கலவை சாதம் திட்டத்துக்கு அரசு வழங்கும் தொகை
மிக குறைவாக உள்ளதால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு
அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு
பள்ளிகள் ஆகியவற்றில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 70
லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். சத்துணவு மையங்களில் ஒரே வகையிலான
உணவு வழங்கப்படுவதை மாற்றி, பல வகையான கலவை சாதம் வழங்க அரசு முடிவு
செய்தது. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு இத்திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், செலவினம், வேலைப் பளு உள்ளிட்ட சில
காரணங்களால் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதில் சிக்கல் இருந்து வந்தது.
இதையடுத்து மதிப்பீடு மற்றும் திறனாய்வு
துறையினர், திருவள்ளூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்
செயல்படுத்தப்பட்டு வரும் கலவை சாதம் குறித்து மதிப்பீடு செய்து அரசுக்கு
அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும்
இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும்
உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு, சென்னையை சேர்ந்த சமையல் வல்லுநர்கள்
மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து நகர் மற்றும் கிராமப்
புறங்களில் உள்ள சத்துணவு மையங்களில் படிப்படியாக கலவை சாதம் திட்டம்
விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டை, கருப்பு
கொண்டை கடலை கொண்ட புலால், தக்காளி மசாலா முட்டை, தக்காளி சாதம், சாம்பார்
சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம், மிளகு பொடி தூவிய வறுத்த உருளைக்
கிழங்கு உள்ளிட்ட உணவுகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கலவை சாதம் திட்டம் செயல்படுத்த அரசு வழங்கும் பணம் மிக
குறைவாக உள்ளதால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு
அமைப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். ஏற்கனவே, பல்வேறு பிரச்னைகளை
சந்தித்து வரும் எங்களுக்கு இது ஒரு புது பிரச்னையாக உள்ளது என அவர்கள்
வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சத்துணவு அமைப்பாளர் செல்வராஜ்
கூறியதாவது;
கலவை சாதம் வழங்க மாணவர் ஒருவருக்கு நாள்தோறும்
ரூ.5.60 பைசா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு எங்களுக்கு
வெறும் ரூ.1.60 பைசா தான் தருகின்றனர். அதன்படி மையம் ஒன்றில் சுமார் 50
பேர் இருந்தால் கூட நாள் ஒன்றுக்கு ரூ.80 மட்டும்தான் கிடைக்கும். தற்போது
உள்ள விலைவாசியில் வெறும் ரூ.80ஐ மட்டும் வைத்து கொண்டு எப்படி விதவிதமான
சாதம் வழங்க முடியும். வேறு வழி இல்லாமல் பல அமைப்பாளர்கள் தங்கள் கையில்
இருந்து பணம் செலவழித்து தான் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். பருப்பு,
கொண்டை கடலை, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் கடைகளில் விலை
கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதற்கான செலவு மிக அதிகம். எனவே, அரசு இந்த
விஷயத்தில் கவனம் செலுத்தி கலவை சாதத்துக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்த
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...