Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

       பள்ளி செல்லும் மாணவர்கள் பங்கேற்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

           மாணவர்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தவும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதான கருப்பொருள் (Focal Theme) முன்வைக்கப்படுகிறது.

          அந்தக் கருப்பொருளை சார்ந்து மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ளலாம். பிரச்சினைக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக அடையாளம் கண்டு, அறிவியல் கண்ணோட்டத்துடன் அந்தப் பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டறியும் வகையில் மாணவர்களின் ஆய்வுப் பணி அமையும்.

யார் பங்கேற்கலாம்?

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்கள் கீழ்நிலை பிரிவிலும் (Junior), 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மேல்நிலைப் பிரிவிலும் (Senior) சேர்ந்து இந்த ஆய்வினை மேற்கொள்ளலாம். மாணவர்கள் குழுவாக மட்டுமே ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும். ஒரு குழுவில் 3 முதல் 5 மாணவர்கள் வரை இடம்பெறலாம். குழுவுக்கு வழிகாட்ட வழிகாட்டி ஆசிரியர் ஒருவர் செயல்படுவார்.

இந்த ஆண்டு ‘தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்ளுதல்’(Understanding Weather and Climate) என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆய்வுப் பணியில் பங்கேற்கும் வழிகாட்டு ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி பட்டறை அடுத்த வாரத்தில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆய்வு மாணவர்கள் மற்றும் வழிகாட்டு ஆசிரியர்களுக்காக மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும்.

அதன் பிறகு 2 முதல் 3 மாத காலம் ஆய்வுப் பணிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அக்டோபர் இறுதியில் மாவட்ட அளவில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் குழுக்கள் நவம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் பங்கேற்கலாம். மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்படும் சிறந்த 30 குழுக்கள் டிசம்பர் 27 முதல் 31-ம் தேதி வரை பெங்களூரில் நடைபெறும் தேசிய மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்வு செய்யப்படும் 2 சிறந்த ஆய்வுக் குழுக்கள் ஜனவரி முதல் வாரத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்படும் தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டில் (Indian Science Congress) பங்கேற்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

“தமிழ்நாட்டில் இந்த மாநாட்டு நிகழ்வுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைந்து நடத்தி வருகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேலும் விவரங்களைப் பெற 94442 47658 என்ற செல்போன் எண்ணில் தன்னை தொடர்பு கொள்ளலாம்” என மாநாட்டுப் பணிகளுக்கான தேசிய ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சி.ராமலிங்கம் தெரிவிக்கிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive