அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களின் தீவிர வெறிநிலை கொண்ட வாசகன்.
அவ்வாறு கூறிக்கொள்வதில் பெருமையும் கொண்டவன். தங்களின் கட்டுரைகளை
இணையத்தில் ஒன்றுவிடாமல் படித்துவருபவன். இந்நிலையில் தங்களின் ’ஒரு
தற்கொலை’ என்ற தலைப்பில் ஜுன் 28இல் வெளியிடப்பட்ட கட்டுரையினைக் கண்டு
பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். பிறரைக் குறை கூறியபடி டீக்கடை பெஞ்சுகளில்
செய்தித்தாள் வாசிப்பவன் ஒரு கருத்தினைக் கூறினால் அது எப்படி இருக்குமோ
அவ்வாறே உங்கள் கட்டுரையும் இருந்தது.
நீங்கள் அடிக்கடி
கூறுவதுபோல் தங்களின் நேரடி அனுபவத்தினைத் தவிரப் புனைவாக ஒரு கருத்தினை
வெளியிடமாட்டீர்கள் என்ற கருத்தினை ஐயம்கொள்ள வைத்துவிட்டது.
தாங்கள் குறிப்பிட்ட பனைமரத்துப்பட்டியில்
சராசரி தேர்ச்சி விகிதம் பற்றித் தங்களுக்குத் தெரியுமா? அரசுப்பள்ளிகள்
சரிவினைச் சந்தித்துவரும் காலத்தில் அப்படி ஒரு நல்ல சதவிகிதத்தினை
அளிக்கப் பள்ளியின் ஆசிரியர்கள் வகுப்பறை நேரத்தினைத் தவிரவும் பாடுபட்டால்
ஒழிய அப்படி ஒரு தேர்ச்சி சதவிகிதத்தினை நிகழ்த்திக் காட்ட இயலாது. இந்தச்
சூழலில் படிப்பில் அக்கறையற்றும் , பிற மாணவர்களைத்தூண்டிவிட்டும்
கெடுக்கும் மாணவர்களை எந்த வகையில் கையாளமுடியும். திட்டுவதைத் தவிர வேறு
வழியில்லை. ஆனால் அது அவர்களின் முன்னேற்றத்திற்குத்தான் என்பதை அந்த
மாணவனும் சரி, பெற்றோரும் சரி, தங்களைப் போன்றோரும் சரி ,துரதிருஷ்டவசமாகப்
புரிந்துகொள்ள இயலவில்லை என்பதே உண்மை.
உங்கள் கட்டுரையில் உள்ளது போல் “…..வகுப்பு
கூடுமான வரை வராமலிருக்க, வந்தாலும் எந்தப் பாடமும் நடத்தாமலிருக்க,
முயல்பவர்கள் இந்தப் பொறுக்கிகள். அதை நியாயப்படுத்தும் இடதுசாரி
தொழிற்சங்க அரசியலுக்குக் கப்பம் கட்டிவிட்டுத் தங்கள் பக்கவாட்டு
வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள்.….” என்பதைப் படிக்கையில் உங்கள் அறியாமையே
வெளிப்படுகிறது.
காரணம் இடது,வலது, மேல், கீழ் சாரிகளெல்லாம்
தங்களின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேண்டுமானால் கோலோச்சிக் கொண்டு
இருக்கலாம். ஆனால் தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளில் அவர்களின் நடவடிக்கை என்ன
என்பது தங்களுக்கே தெரியும். இதில் எங்கிருந்து யார் யாருக்குக் கப்பம்
கட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆசிரிய குண்டர்கள் தொழிற்சங்க
ரவுடிகளிடம் மாமூல் தருவது போன்ற காட்சிகள் நடிகர் டாக்டர் இளையதளபதி
வருங்கால முதல்வர் விஜய் அவர்களின் டப்பிங் படத்தில் வருவதுபோல் உள்ளது.
மேலும் தற்போதைய கெடுபிடியான கல்வி
அதிகாரிகள்,பெட்டிஷன் போடும் சக நண்பர்கள்,மற்றும் ஊரில் உள்ள
ஆளுங்கட்சியினைச் சார்ந்த எட்டாவது பாஸும் பிறகு சமூக சேவையில் பின்னாளில்
டாக்டர் பட்டமும் பெறும் தகுதியுடைய பெற்றோர் ஆசிரியப்பெருந்தகைகள்
அவ்வாறு ஆசிரியர்களை மெத்தனமாக இருக்கவிடுவதில்லை. குறிப்பாக மேல் நிலை
வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள்.
இதைவிடக் காமெடியான கருத்து,சென்ற தலைமுறை
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இப்போது இல்லை என்று தாங்கள் கூறுவது.
அதுவும் அதற்குக் காரணமாகத் ’தகுதிக்கு வேலை கொடுக்காமல் பணத்திற்கு வேலை
தரும் கல்வித் துறையினை’ப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது,தங்களின் உச்ச
கட்ட அறியாமையினையும், மேலும் யூகமாக உள்ளூணர்வின்படி கருத்துச் சொல்வது
அனைத்தும் உண்மையாகவே இருக்கும் என்ற எண்ணத்தையுமே காட்டுகிறது.
டி.ஆர்.பி என்றழைக்கப்படும் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலமாகவே ஆசிரியர்கள் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
கவனிக்க! தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே முடிவானதாகக்
கருதப்படுகிறது. இண்டர்வியூ போர்வையில் தகுதியற்றவர்களுக்கு இடமளிக்கும்
செயல்பாடு இதில் இல்லை. மேலும் நாம் தேர்வில் எழுதிய பதில்களின் நகலும்
தரப்படுகிறது பிறகு சரியான விடைகளும் இணையத்தில் வெளிவருகிறது. இதன்
அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வேலை தரப்படுகிறது. இதில்
ஏதாவது ஐயம் இருப்பின் நீதிமன்றத்தினை அணுகலாம். எனவே இம்முறையில் முறைகேடு
இல்லை. ஒரு பைசா செலவின்றி வேலை வாங்கலாம். (நான் 2002ல் இது போன்றே
முதுகலை ஆசிரியர் தேர்வில் தாவரவியலில் முதலிடம் பெற்று ஆசிரியரானவன்-பணம்
கொடுத்து அல்ல)
தாங்கள் குறிபிட்டது போல் பணம் கொடுத்து வேலை
வாங்கலாம் என்ற நப்பாசையில் பணத்தினைப் பறிகொடுத்த பலரினை நான் அறிவேன்.
மேலும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள், புதிதாக அர்ப்பணிப்பு உணர்வுடன்
வருபவர்களைப் ’புது வெளக்கமாறு கொஞ்சநாளைக்கு நல்லாக் கூட்டும்’ என்று
நையாண்டி செய்வதை என் காதுபடக் கேட்டுள்ளேன்.
அரசுப்பள்ளிகளைப் படுமட்டமாகக் கருதும்
நீங்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிபெண்கள் அரசுப் பள்ளி
மாணவர்களாலேயே வாங்கப்படுகிறது என்ற உண்மையினை அறிவீர்களா?
பிறகு இந்த மாணவர்களை அப்படியே ஹைஜாக் செய்து
சுய நிதிப் பள்ளிகள் +2வில் மார்க் வாங்க வைத்துவிடுகிறார்கள் (அங்கேயே
10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அவ்வாறு சோபிப்பது இல்லை). ஒவ்வொரு
வருடமும் மாநில அளவில் +2வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் சிலரின்
தாயகம் அரசுப் பள்ளிதான் என்ற செய்தி நிச்சயம் தங்களுக்குப் புதுமையாகவும்
அதிர்ச்சியாகவும் இருக்கும்.
நீங்கள் கேட்கலாம் இவ்வளவு வீரப்பாகச்
செயல்படும் ஆசிரியர்கள் +2விலும் சாதித்துக் காட்டலாமே என்று.ஆனால்,அரசுப்
பள்ளிகளின் எல்லைகள் அவ்வாறு செயல்பட இடம் தருவதில்லை. உதாரணமாக +2
பாடத்தினை இரு வருடம் சுய நிதிப் பள்ளிகள் நடத்துகிறார்கள் அதாவது +1
பாடத்தினையே புறக்கணிப்பது. இதனைத் தனியார் பள்ளிகள் துணிச்சலாகச்
செய்கிறார்கள் ஆனால் அரசுப்பள்ளிகளின் விதிகள் அவ்வாறு செய்ய இடம்
தருவதில்லை. மீறி முயன்றால் சஸ்பென்ஷன், பெட்டிஷன் மற்றும் கல்வியாளர்களின்
கடும் கவலைகளுக்கு ஆளாக நேரிடும்.
ஆனால் இதனையும் மீறி ஆண்டுப் பொது தேர்வு
விடுமுறைகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் சிறப்பு வகுப்பு (டியூஷன் அல்ல)
நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் எந்தவித வசூலும் மாமூலும் வாங்காமல்
விடுமுறையினை அனுபவிக்காமல் பாடம் நடத்துகிறார்கள் (இது அனைத்து
மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. சந்தேகமிருப்பின் ஏதேனும் அரசு மேல் நிலைப்
பள்ளியினை அணுகித் தெரிந்து கொள்க). இதில் கொடுமை என்ன்வென்றால் யாருக்காக
நட்த்துகிறோமோ அந்த மாணவர்கள் அப்போது வருவதில்லை (பிறகு திட்டாமல் கொஞ்சவா
முடியும் – ஒருவேளை கோவக்கார(?!) ஜெயமோகன் அண்ணன் ஆசிரியரானால் முடியுமோ
என்னவோ).
ஆசிரியர்களின் மறைமுக அதிகாரம் பற்றிக்
கூறியுள்ளீர்கள். அதாவது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் வாக்குகளையே
மாற்றும் சர்வக்ஞராக ஆசிரியப்பெருமக்கள் திகழ்கிறார்கள் என. என்னே தங்களின்
கண்டுபிடிப்பு. எலக்ஷன் கமிஷன் தங்களிடம் விளக்கம் கேட்டால்தான் சரிவரும்
போல.
