போக்கத்தவனுக்கு
போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி
கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு.
ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார்
வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சமுதாயத்தில் மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் குரு தெய்வமாக போற்றப்படுகின்றனர். மன்னர் காலம் தொட்டு, எத்தகைய உயர் நிலையில் இருப்பவரும் ஆசிரியருக்கு தலைவணங்குவர்.
வருவாய்
குறைந்த நிலையிலும், தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி
போதிப்பதை கடமையாகச் செய்தனர். வீட்டில் வறுமை வாட்டி வதைத்தாலும்,
நேர்த்தியான உடையணிந்து மிடுக்காக கல்விச் சாலைகளுக்குச் சென்று
மாணவர்களுக்கு கல்வியைப் போதித்தனர்.
தவறு
செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாடங்களைச் சரியாகப் படிக்காவிட்டாலும்
கண்டிப்பதில் பாகுபாடு காட்டுவதில்லை. பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத
கல்வி அறிவை குழந்தைகள் பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர்.
பள்ளிக்
கூடங்களுக்கு சென்று ஆசிரியர்களைச் சந்தித்து, தனது மகனை கடுமையாக
தண்டித்தாவது படிக்க வையுங்கள் என மன்றாடிக் கேட்ட பெற்றோர்கள் ஏராளம்.
அந்தளவுக்கு
கல்வியின் மீது பெற்றோர்களுக்கு மரியாதையும், ஆசிரியர்கள் மீது
நம்பிக்கையும் இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களை படிக்க வைப்பதற்கு
முடிந்தளவு முயற்சி எடுப்பர்.
சரியாக
படிக்காத மாணவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்தனர். இதை பெற்றோர்களும்
ஏற்றுக் கொண்டனர். வீட்டில் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் தவித்த
ஏராளமான ஏழை மாணவர்களை, தங்களது சொந்தச் செலவில் படிக்க வைத்த
ஆசிரியர்களும் உண்டு.
எத்தகைய உயர் பதவிகளை அடைந்த போதிலும், ஆசிரியரை நேருக்கு நேர் சந்திப்பதற்குக்கூட மாணவர்கள் தயக்கம் காட்டினர். ÷
மாணவர்களின்
பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கு தனிமரியாதை கொடுப்பதும் வழக்கம்.
அந்தளவுக்கு சமுதாயத்தில் ஆசிரியர்கள் மரியாதையுடன் போற்றப்பட்ட பொற்காலம்
அது.
காலப்போக்கில் கல்வி வியாபாரமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியப் பணியின் மீதிருந்த மரியாதை மெச்சும் நிலையில் இல்லை.
கல்வி
போதிப்பதை சேவையாக செய்யும் ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் இருந்தாலும், சில
ஆசிரியர்களின் தவறான செயல்களால் அந்த இனத்துக்கு இருந்த கௌரவத்துக்கே
ஆபத்து வந்துள்ளது.
இன்றைக்கு
அரசுகளும் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றன.
எந்தக் குழந்தையாக இருந்தாலும், தேவைப்படும்போது கண்டித்தால்தான்,
சொல்வதைக் கேட்கும். அந்தக் குழந்தை நல்வழியில் செல்லும்.
பெரும்பாலான
ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையிலிருந்து விலகிச் செல்வதால், மாணவர்களின்
மீது முழு ஈடுபாட்டைக் காட்ட முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
கூட்டுக்
குடும்பச் சிதைவு, வியாபாரமாக்கப்பட்டுவரும் கல்வி போன்ற பல்வேறு
காரணிகளால், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையேயான சுமூக உறவிலும் இணக்கம்
இல்லாமல் போய்விட்டது.
இதனால்,
கட்டுப்பாடு இழந்த காளையர்களாக மாணவர்களில் பலரும் தவறான வழிக்குச்
செல்லும் நிலை உருவாகியுள்ளது. தரமான கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
இன்றைக்கு பொறியியல் படிப்பு மீதான நம்பிக்கை, மாணவர்களிடம் குறைந்து வருவதற்கும் இதுவே காரணியாக அமைந்துள்ளது.
இந்த
நிலை மாற வேண்டும். அரசுகள் என்னதான் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க
பல ஆயிரம் கோடி திட்டங்களைத் தீட்டினாலும், ஆசிரியர்கள் மனது வைத்தால்
மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆசிரியர்கள்
சமுதாயத்தில் தங்களுக்குரிய உயர்நிலையிலிருந்து தடம் புரளாமல், தரமான
கல்வியைப் போதிக்க வைராக்கியம் கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில்
தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
ஆசிரியர்
- மாணவர் உறவு மேம்பட வேண்டும். எந்தக் கல்வியாக இருந்தாலும், அதனைத்
தரமாகக் கற்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...