சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா நடத்த
மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு
ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர்
ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மத்திய மனிதவள
அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளி கல்வி துறையின் செயலாளர், அனைத்து மாநில
தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய பாடத்திட்டத்தின்
(சிபிஎஸ்இ) கீழ் இயங்கும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, தேசிய கல்வி
ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை
சமஸ்கிருத மொழி வார விழாவை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும்,
மாவட்டம், மாநில அளவில் இந்த விழாவை கொண்டாட வேண்டுமென்றும் மாநில
அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு சிறந்த கலாசார
பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு. மேலும், சமூக நீதி மற்றும் மொழி
இயக்கங்கள் அதிகளவில் உள்ள மாநிலம். எனவே, தமிழகத்தில் சமஸ்கிருத வார
விழாவை நடத்துவது என்பது முறையற்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு
பாரம்பரியமும், கலாசாரமும் கொண்ட பிராந்திய மொழியின் பெயரில்தான் வார விழா
கொண்டாடப்பட வேண்டும். எனவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதேபோல் பாரம்பரிய
மொழி வார விழா கொண்டாடும் வகையில், மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை தனது
உத்தரவை மாற்றி அறிவிக்க வேண்டும். பல்வேறு இன, மொழி கலாசாரங்களை கொண்ட
நாட்டில் அப்படி உத்தரவு பிறப்பிப்பதே சரியாக அமையும். இவ்வாறு ஜெயலலிதா
கடிதத்தில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...