பள்ளி மாணவர்களுக்கான நல திட்டங்கள், மாணவர்களுக்கு உரிய நேரத்தில்
சென்று சேர்வது குறித்தும், பொது தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க
வேண்டும் என்பது குறித்தும், ஏற்கனவே பல முறை நடந்த ஆய்வு கூட்டங்களில்,
அமைச்சர் மற்றும் செயலர் விவாதித்த பிறகும், தற்போது, 'மண்டல ஆய்வு
கூட்டம்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி தலைமையில், அதிகாரிகள் படை,
மாநிலம் முழுவதும், ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இலவச
திட்டங்கள் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் மாவட்ட அளவில்,
அவ்வப்போது ஆய்வு கூட்டம் நடத்துகிறார். இதன்பின், இயக்குனர்கள், மாவட்ட
அலுவலர்களை அழைத்து, கூட்டம் நடத்துகின்றனர். பின், கல்வித்துறை செயலர்,
மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளை அழைத்து, ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.
பின், அமைச்சர் தலைமையில், ஒரு கூட்டம். இந்த ஆய்வு கூட்டங்கள், வரிசையாக
நடக்கும். இலவச திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலையை
விளக்கும் புள்ளி விவரங்கள், முதல் கூட்டத்தில் என்ன இருந்ததோ, அதே தான்,
அனைத்து கூட்டத்திலும் இருக்கும்.
எப்போது பார்த்தாலும், ஆய்வு
கூட்டங்களை நடத்தி, அதிகாரிகள் மற்றும் ஆசிரியரின் நேரத்தை
வீணடிக்கின்றனர். மாதத்தில், பெரும்பாலான நாட்கள், அதிகாரிகள், சென்னைக்கு
சென்று விடுகின்றனர். இந்நிலையில், கடந்த, 13ம் தேதியில் இருந்து, 'மண்டல
ஆய்வு கூட்டம்' என, அமைச்சர் தலைமையில், அதிகாரிகள் வலம் வருகின்றனர்.
நான்கு, ஐந்து மாவட்டங்களை சேர்த்து, ஒரு இடத்தில், மண்டல ஆய்வு கூட்டம்
நடத்தப்படுகிறது. செப்., 1ம் தேதி வரை, இந்த கூட்டம் நடக்கிறது. இதற்காக,
பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
காலை முதல் இரவு வரை
நடக்கும் இந்த ஆய்வு கூட்டத்திலும், பழைய விவாதமே, மீண்டும்
விவாதிக்கப்படுகிறது. அரைத்த மாவை, திரும்ப, திரும்ப அரைப்பதை
விட்டுவிட்டு, அமைச்சரும், அதிகாரிகளும், கிராமப்புறங்களுக்கு சென்று, ஒரு
நாளைக்கு, 10 பள்ளிகளை, திடீரென பார்வையிட வேண்டும். அப்போது, கல்வியின்
உண்மையான நிலை, அரசு பள்ளிகளின், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பாடம்
நடத்தும் விதம் உள்ளிட்ட, அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு, சங்க நிர்வாகி தெரிவித்தார்.
வாய்
திறக்காத அமைச்சர்! : 'மாநிலம் முழுவதும், 6,000 அரசு பள்ளிகளில்,
சுத்தமாக கழிப்பறை வசதி இல்லை' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,
புள்ளி விவரத்துடன் வெளியிட்டு, பல நாட்கள் ஆகிறது. ஓயாமல், ஆய்வு கூட்டம்
நடத்தியும், 6,000 பள்ளிகளில், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தாதது ஏன்? இந்த
பிரச்னை குறித்து, தி.மு.க., தலைவர், கருணாநிதியும், கேள்வி எழுப்பி
உள்ளார். ஆனால், இதுவரை, அமைச்சரோ, செயலரோ, வாய் திறக்காதது ஏன்?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...