எல்-நினோ என்றழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தால் இந்த ஆண்டு
இந்தியாவின் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம்
என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் கடலின்
மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான், இந்திய வானிலை மாற்றங்களை
தீர்மானிக்கிறது. இந்த வெப்ப நிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை
வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ,
அல்லது அதிக மழை பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர
வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை
கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின்
வெப்ப அளவு அதிகரித்துள்ளது. இதற்கு புவி வெப்பம் அதிகரித்துள்ளதே காரணம்
என கூறப்படுகிறது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை ஜூன் துவங்கி, ஆகஸ்ட்
வரை நீடிக்கும். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள
நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழைப் பொழிவு இல்லை. வழக்கமாக, வட
மாநிலங்களில் ஜுன் கடைசி வாரத்தில் மழை துவங்கும். ஆனால், இந்த ஆண்டு, ஜூலை
முதல் வாரத்திற்கு இது தள்ளிப் போயுள்ளது.
ஆஸி., எச்சரிக்கை:
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான எல்-நினோவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. இந்தியாவில் பருவமழை பெய்ய வேண்டிய மாதங்களில், எல்-நினோவின்
நிலைப்பாடு அச்சமூட்டுவதாக உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு
மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'வளி மண்டலத்தில் தற்போது
ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் எல்-நினோ வழக்கத்திற்கு முன்னதாகவே
உருவாகலாம். இதனால், எல்-நினோ நீண்ட நாட்கள் இருந்து, பருவநிலையில் பெரும்
மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு மூன்று அல்லது
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், இந்தியாவின்
பருவமழை பொழிவு குறையும்,' என்று கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும்
வகையில், இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை
பொழிவு குறையும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...