நரேந்திர மோடி பிரதமரான ஒரே மாதத்தில் விலைவாசி
குறைந்துவிடும், நிதிப்பற்றாக்குறை சரிகட்டப்படும், வேலைவாய்ப்பு
அதிகரிக்கும், அரசு இயந்திரம் அசாதாரண வேகத்தில் செயல்படும் என்பதுபோன்ற
அதீத எதிர்பார்ப்புகளின் பின்னணியில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது
முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். முந்தைய அரசு
தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில்தான் தனது
முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜேட்லி தயாரித்தாக வேண்டிய கட்டாயம்
இருந்ததை மறுப்பதற்கில்லை.
எந்தவொரு புதிய அரசு ஆட்சிக்கு வந்தாலும், அந்த
அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூர்ந்து கவனிக்கப்படுவது இயல்பு. தனது
தேர்தல் அறிக்கையிலும் பிரசாரத்தின்போதும் அந்தக் கட்சி தெரிவித்திருந்த
வாக்குறுதிகள், முதலாவது நிதிநிலை அறிக்கையிலேயே நிறைவேற்றப்படும் என்று
யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், தனது வாக்குறுதிகளையும்,
செயல்திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் அந்த முதல்
நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பதில் தவறு
என்ன இருக்க முடியும்?
நதிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைகள், கங்கை நதிநீர்
சுத்திகரிப்பு, புதிதாக நேரடி வரிகள் அதிகம் இல்லாமை, வருமானவரி வரம்பு
சற்று உயர்த்தப்பட்டிருப்பது போன்றவை பளிச்சென்று தெரியும் அருண்
ஜேட்லியின் முதலாவது நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள். வங்கி
சேமிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பங்குச் சந்தை சார்ந்த பொருளாதாரத்தை
சேமிப்பு சார்ந்த பொருளாதாரமாக மாற்ற நிதியமைச்சர் முற்படுகிறாரோ
என்றுகூடத் தோன்றுகிறது.
எந்தவொரு நிதிநிலை அறிக்கையும் நான்கு
அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதலாவது, தொலைநோக்குப் பார்வை;
இரண்டாவது, பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல்; மூன்றாவது,
வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக இருப்பது; நான்காவதாக, முதலீட்டாளர்களிடம்
நம்பிக்கையை ஏற்படுத்துவது. இந்த நான்கு அம்சங்களையும் நிதியமைச்சர் அருண்
ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை மேலோட்டமாக நிறைவேற்ற முற்பட்டாலும், அவை
பற்றிய தெளிவான அணுகுமுறையோ, செயல்திட்டமோ காணப்படவில்லை.
2019க்குள் இந்தியாவிலுள்ள அத்தனை
வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவது, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை
வசதியை உறுதிப்படுத்துவது என்பன போன்ற லட்சியங்கள் கேட்பதற்கு நன்றாகவே
இருக்கின்றன. இந்த அறிவிப்புகளுடன், அதற்கான செயல்திட்டம் என்ன என்பதையும்
குறிப்பிடாதது ஏன்?
அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை
அறிக்கையில் குறிப்பிடத்தக்க, பாராட்டுக்குரிய அம்சம் ஊரக வேலைவாய்ப்பு
உறுதித் திட்டம் தொடரப்படுவது. ஆண்டுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு என்கிற
பெயரில் அரசு கஜானாவிலிருந்து ஆக்கபூர்வமற்ற பணிகளுக்குக் கோடிக்கணக்கான
ரூபாய்களை முந்தைய அரசு வாரி வழங்கித் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க
விரும்பியது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும், விவசாய உற்பத்தி இழப்பும்
சொல்லி மாளாது.
நிதியமைச்சர், நூறு நாள் வேலைவாய்ப்பு
உத்தரவாதத்தை, விவசாயத்துடன் இணைத்திருப்பது, குறைந்து வரும் வேளாண் பரப்பு
மேலும் குறையாமல் பாதுகாக்கும். அதேபோல, விவசாயத்திற்குத் தொழிலாளர்கள்
கிடைப்பதும் உறுதிப்படுத்தப்படும்.
ராணுவத்திலும், காப்பீட்டுத் துறையிலும் அன்னிய
நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பது கடந்த 20 ஆண்டுகளாகப்
பேசப்பட்டு வரும் திட்டங்கள். இந்த இரண்டு துறைகளுமே மிகவும் முக்கியமானது
என்றாலும், எந்த அளவுக்கு அரசு இந்தத் துறைகளைத் தனது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் என்பதைப் பொருத்து இதன் வெற்றி அமையும். கூடாரத்திற்குள்
ஒட்டகத்தின் மூக்கை நுழைய விட்ட கதையாக மாறாமல் இருந்தால் சரி.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்
வகையில், முன்தேதியிட்டு வரிகள் விதிப்பதில்லை என்கிற முடிவு சரி.
அதேநேரத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடு பற்றி
நிதியமைச்சர் ஏன் தெளிவான அறிவிப்பு எதுவும் செய்யவில்லை என்பது
புரியவில்லை.
நரேந்திர மோடியிடம் மக்கள் எதிர்பார்ப்பது,
விரைவான செயல்பாடு, அதிகரித்த வேலைவாய்ப்பு, அதிநவீன கட்டமைப்பு மேம்பாடு,
கட்டுக்குள் அடங்கிய விலைவாசி போன்றவை. இந்த நிதிநிலை அறிக்கை மேலே
குறிப்பிட்ட எதையும் சாதித்துவிடும் என்கிற நம்பிக்கையை அளிக்கவில்லை.
நரேந்திர மோடி அரசு என்ன சாதிக்கப்போகிறது
என்பதைத் தெரிந்துகொள்ள, அடுத்த நிதிநிலை அறிக்கைவரை காத்திருக்க
வைத்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...