தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்கள்
சேர்க்கையில்லாமல் மூடப்பட்டு வரும் நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில்
உள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்து
வருகிறது. கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து
வருவதால் பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருகிறது. சில அரசு பள்ளிகளில்
மாணவர்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள அவலத்தையும் காண
முடிகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க,
நிலக்கோட்டை ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி தொடர்ந்து ஐந்து
ஆண்டுகளாக அதிகமான மாணவர்களை சேர்த்து ஒன்றிய அளவில் சாதனை படைத்து
வருகிறது.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 314
மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியைச் சுற்றி ஒரு கி.மீ., சுற்றளவில்
மூன்று தனியார் பள்ளிகள் உள்ளன. இருந்தபோதிலும், முதல் வகுப்பில் இந்த
ஆண்டில் 66 மாணவர்களும், மற்ற வகுப்புகளில் 13 பேரும் சேர்ந்துள்ளனர். இன்னும் மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்கள் வந்து செல்கின்றனர். 11 ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
நிலக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளபட்டி,
அம்மையநாயக்கனூர், என். புதுப்பட்டி பள்ளிகள் அதிகமான அளவில் மாணவர்களை
சேர்த்து மூன்று இடங்களில் உள்ளன. தொடர் சாதனை குறித்து பள்ளபட்டி அரசு பள்ளி
பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் ராஜா கூறுகையில்,"" 1 முதல் 3 வகுப்புகள்
வரை தமிழ், ஆங்கில வழியில் பாடம் கற்பிப்பதாலும், திறமையான ஆசிரியர்கள்
உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான
பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வியே விரும்பினாலும், அவர்களுக்கு தமிழ் வழியைப்
பற்றி எடுத்துக் கூறி சேர்க்கையை அதிகரித்து வருகிறோம். அடுத்த கல்வி
ஆண்டில் மேலும் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும்'' என்றார். தலைமை
ஆசிரியர் மலைச்சாமி கூறுகையில்,""பெற்றோர்கள் நல்ல ஒத்துழைப்பு
கொடுக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள்
இருக்கின்றனர். எங்களது பள்ளியின் கல்விப் புரவலர்கள் டாக்டர் செல்வராஜ்,
இயற்கை விஞ்ஞானி அழகர்சாமி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு சீருடை
வழங்குகின்றனர். அதிகாரிகள் ஒத்துழைப்பும் உள்ளதால் பிற பள்ளிகளோடு நாங்கள்
போட்டி போடுவது சுலபமாக உள்ளது'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...