Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வகுப்பறையில் உயிரோட்டம் இல்லாத சூழலை உணர முடிகிறது: நமது கல்வி எழுப்பும் கேள்வி...

       பள்ளிக்கூடமணியோசை கேட்டதும்கதவுகளை மோதி தள்ளிஓ வென்ற இரைச்சலுடன்பீறிட்டுக் கிளம்புகிற மழலையின் குரல்அடிமைத்தனத்தை எதிர்த்தகலகக் குரலெனவே ஒலிக்கிறது..!கவிஞர் மீ. உமாமகேஸ்வரி. இதுதான் குழந்தைகளுக்கும் பள்ளிக்குமான உறவு. தன் முதுகின் பின்புறத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட சிறகுகளை வீசியடித்து பறந்த சுதந்திர பறவைகள்கோடைகாலம் முடிந்து மீண்டும் அடைபடும் பறவையாய் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்துவிட்டது... அடுத்த கோடை விடுமுறைக்காய் ஏங்கும் குழந்தைகளின் ஏக்கம் பள்ளியின் முதல் நாள் தேங்கிய கண்ணீர் குளத்தோடு அம்மாவுக்கு கையசைத்து செல்லும் காட்சியை ஒவ்வொரு வருடமும் காண்கிறோம். மகிழ்ச்சியாய் கற்கவேண்டிய கல்வி சுமையாய் மாறிய விளைவே கல்வியின் மீது பயமும் வெறுப்பு மனநிலையும் பள்ளிக்கூடம் சிறைகூடமாய் குழந்தைகள் மத்தியில் உள்ளது. வீட்டில் பேசு பேசு என குழந்தையை பேசவைக்கும் சூழலிலிருந்து, பேசாதே...! பேசினால் அடிவிழும் என்ற தலைகீழான வகுப்பறை சூழல், குழந்தை அதன் இயல்பை இழந்து தனிமை மனநிலையை உணர்கிறது.

         அதன் விளைவே மகிழ்ச்சியான குழந்தைகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா 116 இடத்தில் இருக்கிறது. இதுதான் நமது வகுப்பறையின் அவலம். கல்வி நிலையம் என்பது கற்றலின் ஆர்வத்தை அதிகரிக்கும் பட்டறையாக இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லோரும் பங்கேற்பு செய்யக்கூடிய கூடமாக இல்லாமல் அது சோகம் நிரம்பி வழியும் அறையாக உள்ளது. ஒருவர் பேசுபவராகவும் மற்ற அனைவரும் கேட்பவராகவுமே உள்ளது. கற்றல் என்பது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது பல கேள்விகளிலிருந்து அனைவரும் ஒரு பதில் தேடி வந்து சேர்வது. ஆனால் இங்கே கேள்வி கேட்பது தண்டனைக்குள்ளான சுழலாக மாறிவிட்டது. அதிகப்பிரசங்கித்தன நடவடிக்கையாய் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் எனது பள்ளிக் கூட முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் என் சக வகுப்பு தோழன் ஒரு ஆசிரியரை பார்த்து நீங்கள் அடியோயடி அடிக்கவில்லை என்றால் நான் இப்போது பேராசிரியர் ஆகியிருக்கமாட்டேன் என சொல்லி புளங்காகிதம் அடைந்தார். எதிரில் அமர்ந்திருந்த ஆசிரியர் முகமலர்ச்சியோடு இருந்தார். அந்த ஆசிரியர் கொடுத்த தண்டனையின் மூலம் நல்ல நிலைக்கு வந்தாராம். அப்படியென்றால் எல்லோரும் அதே நிலைக்கு வந்து இருக்க வேண்டும் அல்லவா ஆனால் மாறாக அவரின் அடி தாங்க முடியாமல் ஓடிய மாணவனின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.அவர்களை பற்றியான உரையாடல் அங்கே நடைபெறவில்லை. அனேகமாக பல பள்ளிகளில் இப்படி ஓடிய மாணவர்கள் பற்றிய பதிவு உண்டு. அப்படியெனில் வகுப்பறை கற்பதற்கான கூடாரமா? தண்டனைக்கான மையமா...? என்ற கேள்வி நம் முன் எழுகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு மாணவன் வகுப்பறையிலேயே தனது ஆசிரியரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்டது.

