சுதந்திர தினவிழாவில், முறையாக ஏற்பாடுகள்
செய்யாததால், பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவ, மாணவியர் நிற்க
வைப்பட்டனர். ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில், சுதந்திர தினவிழா
நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, ஒன்பது மணிக்கு கொடியேற்றப்பட்டு, அணி வகுப்பு
மரியாதை, தியாகிகள் கவுரவித்தல், அலுவலர்களுக்கு நற்சான்று, பதக்கம்
வழங்குதல் போன்றவை நடந்தன.
இதன்பின், 10.15 மணிக்கு, பள்ளி குழந்தைகளின்
கலை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலை, 7.30 மணிக்கே, குழந்தைகளை
மைதானத்துக்கு வரவழைத்திருந்தனர். ஒவ்வொரு பள்ளிக்கும், தலா ஐந்து நிமிடம்,
ஏழு நிமிடம் என மொத்தம் 50 நிமிடமே ஒதுக்கி இருந்தாலும், பத்து பள்ளியை
சேர்ந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு பள்ளியும், தங்கள் திறனை காட்ட சற்றே
அதிக நேரம் எடுத்து கொண்டன. இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல், கலை
நிகழ்ச்சிகள் நீண்டன. கலை நிகழ்ச்சி முடியும் வரை பள்ளி மாணவ, மாணவியர்
மைதானத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்தனர். பல மணி நேரம் குடிநீர்,
கழிவறை சென்று வரக்கூட அனுமதிக்கப்படவில்லை.
தேவையான அளவுக்கு சாமியானா பந்தல் போடவில்லை.
இதனால் கலெக்டர் அமரும் பகுதியில், அலுவலர்கள் முண்டியடித்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், அலுவலர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்டோர், வந்த சுவடு தெரியாமல் விரைந்து வீடு திரும்பினர்.
சாமியானாவுக்குள்ளும், வெயில் அடித்ததால் தியாகிகள், அவர்களது வாரிசுகள்
அவதிக்குள்ளாகினர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரே பார்வையாளர்களாக
அமர்ந்து இருந்தனர். வழக்கத்தை விட இந்தாண்டு கூட்டம் அதிகளவில்
காணப்பட்டது. காலை, 7.30 மணிக்கு மைதானத்தில் தயாராக இருந்த குழந்தைகள்,
வீட்டில் இருந்து, விரைவிலேயே மணிக்கே புறப்பட்டு இருப்பார்கள்.
இதுபோன்றவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம்
சார்பில், முறையான சாப்பாடு, தண்ணீர், ஸ்நாக்ஸ் போன்றவையுடன், அவர்கள் அமர
சாமியானா பந்தல் ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது பெற்றோர் மற்றும் அழைத்து
வந்த ஆசிரியர்களின் வருத்தமாகும். பார்வையாளர்களுக்கும், குடிநீர்,
தற்காலிக கழிப்பிடம் என ஏதும் செய்து தரப்படவில்லை.
அலுவலர்கள் கூறுகையில், "வழக்கமாக, 8.30
மணிக்கு கொடியேற்றப்படும். தற்போது, ஒன்பது மணிக்கு ஏற்றப்பட்டதால், அதன்
பின்னரே கலை நிகழ்ச்சி நடத்த முடியும். பல பள்ளிகள், வெகுநேரம்
எடுத்துக்கொண்டதால், சிரமமாகிவிட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,
அதிகளவில் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது. குழந்தைகளை
அழைத்து வந்த பள்ளி நிர்வாகமும், குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் வழங்கி
இருக்கலாம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...