பூத்தில் வேலை செய்யும் ஆசிரியர்கள்
திருட்டுத்தனமாகக் கழ(ல)கத் தொண்டர்களை மீறி எப்படி ஓட்டுப்போடமுடியும்
என்பதை விளக்கமுடியுமா? குறைந்தபட்சம் தேர்தலில் (எலக்ட்ரானிக்) பணியாற்றிய
அனுபவம் தங்களுக்கு உண்டா? அப்படி இல்லையெனில் அந்த அனுபவம் இல்லாத
தாங்கள் எவ்வாறு கண்மூடித்தனமாகக் கருத்துக்கூற இயலும்.
தேர்தல் கமிஷன் விட்ட சவாலில் கலந்து கொள்ளாமல்
ஜகா வாங்கிய கட்சிகளாலேயே நிரூபிக்க இயலாததை தாங்கள் எப்படி
நிருபிப்பீர்கள் எனத் தெரியவில்லை.
நான் 3 எலக்ட்ரானிக்
தேர்தல்களில்,வாக்குச்சாவடி அலுவலராக இருந்தவன் என்ற முறையில் தாங்கள்
குறிப்பிடும் மோசடிகளைச் செய்ய இயலாது என அனுபவபூர்வமாக உணர்ந்தவன். ஒரே
ஒரு மோசடிக்கான வாய்ப்பு மட்டும் உள்ளது. அது வயதானவர்களை அலுவலரே
அழைத்துப் போய் அவருக்குப் பதிலாக அலுவலரே ஓட்டுப் போடுவது. ஆனால் இதைச்
செய்வதற்கு வாக்குச் சாவடி ஏஜண்டுகள் மடையர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் உலகத்தில் ஆசிரியர்களைத் தவிர வேறு
யாரும் அவ்வளவு மடையர்களாக இருப்பதில்லை. சமுதாயத்தில் அவன் ‘ வாத்தியானாக’
அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறான். தன் சொந்த மாணவர்களால் பட்டப்பெயர்
வைக்கப்பட்டு, அதுவே ஆசிரியையாக இருந்தால் அந்தப் பெயர் கெட்டவார்த்தையுடன்
சேர்க்கப்பட்டுப் பள்ளிக் கழிப்பறைகளிலெல்லாம் பறை சாற்றிக்
கொண்டிருக்கும். தண்ணியடித்து விட்டுப் பள்ளிக்கு வரும் மாணவர்களைக்
கண்டிக்கக் கூட அதிகாரமற்றவன். அப்படிக் கண்டித்தால் “ தருமபுரி அருகே
குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்த மாணவனைக் கண்டித்த ஆசிரியருக்கு அடி உதை”
என்று தினத்தந்தியில் செய்தியினைப் பார்த்திருக்கமாட்டோம். நான் பணியாற்றிய
பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 8ஆம் வகுப்பு படிக்கும் பீடி குடித்த மாணவனைக்
கண்டித்து அனுப்பிய அடுத்தநாள் அவனின் அம்மா பிரேயர் நடக்கும்போது கெட்ட
வார்த்தைகளால் அர்ச்சித்தது நினைவில் உள்ளது. மேலும் அவள் தன்
கையைப்பிடித்து இழுத்த்தாக ஆசிரியரை மிரட்டியதையும்
மறக்கமுடியாதது.(தேவையெனில் இதை ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்)
ஏன் என் சொந்த அனுபவத்தில் 2002ல் நான்
பணியாற்றிய பள்ளியில் நான் தினமும் 8.30 மணிக்கு மாணவர்களை வரச்சொல்லித்
தேர்வு எழுத வைத்த ஒரே காரணத்திற்காக ஒரு மாணவன் நான் அவனின் ஜாதிப்
பெயரைச் சொல்லித் திட்டியதாக அபாண்டமாகப் பழிகூறினான், காலனியிலிருந்து ஒரு
கூட்டத்தினையே கூட்டி வந்தான். நல்ல வேளை அதே பள்ளியில் இருந்த என்
அன்பிற்குரிய தமிழய்யா (அதே காலனியில் வசிப்பவர்) அவர்களும் பிற
மாணவர்களும் என் இயல்பினைக் கூறிக் கூட்டத்தினை விரட்டி அடித்தனர்.(பிறகு
அதே மாணவனுக்குப் பிராக்டிகலில் 50க்கு 50 போட்டபோது அவன் என் காலில்
விழுந்தது தனிக்கதை). ஆனால் இச்சம்பவம் ஒரு வித அச்சத்தினையும் பாடம்
நடத்துவதற்கே வெறுப்பினையும் ஏற்படுத்தியது. தமிழய்யா மட்டும் அன்று இல்லை
என்றால் என் பெயர் தினத்தந்தியில் அன்றே நாறியிருக்கும். இதில் கொடுமை
என்னவென்றால் அந்த மாணவன் கூட்டி வந்த கூட்டத்தில் பாதிப்பேர் அதற்கு
முந்தைய ஆண்டுகளில் என்னிடம் படித்த மாணவர்கள். இதுதான் ஓர் உண்மையான
ஆசிரியனுக்கு இறுதியில் கிடைக்கும் பரிசு என அன்று தெளிந்து நொந்து
கொண்டேன். பொதுமக்களிடையே இப்போதும் சரி கடந்த காலத்திலும் சரி ஏன்
மன்னர்கள் காலத்தில்கூட மரியாதை கிடைத்ததில்லை. அதனால் நீங்கள் இதைவிட
மகாகேவலமாக எழுதினாலும் எதிர்க்கத் தெம்பும்,திராணியும் அற்றவர்கள்தான்
ஆசிரியர்கள்.
