்ளனர். இவ்வாறு, அந்த உறுப்பினர் தெரிவித்தார். முடங்கியிருந்த
பல தேர்வு களின் முடிவை, அடுத்தடுத்து தேர்வாணையம் வெளியிட்டு வருவது,
தேர்வர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...