குடிதண்ணீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை
தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக்
கொண்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை, ஜூன் மாதத்தில், எதிர்பார்த்த அளவுக்கு
பெய்யவில்லை. வழக்கத்தை விட, 42 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. 113
ஆண்டுகளில், 12வது முறையாக, வழக்கத்தை விட, மழை குறைவாக
பெய்துள்ளது.அதேநேரத்தில், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், 80
சதவீதம், மழை குறைவாக பெய்துள்ளது. எனவே, நாட்டின் பல பகுதிகளில், கடும்
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.அதனால், வறட்சி
நிலவரங்களை சமாளிக்கும் வகையில், குடிநீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம்
ஒன்றை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக்
கொண்டு உள்ளது.
இது தொடர்பாக, மத்திய குடிநீர் வழங்கல் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலங்களில், குடிநீர் சப்ளை நிலைமையை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து
வருகிறது. அதனால், ஒவ்வொரு மாநில அரசும், குடிநீர் சப்ளைக்கான அவசரகால
திட்டம் ஒன்றை, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தயார் செய்து, மத்திய
குடிநீர் வழங்கல் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய
வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் மூலம், அந்த அவசரகால திட்டங்களை
பொதுமக்கள் பார்வையிட முடியும். அத்துடன், குடிநீர் சப்ளைக்கு, அதிக
முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளை, மத்திய அரசு
வலியுறுத்தி உள்ளது.கிராமங்களில், பொதுமக்களுக்கான குடிநீர்சப்ளையில், 90
சதவீதம், நிலத்தடி நீர் மூலமே சமாளிக்கப்படுகிறது. நிலத்தடி நீரை அதிக
அளவில் பயன்படுத்தும் உலக நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அத்துடன், நம் நாட்டில், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு, மத்திய அமைச்சக அதிகாரி கூறினார்.
டில்லியில் இருப்பது போல, தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க,
மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான இடத்தை தேர்வு செய்து தரும்படி, தமிழக
அரசை கேட்டுக் கொண்டது. அதற்கு, தமிழக அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை;
இழுத்தடித்து வருகிறது.அதுபோல, குடிநீர் சப்ளை தொடர்பான, இந்த அவசரகால
திட்டத்தையும் தமிழக அரசு இழுத்தடிக்குமா அல்லது நிறைவேற்றுமா என்ற
சந்தேகம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெய்யுமா தென்மேற்கு பருவமழை?
பருவமழை நிலவரம் குறித்து, டில்லி வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள்
கூறியதாவது: தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் சரியாக இல்லை. அந்தப்
பற்றாக்குறையை, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யப் போகும் மழை, ஈடுகட்டுமா
என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.நாட்டின் பெரும் பகுதிக்கு, மழை
தரக்கூடிய, தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு மிகவும் பலவீனமாகவே உள்ளது.
கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மட்டுமே, சராசரி மழை
பெய்துள்ளது. இருப்பினும், இம்மாதம் முதல் வாரத்தில், ஓரளவுக்கு மழை
தீவிரமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அரபிக்கடலில் காணப்படும் காற்றழுத்த
தாழ்வு நிலை தீவிரமடைந்து வருகிறது. இது, வரும் நாட்களில், நல்ல மழையைக்
கொடுக்கலாம்.தலைநகர் டில்லி உட்பட, நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு
பகுதிகளில், ஜூலை, 5ம் தேதிக்கு மேல், ஓரளவு மழை பொழிவு இருக்கும். ஒடிசா
மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு,
வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.953 கோடியில் 39 குடிநீர் திட்டங்கள்
தமிழகத்தில், 39 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன.
இவற்றில், ஒன்பது திட்டங்கள், 30.76 கோடி ரூபாயில், நடப்பு நிதி ஆண்டில்
முடிவடைகின்றன. 922.79 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 திட்டங்கள் பல்வேறு
நிலைகளில் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் முடியும் திட்டங்கள்
*மேலமையூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்
*சுமைதாங்கி கூட்டுக் குடிநீர்த் திட்டம் - வேலூர் மாவட்டம்
*மணமங்கலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - கரூர் மாவட்டம்
*திருப்பாய்துறை கூட்டுக் குடிநீர்த் திட்டம் - திருச்சி மாவட்டம்
*சித்தாமூர், படவேடு கூட்டுக் குடிநீர்த் திட்டம் - திருவண்ணாமலை மாவட்டம்
*கொரக்கை கூட்டுக் குடிநீர்த் திட்டம் - கடலூர் மாவட்டம்
*தெக்கம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் - கோவை மாவட்டம்.
பல்வேறு நிலைகளில் உள்ள திட்டங்கள்:
*மண்ணூர் - பாளையங்கோட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம் - நெல்லை மாவட்டம்
*ஆலங்குளம் - சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - நெல்லை மாவட்டம்
*கடையம் - கீழப்பாவூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - நெல்லை மாவட்டம்
*கருங்குளம் - ஸ்ரீவைகுண்டம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம்
*கோவில்பட்டி - கயத்தாறு - ஒட்டப்பிடாரம் - விளாத்திகுளம் கூட்டுக் குடிநீர் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம்
*வெள்ளகோவில் - காங்கேயம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள்
*பெருந்துறை - சென்னிமலை கூட்டுக் குடிநீர்த் திட்டம் - ஈரோடு மாவட்டம்
*எடப்பாடி - கொங்கனாபுரம் - மகுடஞ்சாவடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்- சேலம் மாவட்டம்
இத்திட்டங்கள் உட்பட, 30 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...