தனியார் பள்ளியையும் அரசுப்பள்ளியையும் என்றைக்குமே ஒன்றாகவைத்து ஒப்பீட்டு ஆய்வு செய்யமுடியாது. காரணம்,
1. 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புப்
பாடத்தினை இரு வருடம் தனியார் பள்ளிகள் நடத்தலாம். ஆனால் அரசுப்பள்ளிகளால்
அது முடியவே முடியாது (அரசுப் பள்ளியில் பாடமே நட்த்துறது இல்லை,இதுல எங்க 2
வருசப் பாடம் எனத் தாங்கள் நக்கலடிக்கலாம்)
2. தனியார் பள்ளிகள் பாடத்தினை
விளக்குவதில்லை.பதிலாக அதனை வரிவரியாக ( தங்கள் மகன் தங்களிடம்
குறிப்பிட்டது போல்) மாணவர்களின் மனதில் பதியவைக்கவும் அவ்வாறு
பதியவைத்ததைத் தாளுக்கு மாற்றும் வித்தையினையும் கற்றுத் தருகின்றனர்.
அரசுப் பள்ளிகள் அவ்வாறு நினைத்த நேரத்தில் தேர்வுகள் வைக்கமுடியாது.
ஏனெனில் கற்றல்- கற்பித்தலுக்கு மட்டுமே பாடவேளைகளை பயன்படுத்த வேண்டும்
என்ற அரசின் விதி. இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,காலை 8.30 மணிக்கு
மாணவர்களை வரவழைத்துத் தேர்வினை நடத்துகின்றனர் இதே போன்று மாலை பள்ளி
முடிந்தவுடன் 10, 12 வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள்
நடத்தப்பட்டு வருகின்றன. நான் கூறுவது எங்கள் பகுதிக்கு மட்டுமன்று.
தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.
இது புருடா அல்ல. தாங்களே நேரடியாகத் தங்கள்
பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாலை வேளைகளில் சென்று இதனை
உறுதிப்படுத்தலாம். அப்படி வகுப்பு நடைபெறவில்லை எனில் முதன்மைக் கல்வி
அலுவலரைத் தொடர்பும் கொள்ளலாம்.
3. தனியார் பள்ளிகளின் வேலை நேரம் 24மனி
நேரம்.ஆனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைக் காலை 9 முதல் மாலை 5 மணி வரை
மட்டுமே கட்டுப்படுத்த இயலும். மாலையில் படிக்கவைப்பது பெற்றோரின் கடமை.
ஆனால் தேர்வு நேரத்தில் 10,12 ஆம் வகுப்பு
மாணவர்களை அரசுப் பள்ளிகள் சிலவற்றில் தங்கவைத்து பெ.ஆ.கழகத்தின் உதவியுடன்
மாலைச் சிற்றுண்டி ,இரவு உணவு ஆகியவற்றினை அளித்து ஒரு ஆசிரியரின்
மேற்பார்வையுடன் ( அதற்கு அவருக்கு ஏதும் பணம் அளிப்பது இல்லை. முற்றிலும்
சேவை நோக்கம் மட்டுமே) மாணவர்கள் படிக்கவைக்கப்படுகின்றனர். எதிர்வரும்
பிப்ரவரி, மே மாதங்களில் நாமக்கல் வாருங்கள்.நானே அழைத்துச் சென்று
காண்பிக்கின்றேன்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை எளிதாகக்
கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பு,அரசிடம் உள்ளது ( தாங்கள் தவறாகக்
குறிப்பிடுவது போல் தனியார் பள்ளி ஆசிரியர்களைத்தான் கட்டுப்படுத்த இயலாது.
திறமையான மேல் நிலைத் தனியார் ஆசிரியர் மாதம் 50 ஆயிரம் சம்பாதிப்பது
மட்டுமன்றி ஒரு பள்ளி பிடிக்கவில்லை என்றால் எளிதாக அடுத்த பள்ளிக்கு
மாறலாம். 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது ஏதேனும் தவறு அவர்களால்
நேர்ந்தால் கூட அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இதே அரசுப் பள்ளி ஆசிரியர்
என்றால் தண்டனைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்) இதை மீறி எந்த
ஆசிரியரும் நடந்து கொள்ளமுடியாது என்பதே உண்மை.
பிரச்சனை,நமது கல்வியமைப்பில் உள்ளது.
தன்னம்பிக்கையினையும் இலட்சியத்தினையும் வலியுறுத்தாத கல்வியால்தான்
இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்கின்றன. இறந்த மாணவன் எதிர்பார்க்கும்
கல்வியினைத் தற்போதைய சூழலில் நம்மால் தர இயலாது. இதற்கு ஆசிரியர்கள் என்ன
செய்ய இயலும். ( ஆனால் தற்போது பெரும்பான்மையான பள்ளிகளில் இது போன்ற
மாணவர்களை ஒன்றும் சொல்வதும் இல்லை. அவர்களைப் படிக்கச் செய்வது,
ரெக்கார்ட் வரையச் சொல்வது போன்ற எந்தப் பணியினையும் ஆசிரியர்கள்
தருவதில்லை – நமக்கேன் வம்பு என இருந்து விடுகிறார்கள் – அந்த மாணவனை
ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள் – அவன் இஷ்டம் போல் பள்ளி வந்து செல்லலாம் _
இதைச் சொல்வதற்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது – என்ன செய்வது
காலம் அப்படி உள்ளது – எந்த ஆசிரியன்,களி தின்பதற்கும் பேப்பரில்
குடும்பத்துடன் அவமானப்படவும் விரும்புவான் – மேலும் முன் ஜாமீன் போன்ற
சமாச்சாரங்கள் அவன் கேள்விப்படாதவை). ஒரு பிரச்சினை என வரும் போது
சம்பந்தப்பட்ட ஆசிரியனுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. ஒன்றாகப்
பணியாற்றும் ஆசிரியர்கூடக் கண்டுகொள்வதில்லை. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின்
சங்கம் தவிர்த்துப் பிற ஆசிரியர்களுக்கான சங்கங்கள் பெரிதாக ஒன்றும்
சாதிக்க இயலாத ஒற்றுமையின்மையே இங்கு நிலவுகிறது. பிறகு எங்கு தாங்கள்
தொழிற்சங்கம் போன்ற ஒற்றுமையைக் கண்டீர்கள் என தெரியவில்லை. இவ்வளவு
ஏன்?ஒரு மாணவன் இறந்தால் அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மந்திரிகள்,
மீடியா எனப் புடைசூழ வருபவர்கள் – 50 ஆண்டுகள் பணியாற்றிய ஓர் ஆசிரியன்
இறக்கும்போது ஒரு நாய்கூட வருவதில்லை என்ற வேதனையான உண்மையினை உணர்வீர்களா?
மேலும் தாங்கள் சிலாகிக்கும் தனியார்
பள்ளிகளில் ஓவ்வொரு ஆண்டும் வெளியில் தெரியாமல் எத்தனை தற்கொலைகள்
நடக்கின்றன என விசாரித்துப் பாருங்கள். நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்.
மிகத் திறமையாகப் படிக்கும் இயல்புடைய அந்த மாணவர்களே தற்கொலை செய்து
கொள்கிறார்கள் என்றால் – அரசுப் பள்ளியின் நிலையினை என்னவென்பது?
இறுதியாக எதையும் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல்
ஆதாரத்துடன் எழுதுமாறு தங்களை வேண்டுகிறேன். குறிப்பாக ஆசிரியர்களைப்
பற்றித் தவறாகப் படத்தில்கூடச் சித்தரிக்கக் கூடாது எனும் சில நாட்டினரின்
சிந்தனைப் பின்னணி பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதில் எக்காரணம்
கொண்டும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் ஆசிரியரைப் பற்றி துளி அளவு
கூட தவறான எண்ணம் ஏற்படக்கூடாது என்ற அக்கறையினை உணர்வீர்கள்.
ஆசிரியர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு
நல்லவர்கள் என வாதிடுவது என் நோக்கமல்ல. புல்லுருவிகள் எங்கும்
இருப்பவர்கள். யானை வாழும் காட்டில்தான் எறும்புகளும் வாழ்கின்றன. அவை
கண்னுக்குத் தெரிவதில்லை. அறம் எழுதியவருக்கு நான் என்ன புதிதாகக் கூற
முடியும்?
நீண்ட கடிதமாக அமைந்துவிட்டதற்குப் பொறுத்தருள
வேண்டுகிறேன். தங்கள் மேல் கொண்ட அன்பினால் மட்டுமே நான் இவ்வளவு பெரிய
கடிதம் எழுத நேர்ந்தது. வெறுப்பால் அல்ல. தங்களின் விலைமதிப்பற்ற நேரம்
வீணாகி இருக்காது என நம்புகிறேன்.
மிகுந்த அன்புடன்
ந.மகேஷ்குமார்
நாமக்கல்
அன்புள்ள மகேஷ் குமார்,
நன்றி.அக்கட்டுரை ஓர் எதிர்வினை. அந்தத்
தற்கொலையில் இருந்த கற்பனைக்கெட்டாத கையறுநிலை, அந்த நிலைக்கு ஆதரவாக ஒரு
துரும்பைக்கூட எடுத்துப்போட முடியாத நம்முடைய அரசும் கல்வித்துறையும்,
அதற்கு எதிராக வெறும் அரசியலாக மட்டுமே அதைக் கண்டு ஆற்றப்பட்ட ஓர்
எதிர்வினை ஆகியவை இணைந்து அந்த ஆழமான மனக்கசப்பையும் கொந்தளிப்பையும்
உருவாக்கின.
கீழ்க்கண்ட பதிவை நான் 2003 ல் மரத்தடி இணையதளத்தில் ஒரு கேள்விக்குப் பதிலாக அளித்திருந்தேன்.
பள்ளிநாள்களிலேயே என்னை மிகவும் தூண்டிய
முன்னுதாரண ஆசிரியர்கள் பலர் உண்டு. ஓய்வுபெற்றுவிட்ட சத்தியநேசன்
அவர்களைச் சமீபத்தில் தெருவில் பார்த்தேன். ஆற்றூர் ரவிவர்மா ஆசிரியர்தான்.
அத்தொழிலில் உள்ள மோகம் காரணமாக இந்தத் தள்ளாத வயதிலும் அவர்
தனியார்பள்ளிக்குக் கற்பிக்கச் செல்கிறார். அவரது மாணவர்கள் கேரள இலக்கிய
இதழியல் துறைகளில் சாதனை செய்தனர். அவர்கள் நினைவில் அவர் அப்பழுக்கற்ற ஒரு
பேராசான். எம்.வேதசகாயகுமார் ஓர் ஆசிரியராக எடுத்துக் கொள்ளும்
சிரத்தையும் உழைப்பும் பலசமயம் என்னைப் பிரமிக்கவைத்துள்ளன.
என் மாமனார் [அருண்மொழிநங்கையின் அப்பா]
எஸ்.சற்குணம் அவர்கள் ஆசிரியராக நாற்பதுவருடம் முற்றிலும் அர்ப்பண
உணர்வுடன் பணியாற்றியவர். தனிவாழ்க்கையிலும் திராவிட இயக்கப் பிடிப்புள்ள
பொதுப்போராளியாக முன்னுதாரணமாக இருந்தவர். தன் குடும்பத்தில் உள்ள அத்தனை
எளியவர்களுக்கும் நிழல் அவர். கடற்கரையோர ஆரம்பப் பள்ளி ஆசிரியயையாக இருந்த
அருண்மொழியின் அம்மா தினம் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்து பைநிறைய
பூப்பறித்துக் கொண்டுசெல்லும் காட்சி என் மனதில் நிற்கிறது. என் நண்பரும்
இலக்கிய வாசகருமான தங்கமணி [மொரப்பூர்] தன் பள்ளிக்கு ஆற்றும்
உழைப்புக்கும் மாணவர்கள்மீது கொண்டுள்ள பற்றுக்கும் சமானமாக அதிகமான
விஷயங்களைச் சொல்லிவிட இயலாது. நான் பட்டியலைப் போட்டுக் கொண்டே
போகமுடியும்
ஆசிரியர்களில் மகத்தான மனிதர்கள் இன்றும்
ஏராளமாக உள்ளனர். அருண்மொழியின் சக ஊழியையான மீனா என்பவரின் கணவரான
ஆசிரியரைச் சென்றவாரம் இரவு எட்டுமணிக்குப் பேருந்தில் பார்த்தேன். ஏன்
இவ்வளவு நேரமாயிற்று என்றேன். வேலைபார்ப்பது மிகச்சிறிய கிராமத்தில். அங்கே
பையன்களுக்குக் கணக்கும் ஆங்கிலமும் ஏறவே ஏறாது, பத்தாவது தேர்வு
வருகிறதல்லவா, ஆகவே நாங்கள் மூன்றுபேர் உபரிவகுப்பு நடத்துகிறோம் என்றார்.
பணம் தருவார்களா என்றேன். நல்ல கதை, கைக்காசுப்போட்டு டீ
வாங்கித்தரவேண்டும், அவ்வளவு ஏழைப் பையன்கள் என்றார். காட்டுக்கத்தலாகக்
கத்திப் பிரம்பால் விளாசி, டென்ஷன் ஏறி ராத்திரி தலைவலி வருகிறது என்று
புலம்பினார். இன்றும் தமிழ்நாட்டில் பல அரசுப்பள்ளிகள் மிகச்சிறந்தசேவை
ஆற்றிவருகின்றன என்பதை ஒவ்வொரு தேர்வுமுடிவுகளும் காட்டுகின்றன, இந்தப்
பத்தாம்வகுப்பு முடிவுகளும். கிராமத்துப் பள்ளியில் நூறு பிற்பட்ட
மாணவர்கள் கொண்ட வகுப்பில் கத்திக் கத்தி அவர்களில் முக்கால்பங்கினரை
வெல்லவைக்கும் அந்த ஆசிரியர்களைப் போகிறபோக்கில் சீரழிந்த கும்பல் என்று
சொல்லிவிடமுடியுமா என்ன?
அந்த நம்பிக்கையில்தான் நான் என் மகனை
அரசுப்பள்ளியில் சேர்த்தேன். தனியார்பள்ளிகளின் சிறைக்கொடுமைகள் அங்கே
இருக்காது, நான் சந்தித்ததுபோல ஒருசில ஆசிரியர்களையாவது அவன் அங்கே
சந்திக்க முடியும், அவர்கள் மேல் அவன் மரியாதையும் ஈர்ப்பும் கொள்ளமுடியும்
என நினைத்தேன்.
ஆனால் 2004ல் அவனை நான்ந் ஆகர்க்கோயில்
அரசுப்பள்ளி ஒன்றில் சேர்த்தது முதல் மெல்லமெல்ல என் நம்பிக்கைகள்
சிதைந்தன. நான் கண்ட அந்த ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள்–
ஆகவே ஏதோ ஒருவகையில் இலட்சியவாத நோக்குள்ளவர்கள். அவர்கள் மிகமிக
குறைவானவர்களே. எஞ்சிய ஆகப்பெரும்பான்மைக்கு கற்பிப்பதில் மயிரிழை அளவும்
ஆர்வமில்லை. நான் மீண்டும் மீண்டும் பள்ளிக்குச் சென்று மீண்டும் மீண்டும்
வாதிட்டு தொடர்ந்து அவமானப்பட்டு கண்டுகொண்ட உண்மை இது
அன்புள்ள மகேஷ், நான் ஆய்வுக்கட்டுரை
எழுதவில்லை. அனுபவத்தைச் சொல்கிறேன். ஆகவே விவாதங்களில் நான் பதிவு
யந்திரத்தை பதுக்கி எடுத்துச்செல்லவில்லை. நான் உண்மை சொல்லவில்லை என
நீங்கள் நினைத்தால் இதை முழுமையாக தவிர்த்துவிடலாம், அவ்வளவுதான்
நீங்கள் சொன்னதுபோல ஆத்மார்த்தமாக கற்பிக்கும்
ஒரு ஆசிரியரைக்கூட என் மகன் அவனுடைய பள்ளி நாளில் சந்தித்ததில்லை.
சுப்புலட்சுமி என்ற தற்காலிக ஆசிரியரைத்தவிர. பெற்றோர் ஆசிரியர் கழக
சம்பளம் வாங்கிய அவரும் வேலை இழந்து தனியார்பள்ளிக்குச் சென்றுவிட்டார்.
என் மகனை நான் மிக மதிப்பவன். அவனுடைய அடிப்படை நியாய உணர்வை, கருணையை,
என்னைப்போலன்றி எப்போதுமே நிதானத்துடன் இருப்பதை ஆச்சரியத்துடன்
பார்ப்பவன். அவனிடம் அடிப்படை மரியாதையை ஈட்டிய ஒரே ஒரு ஆசிரியர் கூட இல்லை
என்பது அவனுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்ன்ன என்பதை எனக்கு
காட்டுகிறது. எவ்வளவு பெரிய ஒரு தனிப்பட்ட இழப்பு அது!
ஆறு வருடம் அரசுப்பள்ளிகளுக்குச் சென்றேன்.
நான் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன். அரசுப்பள்ளிகளில் விதிவிலக்காக
சிலர் தவிர எவருமே மாணவர்கள் மேல் அக்கறை கொண்டு சொல்லிக்கொடுப்பதில்லை.
எல்லாவற்றையுமே ஒப்புக்கு தான் செய்கிறார்கள். அவர்களை நம்பி எந்த
மாணவரும் தேர்வுகளைச் சந்திக்கமுடியாது. இதுவே நான் கண்ட உண்மை. நீங்கள்
சொல்வதை நான் நம்புகிறேன், ஆனால் நான் பார்த்ததெல்லாம் நேர் எதிராக.
தேதல்களில் ஆசிரியர்கள் பல மோசடிகளைச் செய்ய
முடியுமென நான் விரிவாகவே பேசமுடியும். தொழிற்சங்க சார்பில் தேர்தல்
வேலைகளில் சம்பந்தப்பட்டபோது சாதாரணமாக நானே நேரில் சென்று
கண்டிருக்கிறேன். சண்டைகள் போட்டிருக்கிறேன். மலைக்கிராமங்களிலும்
சிற்றூர்களிலும் கள்ளஓட்டு நாடகங்களுக்கு ஆசிரியர்களே முழுமுதல்
நடிகர்கள். இன்று தேர்தல் கமிஷனுக்கு அஞ்சி அவர்கள் சும்மா
இருக்கிறார்கள். அரசு ஆசிரியர் வேலைவாய்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட
சதவீதத்துக்கு வெளியே கணிசமான வாய்ப்புகள் லஞ்ச அடிபப்டையிலேயே
செய்யபப்டுகின்றன. அதையும் நானே கண்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு உயர்தர
ஓட்டலின் முகப்பில் இருக்கையில் ஏற்பாடு செய்பவர்களிடம் பேசியும்
இருக்கிறேன். உங்கள் நம்பிக்கைகள் வாழ்க.
கடைசியாக, கப்பம். தெளிவாகவே கேட்கிறேனே.
