Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்கள்:

         வாழ்க்கை யில் ஏற்படும் தோல்விகளை எதிர்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதுதான் இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது. தென்னிந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவல் தேசிய குற்ற ஆவண காப்பகம் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. 

           மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கூட்டுக் குடும்பம் மற்றும் பல்வேறு கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்க்கை முறையில் பெண்களின் தற்கொலை எப்படி சாத்தியமாகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘‘மனிதனின் இயந்திரமயமான வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்தப் பிரச்னைகள் தான் நாளடைவில் மன அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னை உள்ளவர்கள் தூக்கமின்மை, உணவு உண்ண முடியாமை போன்ற பிரச்னைக்கு ஆளாகின்றனர்.

ஆரம்பகட்டத்தில் சாதாரண (மைல்டு டிப்ரஷன்) மன அழுத்தம் பிற்காலத்தில் கடினமான மன அழுத்தத்தை (மேஜர் டிப்ரஷன்) உருவாக்குகிறது. இந்த நிலை ஏற்படும் போது தான் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதில் குறிப்பாக பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றனர். இது குறித்து சமூக நல ஆர்வலர் கூறும்போது, ‘‘கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு, வரதட்சணை கொடுமை, வேலை என்று பல்வேறு காரணங்களால் பெண்கள் தங்களது இல்லங்களில் தினந்தோறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அது மட்டுமின்றி தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது பல்வேறு இன்னல்களை சந்தித்து விட்டு தான் வீடு திரும்புகின்றனர். மாணவிகள் காதல் விவகாரம், தேர்வில் தோல்வியடைவது உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

வேலை கிடைக்காமல் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார பின்னடைவு காரணமாக ஆண்கள், பெண்கள் என இருவரும் பாதிக்கப்பட்டாலும் குடும்பத்தை ஒவ்வொரு நாளும் நகர்த்தி செல்லும் பெண்களை இந்த பிரச்னை கடுமையாக தாக்குகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது’’ என்றார். இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் யுவராஜ் கூறியதாவது: அனைவரும் வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். எந்த காரியங்களை செய்தாலும் நாம் தான் சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்று கருதுகிறோம். இதுபோல் நாம் நினைக்கும் விஷயங்கள் நிறைவேறவில்லையெனில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. தற்போது யாரும் தோல்வியை எதிர்கொள்ள தயாராக இல்லை. 

இல்லத்தரசிகளை பொறுத் தவரை குழந்தைகளை படிக்க வைப்பது, வேலைக்கு செல்வது, வீட்டு வேலைகளை செய்வது என்று பல பணிகளை செய்கின்றனர். புத்துணர்ச்சி இல்லாத வழக்கமான பணிகளால் மன அழுத்தும் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். 

அது மட்டுமின்றி பெண்கள் தாம் செய்யும் செயல்களுக்கு தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் பாராட்டுகள் கிடைப்பதில்லை. இதனாலும் கூட அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுகிறது. 

தற்கொலை எண்ணம் வராமல் இருக்க எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். தோல்வியை பெரிதாக கருதாமல் இயற்கையோடு இணைந்து நம்முடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive