இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கும்
எதிலும் ஊழல் என்றாகி விட்டதால், மக்களுக்கு அரசு நிர்வாகங்கள் மீது கடும்
வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், தேர்தல்களில் மக்கள் தங்கள்
அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கிறார்கள். ஊழல் மீது
மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினால்தான், லோக்பால் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்
அன்னா ஹசாரே நடத்திய போராட்டங்களுக்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள்.
கடைசியில், அந்த போராட்டத்துக்கு குவிந்த நிதிக்கு சரியான கணக்கு
வழக்குகள் உள்ளதா என்று சர்ச்சை கிளம்பி, மக்களுக்கு அந்த போராட்டங்களின்
மீதும் நம்பிக்கை குறைந்தது.
இந்த சூழ்நிலையில், பிரதமராக நரேந்திர மோடி
பொறுப்பேற்றதும், ஊழலை ஒழிக்க எல்லாவற்றுக்கும் இ-டெண்டர் முறை கொண்டு வர
வேண்டுமென கூறினார். அதே போல், பேப்பர் இல்லாமல் முழுக்க கம்ப்யூட்டர்மயமான
அரசு நிர்வாகம் ஏற்பட்டால் ஊழல் ஒழியும் என்று சொல்லும் அவர், அதற்கான சில
முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மத்திய அரசு நிர்வாகத்தில் இந்த
நடைமுறைகள் அமலுக்கு வந்தாலும், மாநில நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை,
முழுக்க, முழுக்க கம்ப்யூட்டர்மயமாகும் போதுதான் மக்களுக்கு நல்ல பலன்
கிடைக்கும்.
அந்த வகையில் மாநில அரசுகள், நிர்வாகத்தில்
பேப்பர் பயன்படுத்தாத ‘இ-கவர்னன்ஸ் முறையை கொண்டு வந்தால், அதாவது எல்லா
துறையிலும் கம்ப்யூட்டர்மயமாக்கினால் ஊழல் கொஞ்சம், கொஞ்சமாக மறையும்.
கோப்புகள் தேங்குவது குறைந்து பணிகள் விரைவாக நடைபெறும். இதில் ஆந்திர
முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு முன்மாதிரியாக விளங்குவார் என தோன்றுகிறது.
நாட்டிலேயே முதல் முறையாக ‘இ-கேபினட் கூட்டத்தை அவர் நேற்று ஐதராபாத்தில்
நடத்தியிருக்கிறார். அதாவது, காகிதமே இல்லாமல் கம்ப்யூட்டரிலேயே அமைச்சரவை
கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
அமைச்சர்கள் எல்லோரும் லேப்டாப்பில்,
கூட்டத்தின் பொருள் விவரங்களை பார்க்கும் வகையில் சர்வரில்
சேர்க்கப்பட்டிருந்தது. அதை அமைச்சர்கள் மற்றும் அந்த கூட்டத்தில் கலந்து
கொள்ளும் அதிகாரிகள் மட்டும் பார்க்கும் வகையில் பாஸ்வேர்டு
அளிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், விவாதங்கள் எல்லாம் கம்ப்யூட்டரிலேயே
நடந்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதே போல், எல்லாமே
கம்ப்யூட்டர்மயமாகும் போது ஊழல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக
குறையும். அதே போல், நிர்வாகமும் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதால்
பணிகள் விரைவாக நடைபெறும். இந்த விஷயத்தில் சந்திரபாபு நாயுடுவை மற்ற
முதல்வர்களும் பின்தொடர்வதையே மக்கள் எல்லோரும் விரும்புவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...