'மாநிலம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத, 2,000 மழலையர் பள்ளிகளுக்கு,
விரைவில், அங்கீகாரம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க கல்வித்
துறை வட்டாரம், நேற்றுதெரிவித்தது.
'அங்கீகாரம் இல்லாத, 1,400 மழலையர் பள்ளிகளை, வரும், 2015
ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில்,
சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர்
பள்ளிகளுக்கு, தொடக்க கல்வித்துறை சார்பில், தற்போது, 'நோட்டீஸ்'
அனுப்பப்பட்டு வருகிறது.
'நோட்டீஸ் கிடைத்த, மூன்று நாளுக்குள், விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை
எனில், பள்ளியை மூட, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நோட்டீசில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல், தொடக்க
கல்வித் துறையிடம் இல்லை. ஆனால், 'மாநிலம் முழுவதும், 2,000 மழலையர்
பள்ளிகள் இருக்கலாம்' என, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 'ஒரு பக்கம்,
மழலையர் பள்ளிகளை மூட, 'நோட்டீஸ்' அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும்,
கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட, பல சான்றிதழ்களை
சமர்பித்து, அங்கீகாரம் கேட்டு, முறையாக, தொடக்க கல்வித் துறைக்கு
விண்ணப்பித்தால், அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க
கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர்
மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா, 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து
வருகின்றன. அதன்படி, இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி., வரை),
ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல்
விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திடீரென, 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின்
கல்வி கேள்விக்குறியாகும். எனவே, ஒரு பக்கம், மூடுவதற்கு, 'நோட்டீஸ்'
அனுப்பினாலும், மறுபக்கம், முறையாக அங்கீகாரம் பெற, சம்பந்தப்பட்ட
பள்ளிகள், தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை
பெற்று விண்ணப்பித்ததும், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் அனுமதி
பெற்று, அனைத்து பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.
பணத்தை கொட்டும் பள்ளிகள்
மழலையர் பள்ளிகள், பணம் காய்க்கும் மரங்களாக விளங்கி வருகின்றன.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதை விட, இந்த பள்ளிகளை நடத்துவதற்கு,
செலவு குறைவு; ஆனால், வருமானம் கொட்டும்.
சாதாரண வீடுகளை, 'பிளே ஸ்கூல்' என, பெற்றோரை ஈர்க்கும் வகையில், மாற்றி,
அதை, குழந்தை காப்பகமாகவும், மழலையர் பள்ளிகளாகவும், ஒரே கட்டடத்தை
பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டரை வயது குழந்தையை, முறையான பள்ளிக்கு அனுப்ப, 'பிரீ கேஜி'
வகுப்பில் சேர்த்து, ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். இதற்கு, சுளையாக, 20
ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இந்த கட்டணம், இடத்திற்கு தகுந்தார்போல் மாறுபடுகிறது.
இதனால், முறையாக, சான்றிதழ்களை பெற்று, தொடக்க கல்வித் துறையின்,
அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகிகள், மும்முரமாக
முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ப, அங்கீகாரம் வழங்க, தொடக்க
கல்வித் துறை, 'கிரீன் சிக்னல்' காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...