மாணவிகளிடம் செக்ஸ் வைத்துக்கொண்ட ஆசிரியர்கள் பிடிபட்டிருக்கிறார்கள்.
என்ன தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது? அதிகபட்சம் இடம் மாற்றம். ஏன்?
அதுதான் தொழிற்சங்க அரசியல். இடதுசாரிகள் இல்லாமலிருக்கலாம், வலதுசாரிகள்
இருக்கலாம். ஆனால் எவரும் எதற்காகவும் தண்டிக்கப்பட முடியாது. அதற்கு
அளிக்கப்படும் கப்பமே சந்தாப்பணம், போனஸ் முதலிய வற்றின்போது அளிக்கப்படும்
நன்கொடைகள். அதை விஜய் படங்களில் நீங்கள் பார்க்கமுடியாது.
நான் பொதுமைப்படுத்துகிறேன். ஆனால் ஒரு
நீண்டகால அனுபவத்தொடரின் விளைவான மனப்பதிவை அப்படித்தான் பொதுமைப்படுத்திச்
சொல்லமுடியும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வருந்தத்தக்கவை. ஆனால் அவை
ஏன் என சிந்தித்துப்பாருங்கள். இன்று இதே நிலை டாக்டர்களுக்கும் உள்ளது.
ஒரு பிரச்சினை என்றால் டாக்டரை அடிக்க பாய்கிறார்கள் மக்கள். ஏன்? சென்ற
தலைமுறை ஆசிரியர்கள், மருத்துவர்கள் எப்படி மதிக்கப்பட்டார்கள். இன்று என்ன
ஆயிற்று? ஒட்டுமொத்தமாக நம் மக்களுக்கு ஆசிரியர்கள் மேல் மதிப்பு இல்லை.
மருத்துவர்கள் மேல் மதிப்பு இல்லை. சோம்பெறிகள் கொள்ளையர்கள் என்ற
மனப்பதிவே உள்ளது. அந்த மனப்பதிவை உருவாக்கும் பெரும்பான்மையினரே
சிறுபான்மையினருக்கும் அவமரியாதையை தேடித்தருகிறார்கள்
மீண்டும் சொல்கிறேன். எனக்கு தெரியும், நல்ல
ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என. நல்ல மருத்துவர்கள் பலர் நெருக்கமான
நண்பர்கள். ஆனால் ஒரு தொழில்வற்கம் என்ற முறையில் இவ்விருவர் மேல் எந்த
அடிப்படை மதிப்பும் எனக்கும் இல்லை. நான் பொதுமக்களில் ஒருவன் மட்டுமே.
எதிலும் நிபுணன் அல்ல.
ஜெ
தாவரவியல் ஆசிரியருக்கு இவ்வள்வு மன அழுத்தம் வரக்கூடாதே! இவர்கள் தான் மென்மையானவர்கள்.கல்வித்துறையின் மீது இவ்வளவு கோவம் யாருக்குதான் வராது. அரசு, சுய்நிதி இரண்டும் இருகண்களாக பாவித்தால் சரியாக் இருக்கும் என்பது ஆசிரியரின் க்ருத்து. இதில் காலனி என்று எழுதுவதும், தமிழாசிரியர் அந்த ஏரியாவை சேர்ந்தவர் என்றும் பிரகடன்ம் செய்யாதீர். பள்ளிக் கடைநிலை ஊழியர் முதல் கல்விச்செயலர் வ்ரை ஆசிரியர்க்ள் என்பது ஓரினம். புல்லுருவிகள் 75% உள்ள்தும் உன்மை. நாமாதிருந்தினா நாடே திருந்தும். மேலதிகாரிகளும்
ReplyDeleteAnger slept in the depth of heart expressed greatly in this ltr to jayamohan by a hard working tchr.
ReplyDeleteதிரு.ஜெயமோகனும், பிரியங்காவும், இதுவரை இவர்களைப்போன்ற ஆசிரியர்களைத்தான் பார்த்திருக்கிறார்கள்.நல்ல ஆசிரியர்களை பார்த்தது இல்லை அல்லது பார்க்க விரும்பவில்லை என்பது புரிகிறது.அது மட்டுமல்லாமல் அரசு ஆசிரியர்கள் வேலைவாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிநியமனம் செய்யப்படுகிறது என்கிறார். அது ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும்தான் நடக்கிறதா? குருப்-1 இப்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது உங்களுக்கு தெரியாதா? உங்களுடைய கண்ணோட்டம் சரியில்லை அல்லது கண்ணே சரியில்லை. பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள். வள்ளுவன் கூறியதைப்போல எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. மெய்ப்பொருள் காண மறுத்தால், இதே எண்ணத்தில் இருந்தால் சித்த பிரமை பிடித்துவிடும்.
ReplyDeleteMr.magesh.. Our emotions are true.. But we cant say mr.jayamohan is wrong... In Tamilnadu can you say how many sons and daughters of government teachers are studying in government school..?... The total number will be in single or two digits....
ReplyDeleteSo how can we ( teachers) answer questions like them...