விடலைப் பருவத்தில் (Teen Age) உள்ள குழந்தைகளை
சமாளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு நிறைய பொறுமையும்,
சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை. குழந்தைப் பருவத்தில் இருந்து
விடலைப் பருவத்திற்குள் நுழையும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ உடல், பலவிதமான
இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. உள்ளமோ பலவிதமான உணர்ச்சித் தாக்குதலைத்
தூண்டுகிறது.
இவற்றை சமாளிக்க முடியாமல்
அவர்கள் திணறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நடவடிக்கையில், பேச்சில்,
நடை, உடை பாவனைகளில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த மாறுதலை பெற்றோர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள பெற்றோரும்
தங்களை தயார்செய்து கொள்வது அவசியம்.
பெற்றோர்களே... விடலைகளை விட்டுப் பிடியுங்கள். விடலைப் பருவத்தில் இருக்கின்ற குழந்தைகள்
சற்று குழப்பான மனநிலையில் காணப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாக எல்லா
வேலைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்று சில நேரங்களில் விரும்புவார்கள்.
பெற்றோர்களின் தலையீடு இருந்தால் ஆத்திரம் கொள்வார்கள். ஆனால் அவர்களது
உடலும், உள்ளமும், போதுமான அளவிற்குப் பக்குவப்படாத காரணத்தினால்
பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இன்னும் தேவைப்படும். எனவே இது போன்ற சில
நேரங்களில் அவர்கள் பெற்றோரைச் சார்ந்திருப்பதும் உண்டு.
நேற்று தனியாகவே கோவிலுக்குச் சென்றுவர
ஆசைப்பட்ட பெண், இன்று ஏன் தன்னையும் அழைக்கிறாள் என்று அம்மாக்கள்
குழம்பவோ, சந்தேகப்படவோ, அதிர்ச்சி அடையவோ தேவையில்லை. நேற்று இருந்த
மனநிலை அவள் யாருடைய உதவியும் இல்லாமல் தானே தனது வேலைகளை செய்து கொள்ளலாம்
என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் இன்றோ இன்னும் அம்மாவின் துணை அல்லது
அரவணைப்பு தேவை என்று நினைக்கிறது, அவ்வளவுதான். இத்தகைய
சிறுமாற்றங்களும், தடுமாற்றங்களும் அந்த வயதில் இயற்கையானது தான் என்பதை
பெற்றோர் உணர்ந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளை அனுசரித்து நடந்து கொள்ள
வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் செயல்பட்டால் வீணாண சச்சரவுகளும்,
குழப்பங்களும் நீங்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சுயமாக
செயல்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய
பாதுகாப்பு குறித்தும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தங்களுடைய கனவை
நிஜமாக்கும் விதமாக சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படித்துப் பட்டம்
பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் விடலைப் பருவத்தினருக்குத்
தனியாகவே சில கற்பனைகள் இருப்பது உண்மை, அவற்றை மறந்து விடக்கூடாது.
அதையும் மனதில் வைத்து பெற்றோர் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது
அவசியம்.
குழந்தைகளின் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு
செயல்படுவதன் மூலமாக விடலைப் பருவத்தில் உள்ளவர்களுடன் பெற்றோர் அன்பான,
சுமுகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இல்லை என்றால் எலியும்
பூனையும் போல முகத்தை தூக்கி உர்ரென்று வைத்துக் கொண்டு, தொட்டதற்கெல்லாம்
குற்றம் கண்டுபிடித்து சச்சரவில், ஈடுபட்டு, மனநிம்மதியைத் தொலைக்க வேண்டி
வரும்.
விடலைகள் மனத்தில் இடம் பிடிக்க...
வீட்டில் அவர்களுக்கு என்று சிறுஅறையை தனியாக
ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது ஒரு இடத்தை விடலைப் பருவத்தில் உள்ள
மகனுக்காக உண்டாக்கி வையுங்கள். அவர்களுடைய அறைக்குள் நுழையும் போது
அதிரடியாக நுழையாமல் கதவைத் தட்டிவிட்டு நுழையுங்கள். அவர்கள் இல்லாத
நேரங்களில் அவர்களுடைய அறை, மேசை இழுப்பு, புத்தகப்பை, மணிபர்ஸ் , டைரி
ஆகியவற்றை சோதனையிடாதீர்கள். அவர்களை உங்கள் குடும்பத்துப் பெரியவர்களை
நடத்துவதைப் போலவே நடத்துங்கள். சிறிய வேலைகளுக்கு அவர்களிடம் ஆலோசனை
கேளுங்கள். அவர்களுடைய தனிமையில், அல்லது சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.
நேரம் கழித்து வீட்டிற்கு வரும் பெண்ணிடம்,
எங்கே சுற்றினாய் ? யாருடன் இருந்தாய் ? கொஞ்சமாவது பெற்றோரிடம் பயம்
இருக்கிறதா ? என்று குற்றவிசாரணை செய்யாதீர்கள். நாசூக்காக விசாரியுங்கள்.
