அரசுப்பள்ளிகளில்
மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில்
பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவையே. இன்றைய
குழந்தைகளை நாளைய சாதனையாளர்களாக
மாற்றக்கூடிய கல்விச் செல்வத்தை பெறுவதில்,
அவர்கள் பல்வேறு சிக்கல்களை கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக
கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது
மட்டுமின்றி, பாதுகாப்பு வசதிகளுமின்றி உள்ளது.
இதனால், ஒவ்வொரு குழந்தையும் அடிப்படை
கல்வியறிவை பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில், கிராமந்தோறும்
துவக்கப்பள்ளிகள் கட்டப்பட்டும், அதனால், மாணவர்களுக்கு முழுமையான பலன்
கிடைப்பதில்லை. அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க,
கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், கல்வி கற்கும்
பாடசாலைகளை கவனிக்காமல் விடுவதால், விருப்பத்தோடு வரவேண்டிய பள்ளிக்கு,
மாணவர்கள் வெறுப்புடன் வரவேண்டிய நிலை உருவாகியுள்ளது.பள்ளியின் பாதுகாப்பு
மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளிகளில் சுற்றுச்சுவர்
கட்டப்படுகிறது. இன்று பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால்,
அரசுப்பள்ளிகள் அப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள 'குடிமகன்'களின் புகலிடமாக
மாறியுள்ளது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு
அனுப்புவதில் பெருமை கொண்ட காலம் மாறி, தற்போது அச்ச உணர்வுடனே
அனுப்புகின்றனர். குடிநீர், கழிப்பறை, தரமான வகுப்பறை, சுற்றுச்சுவர்
உள்ளிட்டவையே பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள். அவற்றில் ஒன்றிருந்தால்
மற்றொன்று பிரச்னையாக உள்ளது. ஏராளமான கிராமப்புறங்களில் இவை அனைத்துமே
மோசமான நிலையில் இருக்கும் பள்ளிகளும் உண்டு. கல்வித்தரத்தை குறித்து
மட்டுமே முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளின்
கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினாலும்,
அதற்கான தீர்வு கிடைப்பதில்லை.
வகுப்பறைகளில் சுவர் இடிந்து விழுவது, குடிநீர்
வசதியில்லாமல் மாணவர்கள் அவதிப்படுவது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது
மட்டுமே, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பல்வேறு விஷயங்களை
கற்றுக்கொள்ளப்போகிறோம் என்ற ஆர்வத்துடன் பள்ளிக்குள் நுழையும்
குழந்தைகளுக்கு, பள்ளி வளாகத்தில் 'குடிமகன்'கள் விட்டுச்சென்ற பாட்டில்களை
சுத்தம் செய்வதே முதற்கடமையாக உள்ளது.
இதனால், குழந்தைகள் மனதளவில்
பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் குடிநீர் தொட்டிகள் இருந்தும், அவற்றை
பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டிகள் சுத்தம்
செய்யப்படாமலும், சிதிலமடைந்த நிலையிலும் இருப்பதால், குழந்தைகள் அதன்
அருகில் செல்லவே பயப்படுகின்றனர். திறமையான மாணவர்கள், சிறப்பாக பாடம்
நடத்தும் ஆசிரியர்கள் இருந்தும் அரசு பள்ளிகளின் மோசமான கட்டமைப்புகள்
மற்றும் பாதுகாப்பின்மை போன்றவற்றால் பெற்றோர் அரசுப்பள்ளிகளை
புறக்கணிக்கின்றனர்.கல்வித்தரம், மாணவர் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு
செய்யும் கல்வித்துறை பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை
குறித்தும் ஆய்வு செய்து தகுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கல்வித்தரம்
முழுமையாக உயரும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பவங்கள்
அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பில்லாத பள்ளிகளுக்கு மனதில்
அச்சத்துடனேயே அனுப்ப வேண்டியுள்ளது. ஏழை எளிய மக்கள் அரசுப்பள்ளிகளை
நாடியே உள்ளனர். இதனால் பிற பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கவும் முடியாமல்,
அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும் கல்வி கற்றால் போதும் என்ற எண்ணத்தில்
பள்ளிக்கு அனுப்புகிறோம். படிப்பதற்கான நோட்டுப்புத்தகங்கள், சீருடை
வழங்குவதால் மட்டுமே குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்காது.
படிக்கும் இடத்தில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இருக்கும் பட்சத்தில்
படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். கல்வித்துறை அடிப்படை வசதிகள் இல்லாத
பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
பெற்றோர் கருத்தாக உள்ளது.
அரசுப்பள்ளிகளின் உண்மை(அவல) நிலைகளை படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteஇதே கருத்தை நான் வெளியிட்டதை ஏனோ பாடசாலை வலைதலத்திலிருந்து ஆசிரியரால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.