அவனை குற்றவாளி என சொல்லும் அதே வேளையில் தனது ஆசிரியரை கொலை செய்யும் அளவிற்கு இந்த கல்வி சூழல் அவனை மாற்றி உள்ளதே அதனை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாமா... பல மாணவர்கள் தனது ஆழ் மனதில் ஆசிரியரை பற்றிய சித்திரத்தில் ஒரு கொடுமையான உருவமாகவே வரைந்துள்ளனர் என்ற பேருண்மையை யாரும் கவனிப்பதே இல்லை.இன்றைய மனப்பாட கல்வி முறை மதிப்பெண்ணால் இட்டு நிரப்பப்படுகிறது. ஒரு போட்டி கலாச்சாரத்தை உருவாக்கி ஆசிரியரும் மாணவரும் தத்தமது இருப்பை பாதுகாக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர் போதியளவு தேர்ச்சியை கொடுக்கவில்லை என்றால் தனது வேலையை இழக்க வேண்டிய நிலை, சொற்ப சம்பளத்தை தனது குடும்பத்திற்காக பாதுகாக்க வேண்டிய சூழலில் தனது இருப்பை பாதுகாக்க மாணவர்கள் மீது ஆசிரியர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதான் ஆசிரியர் மாணவர்கள் விரிசலின் மையம். இது உலகமயமாக்கல் கல்வியில் செய்த முக்கியமான தாக்குதல். முன்பு தமிழ் ஆசிரியர்கள் நாங்கள் நேசிக்கக்கூடிய பொறுமையான நல்ல ஆசிரியர்களாக இருந்தார்கள் என்ற ஒரு கவிதை சமீபத்தில் வாசித்தேன்.

அப்படியென்றால் இன்றைய உலகமய சூழல் தமிழ் ஆசிரியர்களையே மாற்றிவிட்டது என கவிஞர் கூறுகிறார். இதுதான் யதார்த்தம். வகுப்பறையில் கதை சொல்லும் ஆசிரியரும், கல்வி தாண்டி பொது விசயங்களை பேசும் ஆசிரியர்களும் இல்லாமல் போனது வகுப்பறையில் உயிரோட்டம் இல்லாத சூழலை உணர முடிகிறது. கல்வி என்பது சேவை என்பதை தாண்டி பணம் சம்பாதிப்பதற்கான துறையாக மாறியதின் காரணமாக ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான உறவு உடைந்து போனது. எந்த பள்ளி தேர்வு முடிவை அதிகமாக தருகிறார்களோ அந்த பள்ளிக்கே அதி க வருமானம் என்பதினால் லாபம் ஈட்டுவதற்கான போட்டியில் பலியிடப்படும் ஆடுகளாக ஆசிரியரும் மாணவர்களுமே உள்ளனர்.

அந்த லாப வேட்டையில் சிக்கி வெந்து கருகியதே குடந்தையில் 94 குழந்தைகள். இந்த ஒரு நிகழ்வு போதும் மனிதநேயம் இல்லாத இந்தியா கல்வி சூழலின் அவலத்தை பறைசாற்ற. இந்த கல்விமுறை என்பது சுரண்டலின் குறியீடாக உள்ளது. பெற்றோர்கள் தங்களது மொத்த வருமானத்தில் பெரும் பகுதியை கல்விக்காக செலவிட வேண்டியுள்ளது. ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்றால் அது சுகாதாரத்திலும் கல்வியிலும் இலவச பாத்திரத்தை வகுக்க வேண்டும். எல்லோருக்கும் எட்டும் அளவில் இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் இரண்டையும் அரசின் கையிலிருந்து கை கழுவி விட்டோம். கல்வியை தனியார்மயமாக்கி அரசின் அங்கீகாரத்தோடு பெற்றோரிடம் கொள்ளை அடிப்பதற்கான எல்லா வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விக்காக கடன் வாங்கி தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து தேய்ந்து போகும் பெற்றோரின் பெருமூச்சை கண்டுகொள்ளாமல் இருக்கும் மோசமான சமூகத்தை எல்லோரும் சேர்ந்து படைத்துவிட்டோம். அதன் விளைவே செலவு செய்யும் பெற்றோரின் கனவை பூர்த்தி செய்யாத குழந்தையும், குழந்தையின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாத இயலாமையில் பெற்றோரும் தற்கொலை செய்து கொள்வது.

