வேதாரண்யம் அருகே உள்ளது ராமகோவிந்தன் காடு
கிராமத்தில் 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளிக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளது. போதிய மாணவர்கள் இல்லாமை யால்
இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த கல்வி யாண்டில் அய்ந்தாம் வகுப்பில்
மூன்று மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவனும் படித்தனராம். 5ஆம்
வகுப்பில் படித்த மூன்று மாணவர்கள் 6ஆம் வகுப்புப் படிக்க வேறு பள்ளிக்குச்
சென்று விட்டனர். மூன்றாம் வகுப்புப் படித்த ஒரு மாணவனும் வேறு
பள்ளிக்குச் சென்று விட்டான்.
இதன் காரணமாக அந்தப் பள்ளி இழுத்து மூடப் பட்டு
விட்டதாம்; இது மட்டுமல்ல மேலும் 500 பள்ளிகளில் வெறும் அய்ந்து மாணவர்கள்
மட்டும் படிப்பதால் அவற்றையும் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
இதுபற்றி இந்து ஏட்டில் (23.6.2014) வெளி வந்துள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து மிக முக்கியமானதே!
ஒவ்வொரு பள்ளியின் பின்னணியிலும் எத்தனை எத்தனை
மனுக்கள், எத்தனை எத்தனைப் போராட்டங்கள்? சாலையில் நடக்கும் சக மனிதனின்
கால் தடம், தன் காலில் பட்டால் தீட்டு என்று சொல்லி, அவன், தன் இடுப்பில்
துடைப்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, தன் காலடிச் சுவடுகளைப் பின்புறமாகக்
கூட்டிய படியே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டி ருந்த சமுதாயம் இது.
சாலையில் எச்சிலைத் துப்பி விட்டால் தீட்டாகி
விடும் என்று கழுத்தில் மண் கலயத்தைக் கட்டிக் கொண்டு தான் நடக்க வேண்டும்
என்று சக மனிதனுக்கு ஆணையிட்ட சமுதாயம் இது.
இப்படிப்பட்ட சமூகச் சூழலில், எல்லாப்
பாகுபாடுகளையும் கடந்து, எல்லோர் வீட்டுப் பிள்ளைகளும் சரிசமமாக
உட்கார்வதும், படிப்பதும், சாப்பிடுவதும், உரையாடுவதும், உறவாடுவதும்
எத்தனைத் தலை முறைகளின் நூற்றாண்டுத் தவம்? இந்தியாவில் எந்த அமைப்பாலும்
உருவாக்க முடியாத சமூக நீதி அமைப்பு அரசுப் பள்ளியில் சாத்தியமானது.
அந்த அமைப்புகளைத் தான் இன்றைக்கு ஒவ்வொன்
றாகக் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்று இந்து ஏடே எழுதுகிறது
என்றால் அது என்ன சாதாரணமானதா?
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள்
என்றால் படு மட்டம் என்றும், தனியார் பள்ளிகள்தான் தரம் உள்ளவை என்றும்
நினைக்கும் மனப்பான்மை மக்கள் மத்தியில் நிலவுவதே இதற்குக் காரணமாகும்.
ஊராட்சிப் பள்ளிகளும், நகராட்சிப் பள்ளிகளும்,
மாநகராட்சிப் பள்ளிகளும், சூத்திரத்தன்மை உடையது போலவும், தனியார் கல்வி
நிறுவனங்கள் பிராமணத் தன்மை கொண்டது. போலவும் கருதும் மனப்பான்மை
வளர்ந்துள்ளதே – இந்த நிலைக்குக் காரணம் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
தனியார் பள்ளிகள் தரம் உள்ளவை என்றும்
அரசுக்குச் சொந்தமானவை தரமற்றவை என்றும், பொது மக்கள் கருதுவதற்கான காரணம்
என்ன என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். இதற்காகக் கல்வியாளர்கள், பொது
மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைத்து அரசு ஆராய்ந்து அதன் அடிப்
படையில் குறைகளைத் தவிர்க்க முன் வர வேண்டும்.
இவ்வளவுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில்
பணம் கொடுத்துப் படிக்க வேண்டும்; ஊராட்சி, நகராட்சிப் பள்ளிகளிலோ அந்த
நிலை இல்லை; இருந்தும் பணம் கட்டி தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள்
பிள்ளைகளைப் பெற்றோர்கள் சேர்ப்பதற்கான காரணம் கண்டிப்பாக கண்டறிப்பட
வேண்டிய ஒன்றே.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பள்ளிகளுக்கு மூடு விழா செய்வதை அனுமதிக்க முடியாது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பில்
படித்துக் கொண்டிருந்த மாணவன் இராமநாதபுரத்தில் ஆடு, மாடு மேய்க்க
கொத்தடிமையாக ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டுள்ளான் என்ற சேதி விலாவில்
வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஏனிந்த நிலை?
(1937 மற்றும் 1952) பள்ளிகள் இழுத்து மூடப் பட்டன என்றால் 2014லும் அந்த நிலை ஏற்படுவது ஏன்?
கல்விப் பிரச்சினையில் அலட்சியம் காட்டினால் அதனை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் ஏற்காது – ஏற்கவே ஏற்காது.
ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, தங்களிடம்
ஒப்படைக்கப்பட் டுள்ள பிள்ளைகளை கல்வியிலும், ஒழுக்கத்திலும் நல்ல முறையில்
வார்த்தெடுக்கச் செய்வதை முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இப்பள்ளிகள் மூடப்படுவதற்கு
ஆசிரியப் பெருமக் களும் ஒரு வகையில் காரணம் என்ற பழியை ஏற்கும் படி
நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...