அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை
அதிகப்படுத்துவதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த,
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1,090
ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306
மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை
அதிகப்படுத்துவது வழக்கம்.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, அரையாண்டு
தேர்வுக்கு பிறகு, பாடவாரியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே சிறப்பு
கவனம் செலுத்தப்படும். இருப்பினும் தற்போது, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை
படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வின்போது மட்டுமே, சிறப்பு வகுப்புகள்
நடத்துவதால், மாணவர்களுக்கான பணிச்சுமை, நேரத்திட்டமிடலில் தடுமாற்றம்
ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில்
இருந்தே, ஆறு முதல் பிளஸ் 2 வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு மாலை
நேர வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில்,
"கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, முதல் பருவத்தேர்வு முடிந்ததும்,
சிறப்பு கவனம் செலுத்துவது வழக்கம். தற்போது அனைத்து மாணவர்களுக்கும், மாலை
நேர சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறப்பட்டுள்ளது. இதுசார்ந்த,
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. தகவல் வந்ததும், பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்து, சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவிடப்படும்"
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...