மதுரையில் ரோட்டோரத்தில் பொம்மை தொழில் செய்யும் ராஜஸ்தானை
சேர்ந்த குடும்பங்களின் 22 குழந்தைகளுக்கு, கல்வி கற்பிக்கும் பணி நேற்று
துவங்கியது.
சொந்த மண்ணில் வாழ வழியின்றி வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு
தேடிச்சென்று, வானமே கூரையாக ரோட்டோரம் வாழ்க்கை நடத்தும் எத்தனையோ
குடும்பங்கள், தங்களுக்கு கிடைத்த வேலையில் ஈடுபட்டு, வாழ்க்கை
நடத்துகின்றன.ஆனால், அந்த குடும்ப குழந்தைகளின் 'கல்வி கனவு' கலைந்து,
அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றன. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி
வைக்க அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் 'மாற்று வழி
மற்றும் புதுமை பள்ளி' திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.இதன்படி,
வறுமை நிலையில் ரோட்டோரத்தில் வசித்து தொழில் நடத்தும் வெளி மாநிலங்களை
சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் இருப்பிடத்திற்கு ஆசிரியர்கள்
சென்று கல்வி அளிப்பர். இத்திட்டத்திற்காக, மதுரை கிழக்கு ஒன்றியம்
சார்பில் எடுக்கப்பட்ட களஆய்வில், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே
ராஜஸ்தானை சேர்ந்த குடும்பங்கள் ரோட்டோரத்தில் வாழ்க்கை நடத்தியது
கண்டறியப்பட்டது.
களிமண்ணால் பொம்மை மற்றும் சுவாமி சிலைகள் தயாரிக்கும் தொழில் செய்யும்
இக்குடும்பங்களில், 22 பேர் பள்ளி படிப்பை நிறுத்தியிருந்தது தெரிந்தது.
அவர்கள் இருப்பிடங்களுக்கே ஆசிரியர்கள் சென்று கற்பித்தல் பணியை நேற்று
துவக்கினர். அரசு வழங்கிய புத்தகங்கள், பேக், கலர் பென்சில் உட்பட இலவச
பொருட்கள் வழங்கப்பட்டன.
இத்திட்டம் குறித்து மேற்பார்வையாளர் ஜெயந்தி கூறுகையில், "ராஜஸ்தானில்
இருந்து பிழைப்பு தேடி மதுரை வந்ததால் அவர்கள் குழந்தைகள் கல்வி தொடர
முடியாமல் போய் விட்டது. கலெக்டர் சுப்பிரமணியன், கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர் பார்வதி அனுமதியுடன் 22 குழந்தைகளை கணக்கெடுத்து தமிழ், கணிதம்,
அறிவியல் பாடங்களுடன் அவர்கள் தாய்மொழியும் கற்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காதக்கிணறு ஆர்.சி., நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் முயற்சியால்
அப்பள்ளியில் 22 பேருக்கும் 'அட்மிஷன்' தரப்பட்டது.கற்றல் பணியை மட்டும்
மாணவர்கள் இருப்பிடத்திற்கு சென்று ஆசிரியர்கள் மேற்கொள்வர். இவர்களுக்கு
வயது அடிப்படையில் வகுப்புகள் பிரிக்கப்பட்டு காலாண்டு, அரையாண்டு
தேர்வுகள் நடத்தப்படும். பாதியிலேயே வேறு மாநிலம் செல்ல நேர்ந்தால், இங்கு
படித்ததற்கான 'டிசி' அந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். எந்த மாநிலத்திற்கு
சென்றாலும், அங்கே அவர்கள் படிப்பை தொடரலாம், என்றார்.
ராஜஸ்தானை சேர்ந்த நானக்ராம் கூறுகையில், "25
ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் மதுரை வந்து பொம்மை தயாரிக்கும்
தொழிலில் ஈடுபட்டேன். குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்
என்ற கவலையில் இருந்தது. தற்போது அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு
கிடைத்துள்ளது மகிழ்ச்சி," என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...