உள்ளே நுழைந்ததும் கேள்விக்கணைகளை தொடுப்பது, அவர்களை சந்தேகப்படுவது,
குற்றவாளியைப்போல விசாரிப்பது ஆகியவற்றை விடலைப்பருவத்தினர் விரும்ப
மாட்டார்கள். மேலும் அவ்வாறு தங்களை அவமதிக்கும் பெற்றோரை அவர்கள்
வெறுக்கவும் ஆரம்பிக்கின்றனர்.
அவர்களுக்கு ஈடுபாடுள்ள விஷயத்தை ரசிப்பதற்கு
நீங்களும் ஆர்வம் காட்டுங்கள். உதாரணமாக உங்கள் மகன் மைக்கேல் ஜாக்சன்
இசையை விரும்பினால், இந்த காட்டுமிராண்டி இசையை கேட்டால் காது கிழிந்து
விடும் என்று கமெண்ட் அடிக்காதீர்கள். அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்து
உங்கள் ரசனையைப் பற்றி புகழ்ந்து பேசி போரடிக்காதீர்கள். காலம் மாறுகிறது
என்பதை கவனத்தில் வையுங்கள்.
உங்கள் மகளுக்கு விளையாட்டில் விருப்பம்
இருந்தால், படிக்கிற வேலையைப் பார், நீ என்ன பெரிய சானியா மிர்சாவாகவா
போகிறாய் ? என்று அவளுடைய கனவுகளை கொழுந்திலேயே கிள்ளாதீர்கள். அவள்
விளையாடுவதை வேடிக்கை பாருங்கள். உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாதபோது,
இப்படிச் செய் அப்படிச் செய் என்று அறிவுரை வழங்காதீர்கள்.
அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை ஒன்றாக அமர்ந்து கண்டு களியுங்கள். இதைப் போய் ரசிக்கிறாயே,
என்ற ரீதியில் பேசாதீர்கள். உங்களுடைய வேலையைப் பற்றியோ அல்லது உங்கள்
மகனின் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவைப் பற்றியோ ஜாலியாகப் பேசுங்கள்.
உங்கள் விடலைப் பருவ நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு உங்கள் மகனிடமோ அல்லது
மகளிடமோ மனம் திறந்து பேசுங்கள். இப்போது எப்படியெல்லாம் மாறிவிட்டது
என்பதை நகைச்சுவை உணர்வோடு எடுத்துச் சொல்லுங்கள்.
நான் பெரிதாக மீசை வைத்துக் கொள்ள
ஆசைப்பட்டபோது, என்னுடைய அப்பா எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் இப்போது
காலம் மாறிவிட்டது, நீ விருமாண்டி மீசை வைத்துக் கொள்வதைப் பற்றி ஆட்சேபணை
இல்லை என்று உங்கள் மகனிடம் சிரித்துக் கொண்டே கூறுங்கள். இதனால் தலைமுறை
இடைவெளி சடால் என்று குறைவதைப் பார்க்கலாம்.
இருவருமே விரும்புகின்ற கலை நிகழ்ச்சிக்கோ
அல்லது திரைப்படத்திற்கோ உங்கள் மகனுடன் அல்லது மகளுடன் சில மாதங்களுக்கு
ஒருமுறை சென்று வாருங்கள். இதனால் இருவருக்கும் இடையே உள்ள நட்பு
பலப்படும்.
உங்கள் மகனையோ அல்லது மகளையோ விரும்புவதை
மனதிலேயே பூட்டி வைத்துக் கொள்ளாமல் வாய்ப்பு கிடைத்தபோது வார்த்தைகளில்
வெளியிடுங்கள். அவர்கள் சிறிய வேலை செய்தாலும் பாராட்டுங்கள். உடை நன்றாக
இருந்தால் உண்மையான மனநிறைவோடு பாராட்டுங்கள். பள்ளியில் அல்லது
கல்லூரியில் படிக்கின்றவர்களை நண்பர்களாகக் கருதி, அதிக நேரத்தை அவர்களுடன்
செலவிடுங்கள்.
அவர்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களுடன்
நேரத்தைக் கழிப்பதைத்தான் விரும்புவார்கள். அதையும் மீறி அவர்கள் உங்களுடன்
இருப்பதை விரும்பினால் உங்கள் செயலில் நீங்கள் வெற்றிஅடைந்து விட்டீர்கள்
என்பது பொருள். இவ்வாறு விடலைப் பருவத்தில் உள்ள மகனின் அல்லது மகளின்
மனதில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைப் பெற்று விட்டதற்காக உங்களை நீங்களே
தோளில் தட்டிப் பாராட்டிக் கொள்ளலாம்.
இன்றைய பெற்றோருக்கு அவசியம் இது தேவை. நன்றி ! பாடசாலை.
ReplyDeleteநன்றி ! பாடசாலை.....
ReplyDelete