ஏப்ரல்
மாதம் நடந்த வருடாந்திர தேசியத்
திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம்
பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத்
தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான
மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும்
பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன.
அரசுப்
பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதத்தை,
பொதுப்பார்வைக்கு வெளியிடுவது என்ற கல்வி அமைச்சகத்தின்
முடிவு பிரச்சினைக்கு உரியது. இதுபோன்ற நடவடிக்கைகள்
பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடும்.
ஏனெனில், கல்வி அமைச்சகத்தின் முடிவின்படி,
இந்தப் பள்ளிகள் தேர்வு முடிவுகளை மட்டுமல்ல,
அம்முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையையும், மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் எடுக்கும் நடவடிக்கையையும்
வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
பிரச்சினை
என்னவென்றால், இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிக மதிப்பெண் பெற
வேண்டும் என்று பெற்றோர்கள் முதல்
உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் வரை
அனைவரும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள். இது பள்ளிக் கல்வி
என்பதன் நோக்கத்தைக் குறுகலான ஒன்றாக மாற்றிவிடும். அவர்கள்
ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திறனறித்
தேர்வுகளின் முடிவுகளை மட்டும் வைத்து குழந்தைகளின்
மொத்தத் திறனையும் மதிப்பிட்டுவிட முடியாது.
ஒரு ஆய்வறிக்கையின்படி, முக்கியமான பள்ளிகள், திறனறித் தேர்வில் தங்கள் மாணவர்கள் பெற்ற
மதிப்பெண்களை வெளியிடுவதை விரும்பவில்லை. அப்படிச் செய்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கல்வியாளர்களும்
உணர்ந்திருக்கின்றனர்.
உண்மையில், மாணவர்களின் கற்றல், ஒட்டுமொத்த திறன் வளர்ச்சி, சுய சிந்தனை, பிறருடன் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வது உள்ளிட்ட விஷயங்களில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மாணவர்களுக்கு மனஅழுத்தத்தைத் தருபவர்களாக இருந்துவிடக் கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...