சிறப்பு விதிகளில் இடம் பெறாத ஒரே காரணத்தால்,
தகுதியிருந்தும், பதவி உயர்வு பெற முடியாமல் ஐ.டி.ஐ., ஊழியர்கள்
தவிக்கின்றனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ்,
மாணவர்களுக்கு தொழிற்கல்வி தரும் பணியில், 72 ஐ.டி.ஐ.,க்கள்
செயல்படுகின்றன. அங்கு, பல துறைகளிலும், டிப்ளமோ முடித்தோர், இளநிலை
பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி அலுவலர்களாக
பணிபுரிகின்றனர்.
இருப்பினும், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,
சிவில் ஆகிய பிரிவுகளில், டிப்ளமோ பட்டம் பெற்றோர் மட்டுமே, பயிற்சி
அலுவலர், முதல்வர் பதவி உயர்வுக்கு தகுதியானோர் என, சிறப்பு விதி உள்ளது.
ஐ.டி.ஐ.,க்களில் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவுகளில், பயிற்சி
அளிப்பவர்களாக, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி, கம்ப்யூட்டர்
டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில், டிப்ளமோ பெற்றவர்களும் பணிபுரிகின்றனர்.
இந்த பிரிவுகளை, பதவி உயர்வு சிறப்பு விதிகளில்
சேர்க்காததால், அப்பிரிவுகளில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு வழங்குவதில்
முரண்பாடு நீடிக்கிறது. தகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியவில்லை.
தற்போது, 30 ஐ.டி.ஐ.,க் களில், முதல்வர்
பணியிடங்களும், மற்ற பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களும்
நிரப்பப்படாமல் உள்ளன. இதில், பயிற்சி அலுவலர்களாக உள்ள ஏழு பேர், முதல்வர்
பதவிக்கான தகுதி பெற்று இருந்தும், சிறப்பு விதியில் இடம் பெறாத
பிரிவுகளில் இருப்பதால் தவிக்கின்றனர்.
இதுகுறித்து ஐ.டி.ஐ., ஊழியர்கள் தரப்பில்
கூறியதாவது: சிறப்பு விதிகளில், பிரின்டிங் டெக்னாலஜி சேர்க்கப்பட்ட
நிலையில், மற்ற பிரிவுகளை சேர்க்க மறுத்து விட்டனர். சிறப்பு விதிகளில்
இடம் பெறாததால், எங்களை விட குறைந்த அனுபவம் கொண்டவர்கள், பதவி உயர்வு
பெறுகின்றனர். நாங்கள் பின் தள்ளப்படுகிறோம். சிறப்பு விதிகளில் உடனடியாக
திருத்தம் கொண்டு வர வேண்டும். பதவி உயர்வு அளிக்கும் போது, அனைத்து
பிரிவினருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...