கடந்த ஆண்டு கோவையில் நிர்வாகம் கேட்ட பணத்தை தனது குழந்தைக்கு செலுத்த முடியாமல் ஒரு தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார். பணம் கட்டுவது கூட இன்று பெரும் சுமையாய் மாறிவிட்டதை குறித்த எந்த வருத்தமும் கோபமும் இல்லாத, குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே உள்ள சமூகத்தை யாருக்காக படைத்தது கொண்டு இருக்கிறோம். இந்த மதிப்பெண் கல்விமுறை மாணவனின் சுயபலத்தை இழக்க செய்கிறது. அவனின் தனி திறமை மழுங்கடிக்கப்படுகிறது. மாணவனின் தனித்திறமை வெளிப்படுத்த முடியாமல் அவன் தன்னம்பிக்கையை இழக்க செய்வதின் காரணமாகவே உள்ளுக்குள் புழுங்கி தவிக்கும் மாணவன் தனது தேர்வின் முடிவில் தோற்றால் தான் எதற்கும் பயன்படாத நபர் என்று தன்னையே நொந்து தற்கொலை நோக்கிச் செல்லும் மனநிலை. நமது கல்விமுறை நம்பிக்கை வளர்ப்பதற்கான ஊக்கியாக இல்லாமல் நம்பிக்கையை சிதைப்பதற்கான முறைமையாக உள்ளது. தேர்வில் தோற்றால் தற்கொலை செய்யும் பழக்கம் உலக நாடுகள் எங்கேயும் இருப்பதாக இல்லை நம்நாட்டை தவிர.வகுப்பில் ஒரு மாணவனுக்கு மட்டும் சிறந்த மாணவன் என்று பரிசு தருவது மற்ற மாணவர்களுக்குள் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கல்வியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வகுப்பறையில் மாணவர் என்று வரும்போது அனைவரையும் ஒரே சமதளத்தில் வைத்து ஆசிரியர் கையாள்வது முக்கியம். எல்லா மாணவர்களிடமும் ஒரே மாதிரியான வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. புறசூழல் குடும்ப பின்னணி ஆகியவற்றிலிருந்து தான் மாணவனின் வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியும். பாட புத்தகத்தின் வழியாக மட்டுமே ஒரு மாணவனின் ஆளுமையை மேம்படுத்த முடியாது. உலகத்தில் மிக முக்கியமான நாடுகளான ஜப்பான், சீனா, ரஷ்யா உட்பட 28 நாடுகளில் பாடப்புத்தகமே கிடையாது. இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்துவதில்லை. மாறாய் பாட்டு பாடுவது, நீச்சல் கற்று தருவது, பொது வெளியில் எப்படி நடந்து கொள்வது போன்ற அன்றாட வாழ்க்கைக்கு பயன்தரும் அம்சங்களை தான் கற்று தருகிறது. கியூபாவில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி, அன்றாட வாழ்வியல் பயன்பாட்டு பயிற்சி போன்ற அடிப்படை தேவைகளை பள்ளி காலத்திலேயே மாணவர்களுக்கு கற்று தருகிறது. கியூபாவில் இறுதி தேர்வு என்ற முறையே கிடையாது.

பல நாடுகளில் கல்வியை மகிழ்ச்சியோடு கற்பதற்கான ஏற்பாடுதான் உள்ளது.ஆனால் நாம் மனப்பாட கல்வி முறையை தூக்கி சுமக்கிறோம். குறிப்பாய் வளர்ந்த உலக நாடுகள் எங்கேயும் குழந்தைகளை அடித்து சொல்லி தரும் பழக்கமில்லை. இந்த மனப்பாட கல்விமுறை நாம் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியை குழந்தைகளுக்கு தராது மாறாக மன அழுத்தத்தை தான் தரும். கல்வி மாற்றம் என்பது ஒரு துறை சார்ந்தது மட்டும் அல்ல. ஒருதேசத்தின் அடிப்படை பிரச்சனை. இன்று மாணவர்களை குற்றவாளியாகவும் தவறு செய்பவர்களாகவும் மாற்றும் சூழலை சமூகத்தோடு சேர்த்து கல்விமுறையும் செய்து வருகிறது. அதனை மாற்றுவதற்கான விவாதத்தை தொடங்குவது எல்லோருடைய கடமை.




1 Comments:

  1. Good article . Forwrd it to schools &edu dept...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive