'ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்;
யார் எழுதக் கூடாது' என்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இரு துறைகளின்
இயக்குனர்கள், தெளிவான உத்தரவை பிறப்பிக்காததால், பணி நிரந்தரம் ஆக
முடியாமல், ஏராளமான ஆசிரியர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2012ல், முதல் ஆசிரியர் தகுதித்
தேர்வு நடந்தது. இந்த தேர்வை யார் எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை
என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், பலமுறை தெளிவாக விளக்கம்
அளித்துள்ளது.அதன்படி, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வு
குறித்து, அறிவிப்பு வெளியான, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின், புதிய
ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகி, அதன்பின்
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கண்டிப்பாக,
டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், மேற்கண்ட தேதிக்கு
முன், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த அரசு பள்ளி, அரசு
உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
அதேபோல், 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன்,
புதிய ஆசிரியர் தேர்வு குறித்தஅறிவிப்பு வெளியாகி, மேற்கண்ட தேதிக்குப்
பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வை எழுத
தேவையில்லை.இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பணியில் சேர்ந்த, 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர் அனைவரையும், டி.இ.டி., தேர்வு
எழுதி, தேர்ச்சி பெற்றால் தான், பணி
நிரந்தரம் செய்வோம் என, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும், இழுத்தடிப்பாக,
ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறியதாவது:டி.ஆர்.பி.,
உத்தரவை, அதிகாரிகளிடம் காட்டினாலும், அதை, அவர்கள் ஏற்பதில்லை.
'எங்களுக்கு, எங்கள் துறை இயக்குனரிடம் இருந்துதெளிவான வழிகாட்டுதல்
உத்தரவு வர வேண்டும்; இதுவரை வரவில்லை. வந்தால் தான், அதன்படி செயல்பட
முடியும்' என, கூறுகின்றனர்.இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணி
நிரந்தரம் ஆக முடியாமல் தவித்து வருகின்றனர். இது, முக்கியமான பிரச்னை
என்பதால், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள், டி.இ.டி.,
தேர்வு குறித்த வழிகாட்டுதல் உத்தரவை, உடனடியாக, மாவட்ட அலுவலர்களுக்கு
அனுப்ப வேண்டும்.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்
-நமது நிருபர்-
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...